நாடகம் - 1
எட்டாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் நாடகம் தீவிரமடைந்துள்ளது. நீதித்துறை ஊழல் பற்றிய பாடம் எப்படி வந்தது, இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. புத்தகத்தைத் தடை பண்ணி விட்டார்கள். ஒன்றிய அரசோ, பிரதமர் அக்கறையோடு விசாரித்தார் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. விவாதங்களை நடத்த வேண்டிய இடங்களில் நடத்தாமல் பள்ளிப் பாடப்புத்தகங்களில் திடீரென்று அறிமுகப்படுத்துவது எப்படி சரியாகும் என்று சட்டத்துறை நிபுணர்கள் கேட்கிறார்கள். புதிய பிரச்சனைகளை எழுப்பி, மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவது பாஜகவுக்கு வழக்கம்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
நாடகம் - 2
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவசர, அவசரமாக அவர் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. தேசியவாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் இணைந்து விடக்கூடாது என்பதற்காகவே பாஜக அவசரப்படுத்தியது. இதற்கு சாக்கேன் புஜ்பால் போன்ற தலைவர்களை பாஜக பயன்படுத்துகிறது. வாரிசு அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லும் பாஜக, சுநேத்ராவை துணை முதல்வராக்கியதோடு, மகன் பார்த் பவாரை மாநிலங்களவை உறுப்பினராக்குகிறார்கள். சரத் பவாருடன் இவர்கள் இணைந்தால் தங்கள் கையை விட்டுப் போய் விடுவார்கள் என்று பாஜக கணக்குப் போடுகிறது. கூட்டணிக் கட்சிகளை விழுங்கும் பாஜகவின் நாடகங்களில் இதுவும் ஒன்று என்கின்றன எதிர்க்கட்சிகள்.
நாடகம் - 3
குடியரசு துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து திடீரென்று தன்னை விடுவித்துக் கொண்ட ஜக்தீப் தன்கர் கிட்டத்தட்ட தலைமறைவாகத்தான் இருக்கிறார். தற்போது திடீரென்று ராஜஸ்தானில் நடந்த பொது நிகழ்ச்சியொன்றில் தலை காட்டியுள்ளார். உடல் நலமில்லை என்று நான் சொல்லவேயில்லையே.. உடல் நலனுக்கு முன்னுரிமை என்றுதானே சொன்னேன் என்கிறார். குடியரசு துணைத் தலைவருக்கு இல்லாத மருத்துவ வசதிகளா..? காலையில் கர்ஜித்தவர், மாலையில் உடல்நலன் என்று பேசியதன் மர்மம் விலகவில்லை என்று அவருடைய ஆதரவாளர்களே மண்டையைச் சொறிகிறார்கள். அவரின் நாடகம் எப்போது முடியும் என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
நாடகம் - 4
நில விவகாரத்தில் முத்தரப்பு நாடகம் நடக்கிறது. உத்தரகண்டின் ஹரித்துவாரில் உள்ள நிலம் ஒன்றை மேம்படுத்த ராம்தேவ் நிறுவனத்துக்கு அம்மாநில சுற்றுலாக்கழகம் தந்தது. அதற்கு 40 லட்சம் ரூபாயும் கொடுத்தது. கணக்கு காட்டினார்கள். நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 20 மாதங்கள் ஆகின்றன. ஒன்றும் நடக்கவில்லை. இப்போது திடீரென்று உ.பி. அரசு, அது தன்னுடைய நிலம் என்கிறது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் என்று நில ஆக்கிரமிப்பை ராம்தேவின் நிறுவனம் தொடர்கிறது. ராம்தேவ் நிறுவனத்துக்கு உதவவே உ.பி. அரசு களத்தில் குதித்ததாகச் சொல்லப்படுகிறது.
