states

img

தண்ணீர் சேகரிப்பு பெண்களின் வேலையா? - ப.திருமலை

தண்ணீர் சேகரிப்பு பெண்களின் வேலையா?

உலக நீர் தினம் கடந்த மார்ச் 22ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இது உலகளா விய முக்கியத் தினங்களில் ஒன்று. ஒவ் வொரு ஜீவராசியும் நீரின் மகத்துவத்தை அறியும். நீரின்றி உலகு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி இந்த நாள் கொண்டா டப்படும். தண்ணீர் தினத்தின் இந்தாண்டு (2026) கருப் பொருள் “தண்ணீர் மற்றும் பாலினம்”. இந்தக் கருப்பொருள் நீர் அணுகல் மற்றும் பாலின சமத்துவத்திற்கு இடையிலான முக்கியமான தொடர்பை வலியுறுத்துகிறது. நீர் அணுகலில் நிலவும் சமத்துவமின்மை குறித்துக் கவலை கொள்கிறது.

போதுமான நீர் மற்றும் சுகாதாரச் சேவைகள் கிடைக்கா ததால் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பட்டியலிடுகிறது. நீர் தொடர்பான முடி வெடுத்தல் மற்றும் கொள்கை வடிவமைப்பு ஆகிய வற்றில் பெண்களை சமமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு உரிமை அடிப்படையிலான அணுகு முறைக்கு இந்தக் கருப்பொருள் அழைப்பு விடுக்கிறது.  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை இது ஊக்கு விக்கிறது, நிலையான வளர்ச்சி மற்றும் பாலின சமத்து வம் நிலைபெற தண்ணீர் அடிப்படை சக்தியாக இருக்கும் என்பதனை உறுதி செய்கிறது.  

உலகளாவிய நீர் நெருக்கடியானது பாதுகாப்பான தண்ணீர் இல்லாத 210 கோடிக்கும் அதிகமான மக்க ளைப் பாதிக்கிறது. சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை, கிட்டத்தட்ட 60 கோடி இந்தியர்கள் தீவிர நீர் நெருக்க டியை எதிர்கொள்கிறார்கள் என்றும், பாதுகாப்பான நீர் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 பேர் இறக்கின்றனர் என்றும் எச்சரிக்கிறது. தில்லி யில் மட்டும், 12 இடங்களில் கிரீன்பீஸ் இந்தியா நடத்திய ஆய்வில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங் கள் தங்கள் மாத வருமானத்தில் கிட்டத்தட்ட 15 சத விகிதத்தைக் குடிநீரைப் பெறுவதற்காக மட்டுமே செலவிடுகின்றன. நீரும் பெண்களும் உலகளவில், 26 சதவிகித பெண்கள் மற்றும் சிறுமி களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்கிறது யுனிசெஃப்.

53 நாடுகளில், பெண்களும் சிறுமி களும் ஒரு நாளைக்கு 25 கோடி மணிநேரம் தண்ணீர் சேகரிப்பில் செலவிடுகிறார்கள். இது ஆண்கள் மற்றும் சிறுவர்களை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஐ.நா.வின் பெண்கள் (UN-Women) அறிக்கை. உலகளவில், 5 பள்ளிகளில் 2 பள்ளிகள் மட்டுமே மாதவிடாய் மற்றும் சுகாதாரக் கல்வியை வழங்குவ தாகவும் கிராமப்புற இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தை எதிர்கொள்ளச் சானிட்டரி நாப்கின் போன்ற  பொருட்கள் மற்றும் தேவையான நீர் வசதிகள் இல்லை  என்றும் உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அறிக்கை கூறுகிறது. 20 முதல் 49 வயதுடைய பெண்களுடன் ஒப்பிடும்போது, 15 முதல் 19 வயதுடைய இளம் பருவப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் வேலை, பள்ளி மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது குறைவாக உள்ளதாகவும் உலகச் சுகா தார நிறுவனம் கூறுகிறது.

