பஹல்காம் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மீது பழிபோடும் மோடி அரசு
புதுதில்லி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வியாழக்கிழமை அன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பஹல்காம் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விட்டதை ராணுவத்திற்கு காஷ்மீர் அரசு தெரிவிக்கவில்லை. பஹல்காமில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணம் என ஒன்றிய பாஜக அரசு குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது “இந்தியா” கூட்டணி ஆளும் ஜம்மு-காஷ்மீர் அரசு பஹல்காம் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விட்டதை ராணுவத்திற்கு தெரிவிக்காததால் தான் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என எதிர்க்கட்சிகள் ஆளும் (தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், சிபிஎம்) ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மீது மோடி அரசு பழிபோட்டு தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பஹல்காம் பகுதியைப் பற்றி ஒன்றிய அரசு மற்றும் ராணுவத்திற்கு தெரியாதா? 2018 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீர் பகுதி மோடி அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது. அப்படி என்றால் கடந்த 6 ஆண்டுகளாக தங்களது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பஹல்காம் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ராணுவம் மற்றும் மோடி அரசுக்கு தெரியாதா? 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டப் பின்பு இனி ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நிகழாது ; சுற்றுலா பயணிகள் தாராளமாக அங்கு செல்லலாம் ; இடம் வாங்கி வீடு, வணிக வளாகங்கள் கட்டலாம் என அறிவித்ததே மோடி அரசு தான். அப்படி இருக்கையில் பஹல்காம் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விட்டதை ராணுவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஏன் தனியாக தெரிவிக்க வேண்டும்? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன.