நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலைமையை உடனே விவாதிக்க வேண்டும்
புதுதில்லி, ஜூலை 20 - மணிப்பூர் 80 நாட்களுக்கும் மேலாக பற்றியெரிந்து கொண்டிருக் கும் போதும், குக்கி-ஜோ பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 2 பெண்கள் கொடூர மான முறையில் கும்பல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலை யிலும், அதுதொடர்பாக பேசுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காத தால், மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளே நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் போராட்டம், அமளி காரணமாக, நாடாளுமன்றத் தின் இரு அவைகளுமே நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வியாழனன்று (ஜூலை 20) துவங்கியது. ஆகஸ்ட் 11 வரை 17 அமர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தொடரில் 32 மசோதாக் களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடரை அமைதியாகவும், ஆக்கப் பூர்வமாகவும் நடத்துவதற்கான ஆலோ சனை என்ற பெயரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை, ஒன்றிய அரசு புதனன்று மாலை தில்லியில் கூட்டியது. இதில் 30-க்கும் அதிகமான கட்சிகளைச் சேர்ந்த 44 தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின்போது மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறை, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் - துணைநிலை ஆளுநர்களின் அத்து மீறல்கள், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமை ப்புகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவா தம் நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப் போது மணிப்பூர் குறித்த பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று அரசுத் தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது. வியாழனன்று காலை நாடாளு மன்றக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே அறையில் கூடிய, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள், மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒன்றுபட்டு செயல்படுவது தொடர்பாக ஆலோசித்தனர். இரு அவைகளிலும், மணிப்பூர் வன்முறை விவகாரத்தை எழுப்பவும், வட கிழக்கு மாநில நிலைமை குறித்த விவாதத்திற்கு அரசை வலியுறுத்த வும் முடிவு செய்து, அதன்படி மக்க ளவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரிடம் நோட்டீஸ் களை வழங்கினர்.
விதி எண் 267-இன் கீழ்
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, நசீர்உசேன், மணீஷ் திவாரி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், இம்ரான் பிராதப் கிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எளமரம் கரீம், சிபிஐ தலை வர் பினோய் விஸ்வம், சிவசேனா (யுபிடி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா, பிஆர்எஸ் கட்சியின் நாம நாகேஸ்வர ராவ், மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசா துதீன் ஒவைசி என 15 கட்சிகளின் தலை வர்கள் விதி 267-இன் கீழ் ஒத்தி வைப்பு நோட்டீஸ் வழங்கினர். நாடாளுமன்றத்தின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் வன்முறை குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடியின் தனது நீண்ட மவுனத்தைக் கலைத்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள்வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தி யில், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் வியாழனன்று காலை 11 மணிக்கு துவங்கின. முதலாவதாக, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, இரு அவை களும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு 12 மணிக்கு அவைகள் கூடின. அப்போது மணிப்பூர் விவ காரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. மணிப்பூர் நிலைமை குறித்து விவா திக்கப்படும் என்று ஒன்றிய அரசு புதன்கிழமையன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்ததை சுட்டிக்காட்டி, மக்களவையில் கேள்வி எழுப்பினர். பிரதமர் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பதி லளித்தே ஆகவேண்டும் என்றும் வலி யுறுத்தினர். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை நிராகரித்த ஒன்றிய நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உள்துறை அமைச்சகம் சம்பந்தப் பட்ட விவகாரம் என்பதால் ‘பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்’ என்று அறிவித்தார். அமைச்சரின் இந்த தகவல் மக்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது.
மாநிலங்களவையில் கொந்தளிப்பு
இதேபோல மாநிலங்களவையில், மணிப்பூர் வன்முறை குறித்து உடன டியாக விசாரிக்க வேண்டும் என்று அவை விதி 176-இன் கீழ் 12 நோட்டீஸ்கள் தனக்கு வந்திருப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். ஒடிசாவில் ரயில் விபத்து மற்றும் ரயில் பாது காப்பு குறித்து விவாதிக்க மூன்று நோட்டீஸ்களும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க மூன்று நோட்டீஸ்கள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே குறுக்கிட்டு, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விதி 267-இன் கீழ் நோட்டீஸ் கொடுத்துள்ளதால், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்; குறிப்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார். “அவை விதி 267- இன் கீழ், ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தால், அவையில் அந்த தீர்மானத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட விஷயத்தை மட்டும்தான் பேச வேண்டும். அதுவரை வேறு எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது. இந்த தீர்மானத்தை எடுத்தால் அதுவரை அனைத்து அலு வல்களையும் தள்ளி வைத்துவிட்டு பேச வேண்டும். இங்கே பிரதமர் மோடி வர வேண்டும். அவர் மணிப்பூர் பற்றி பேச வேண்டும்” என்ற திரிணாமுல் எம்.பி., டெரிக் ஓ பிரையன், மோடி பேச வேண்டும் என மோடி பேச வேண் டும் மீண்டும் மீண்டும் கூறி ஆவேசமாக குரலெழுப்பினார். ஏனைய எதிர்க் கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால், எதிர்க்கட்சி களின் கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைக்காததால், மாநிலங் களவையிலும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுமே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. எனினும், பிற்பகல் 2 மணிக்குப் பின் நாடாளு மன்றம் மீண்டும் கூடியபோதும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்கவில்லை. இதனால், நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே, நாள் முழுவதும் முடங்கியது.