மேலும் பிறந்த குழந்தை களின் இறப்புகளில் 26 சதவிகிதமும் மற்றும் தாய் இறப்புகளில் 11 சதவிகிதமும் நீர் தொற்றுகளால் ஏற்படு வதாகவும் அது சொல்கிறது. கிராமப்புற சுகாதாரம் அல்லது நீர்வள மேலாண் மையில் பெண்களின் பங்களிப்பை குறிப்பிடும் சட் டங்கள் அல்லது கொள்கைகள் 50க்கும் குறைவான நாடுகளில் மட்டுமே உள்ளதாக ஐ.நா. கூறுகிறது. சுமார் 15 சதவிகித நாடுகளில் நீர்வள மேலாண்மை யில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் இன்னும் இல்லை என ஐ.நா.வின் பெண்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கவலையோடு தெரி விக்கின்றன. பாதிப்பு வெள்ளம், மேக வெடிப்புகள், வறட்சி மற்றும் புவி வெப்பமடைதல் அனைத்தும் இயற்கையான நிகழ்வு கள்.

ஆனால் அவற்றின் விளைவுகள் சமமானவை அல்ல. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தரவு களின்படி, பெண் தலைமையிலான கிராமப்புற குடும் பங்கள், ஆண் தலைமையிலான குடும்பங்களை விட வெள்ளத்தால் மூன்று சதவிகிதம் அதிக வருமா னத்தை இழக்கின்றன. இது ஒரு நபருக்கு ஆண்டுதோ றும் சுமார் 35 டாலர் ஆகும், இது ஒட்டுமொத்தமாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகளுக்குச் சமம். பெண்களுக்கு ஆண்களை விடத் தண்ணீரின் தேவை உயிரியல் ரீதியாக அதிகம். குறிப்பாக மாத விடாய் காலங்களில் தூய்மையான தண்ணீரின் தட்டுப் பாடு பெண்களின் உடல்நலனைப் (தொற்றுகள் போன்றவை) பெருமளவு பாதிக்கிறது.

அதுபோல மகப் பேறு காலம், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தூய்மை யான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் மிக அவசியம். வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது, கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரைப் பரிமா றும்போது ‘பெண்கள் கடைசியாகப் பயன்படுத்தும்’ நிலை பல சமூகங்களில் உள்ளது. இதனால் நீரிழப்பு மற்றும் அது சார்ந்த சிறுநீரகப் பாதிப்புகள் பெண்க ளுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. வெள்ளம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு தோல்வியடையும் போது, பெண்களும் சிறுமிகளும் துஷ்பிரயோகம், தாக்குதல், உடல்நலக்குறைவு, பொ ருளாதாரம், பாதுகாப்பு போன்ற கூட்டு அபாங்களை எதிர்கொள்கின்றனர். நீரைத் தேடி... குடும்பத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பொது வாகத் தண்ணீர் எடுக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். சில நேரங்களில் பெண்கள் நீரை எடுத்து வர பல மைல் கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆப்பி ரிக்காவில் மட்டுமே பெண்கள் மற்றும் சிறுமிகள் தண்ணீரைத் தேடி ஆண்டுக்கு 40 பில்லியன் மணி நேரங்களைச் செலவிடுகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, அவர்களின் உடல்நலம் அல்லது எதிர்கால வாய்ப்புகளை அழித்து விடுகிறது.

