கிசுகிசு
மத்தியப்பிரதேச பாஜக தலைவர்கள் பற்றிய கிசுகிசு ஒன்று, வடஇந்திய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், ஒரு தலைவரை ஆதரிக்க எந்த அளவுக்கு கீழே இறங்கத் தயாராக இருக்கும் இரண்டு மாநில அமைச்சர்களின் நிலைப்பாடு அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறதாம். அந்தத் தலைவரின் ஆட்கள் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. இதில் ஒரு அமைச்சர் மீதான லஞ்சப் புகாரில் மத்திய அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியும், அந்த விஷயம் கசியாமல் வைக்கப்பட்டிருக்கிறதாம். ஊழலில் ஈடுபட்ட ஆட்களோடு தலைவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் இருக்கும் புகைப்படங்களும் இருப்பதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மூன்றாவதாக ஒரு அமைச்சரும் இதே விவகாரத்தில் அடிபடுகிறார். இந்தக் கிசுகிசுவில் யாருடைய பெயரும் இல்லை. ஆனால் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
பல்டி
தீவிரமான அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போகிறேன் என்று காலையில் சொன்னதற்கு மாலையில் மறுப்பு தெரிவித்து பல்டி அடித்துள்ளார் பாஜக எம்.பி., நாராயணன் ரானே. ஒரு கூட்டத்தில் பேசுகையில், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் விலகிக் கொள்ள வேண்டியது தான்” என்று பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மாலையிலேயே அரசியலில் இருந்து விலகும் திட்டமெல்லாம் இல்லை என்று கூறிவிட்டார். சிவசேனா, காங்கிரஸ் என்று பயணித்து விட்டு, தற்போது பாஜக வில் இணைந்து எம்.பி.,யாக இவர் இருக்கிறார். மகா ராஷ்டிரத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். சிவ சேனாவில் குடும்ப அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இவர் தனது மகன்களில் ஒருவரை சிவசேனாவில் எம் எல்ஏ ஆக்கியிருக்கிறார். மற்றொரு மகனை பாஜகவில் சேர்த்து, மாநில அமைச்சராக்கி வைத்துள்ளார்.
நீதி..?
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர் ்மீத்ராம் ரஹீம் 40 நாள் பரோலில் (Parole) வந்திருக்கிறார். பெண் சீடர்கள் இருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும், ஊடகவியலாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். இப்படி 40 நாள் பரோல் தருவதில் என்ன பிரச்சனை..? பிரச்சனை அதுவல்ல. 2022 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 91 நாட்கள் பரோல் அவருக்குக் கிடைத்து வருகிறது. அதிகபட்சமாக இவ்வளவுதான் ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும். இல்லையென்றால், மேலும் இவரால் பெற்றுக் கொள்ள முடியும். அந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு. ஆனால், சோனம் வாங்சுக், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோர் நீதி கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிறந்த மாடல்
சாலை விபத்துகளின் தீவிரத்தைக் குறைக்க குஜராத் மாடலைப் பின்பற்றப் போவதாக உயர்மட்ட பரிசீலனைக் கூட்டமொன்றில் பேசிய திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹா கூறியுள்ளார். கூட்டத்தில் பங்கு கொண்ட சில உயர் அதிகாரிகளே “நமுக்”கென்று சிரித்துக் கொண்டதாக விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இடது முன்னணி ஆட்சியில் இருந்தபோது குஜராத்தை விட நல்ல நிலையில் திரிபுரா இருந்தது. தீவிரமான விபத்துகளின் அளவு குஜராத்தில் 33.5 விழுக்காடாக இருந்தபோது திரிபுராவில் 26.3 விழுக்காடாகத்தான் இருந்திருக்கிறது. தற்போது நிலைமை மோசமானதாக மாறியதற்கு பாஜக வின் நிர்வாகமே காரணம் என்றும், சாலைகள் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் படுமோசமான அணுகுமுறை, ஊழல் இருக்கிறது என்று மக்களிடையே பரவலான பேச்சு அடிபடுகிறது..