ஒரு பெண் தனது வாழ்நாளில் தண்ணீர் சேகரிப்பிற்காகச் செல விடும் நேரம், ஆண்களை விட 3 முதல் 4 மடங்கு அதிகம் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவில், தண்ணீர் சேகரிப்பது கிட்டத்தட்ட ஒரு பெண்ணின், பெண் குழந்தைகளின் பொறுப்பாகக் கடமையாகவே திணிக்கப்பட்டுள்ளது. இது சமூக விதிமுறைகளில் ஒன்றாகிவிட்டது. தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு, கிராமப்புற வீடுகளில் சுமார் 71 சத விகிதம், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே தண்ணீர் சேகரிப்புக்குப் பொறுப்பாகிறார்கள் என்கிறது. ஆண்டுதோறும் பெண்கள் சராசரியாக 173 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்ணீர் எடுக்க அலைகிறார்கள், இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 210 மணிநேரம் அல்லது கிட்டத்தட்ட 27 முழு நாட்கள் ஆகும். நீருக்காக அலைதல் உடல் சோர்வு, மன அழுத் தம், உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்ட ஆரோக்கி யத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் நீருக்கான பயணங்கள் பெண்களுக்கான பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம். பெண்களுடன் பெண் குழந்தைகளும் தண்ணீர் எடுத்துவரவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் அவர்க ளது கல்வியில் பாதிப்பு ஏற்படும். பள்ளிக்குச் செல்ல முடியாமலும், படிப்பில் கவனம் செலுத்தமுடியாமலும், பள்ளியில் இடைநிற்றலும் ஏற்படலாம். இதனால் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற குழந்தையின் எதிர்காலக் கனவு சிதைந்துவிடும். நீர் பிரச்சனை பெண்களின் உடல்நலம், கல்வி, பாதுகாப்பு, பொரு ளாதாரம் மற்றும் மனநிலையைப் பல வகைகளில் பாதிக்கிறது. ‘தண்ணீர் மனைவி’ “சிறந்த குடும்பப் பெண் என்பவள் வீட்டையும் நிர் வகிக்க வேண்டும்” என்ற ஆணாதிக்கச் சிந்தனை அநீதியை நிலைநிறுத்துகிறது. இதனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் ஒரு குக்கிராமத்தில் பலதார மணம் உருவாகியுள்ளது.

கிராமப்புற இந்தி யாவில் ஆண்கள் நீர் மேலாண்மையை முழுமை யாகப் பெண்களிடம் ஒப்படைத்துள்ளனர். தண்ணீர் சேகரிப்பதை உறுதிசெய்ய இன்னொரு திருமணம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் விதவைகள் அல்லது திருமணமாகாத பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தத் ‘தண்ணீர் மனை விகள்’ திருமணத்தின் மூலம் சமூக அந்தஸ்தைப் பெறு கிறார்கள், ஆனால் அவர்களின் ஒரே கடமையாகத் தண்ணீர் எடுப்பதற்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்க ளுக்குத் தங்குமிடம் மற்றும் ஓரளவு மரியாதை வழங் கப்பட்டாலும், அவர்களுக்கு மரபுரிமைகள் மறுக்கப் படுகின்றன. இந்தமுறை மிகவும் பிற்போக்குத்தன மானது. இது பாலின சமத்துவமின்மையை வலுப் படுத்துகிறது. தீர்வு ஒருவேளை ஆணுக்கு இணையாக பெண்ணுக்குத் தண்ணீர்  கிடைத்தாலும் அந்தத் தண்ணீரைப் பெறு வதற்காகப் பெண்கள் கொடுக்கும் ‘விலை’ (நேரம், உடல் உழைப்பு, உடல்நலம்) ஆண்களை விட மிக அதிகம்.

எனவே, “வீடு தேடி வரும் குடிநீர்” மட்டுமே இந்தச் சமத்துவமின்மையைப் போக்க ஒரே வழியாகும்.  தண்ணீர் மேலாண்மை வாரியங்கள் மற்றும் கொள்கை முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்க ளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்போதுதான், அவர்க ளின் பிரத்யேகத் தேவைகளுக்கான (பள்ளிகளில் கழி வறை வசதி, பொது இடங்களில் தண்ணீர் வசதி) தீர்வு கள் எட்டப்படுகின்றன. தண்ணீர் சேகரிப்பு என்பது “பெண்களின் வேலை” என்ற சமூகப் பார்வை மாறும் போதுதான் முழுமையான பாலினச் சமத்துவம் ஏற்படும்.