states

img

தீக்கதிர் உலக செய்திகள்

கனடா வரிக்கு பதிலடி    எச்சரிக்கை விடுத்த சீனா \

கனடா அரசு கடந்த ஆண்டு சீன பொருட்க ளுக்கு விதித்த வரிக்கு பதிலடியாக தற்போது சீனாவும் மார்ச் 20 முதல் புதிய வரிகளை அறிவித்துள்ளது. சீன தயாரிப்பு மின்சார வாகனங்கள், ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு  25 மற்றும் 100 சதவீத வரியை கனடா விதித்துள்ளது.  இந்நிலையில் கனடாவின் கடல் உணவுப்பொருட்கள், பன்றி இறைச்சிகள், விவசாயப் பொருட்கள் என 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 மற்றும் 100 சதவீத வரிகளை சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

558 புலம்பெயர்ந்தோர்  செங்கடலில் பலி 

2024 இல் செங்கடலை கடக்க முயன்ற சுமார் 558 புலம்பெயர்ந்தோர் கடலில் பலியாகியுள்ளனர் என குடியேற்றத் திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் சுமார் 462 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் பலியாகியுள்ளனர். இப்பகுதியில் சுமார்  4,46,194 முறை மக்கள் இடப்பெயர்வு ஆவ ணப்படுத்தப்பட்டுள்ளன. இது 2023-ஐ விட 13 சதவீதம் அதிகம். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மோசமான வறுமையால் ஐரோப்பா நோக்கி கடல் வழியாகச் செல்லும் நபர்கள் செங்கடலில் பலியாவது தொடர் நிகழ்வாக உள்ளது.

அல் அசாத் ஆதரவுப் படை  சிரியாவில் துப்பாக்கிச்சூடு

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி அல் அசாத் ஆதரவுப் படை வியாழனன்று அந்நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 237 பேர் படுகொ லையாகியுள்ளார்கள் என போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அசாத் ஆதரவு பிரிவினர் 50 பேர், பொதுமக்கள் 100 பேர்,70 க்கும் மேற்பட்ட அரசு படையினர் அடங்குவர் என குறிப்பிட்டுள்ளது. எச்டிஎஸ் தலைமையிலான பயங்கரவாதிகளின் படை அல் அசாத் ஆட்சியை கவிழ்த்து விட்டு அல் ஜொலானி தலைமையில் இடைக்கால அரசை அமைத்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தை கண்டித்து  ஆராய்ச்சியாளர்கள் பேரணி

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் டிரம்பின் நிர்வாகம் பல நிறுவனங்களில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றது. இதில் மனிதனின் உயிரைக்காக்கும் ஆராய்ச்சித் துறையும் தப்பவில்லை. இதனை கண்டித்து அறிவியல் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்; பணக்கா ரர்களுக்கு அல்ல என்று அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஆராய்ச்சியாளர்கள், மருத்து வர்கள், மாணவர்கள், பொறியாளர்கள் என 1000  க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தியுள்ளனர்.

அன்சாருல்லா இயக்கம்  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் நடத்தி வரும் தாக்குதல்களை இன்னும் நான்கு நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நாங்கள் மீண்டும் துவங்குவோம் என ஏமனின் அன்சாருல்லா அமைப்பின் தலைவர் செயத் அப்துல்மாலிக் பத்ரெடின் அல்-ஹூதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோவை  தொடர்ந்து மிரட்டும் டிரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டி வந்த டிரம்ப் தற்போது பகிரங்கமாக இந்தியாவை விமர்சித்து வருகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய டிரம்ப் தனது நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ள வரிகள் குறித்து பேசினார். இந்தியா எங்களின் பொருட்களுக்கு அதிகள வில் வரி வசூல் செய்கின்றது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கின்றது. அதாவது மிக அதிகளவில் வசூலிக்கின்றது. இந்தியாவில் எதையும் விற்க முடியாது. அவர்களே அதனை ஒப்புக்கொண்டனர். அதன் பிறகே வரியை குறைக் கும் நடவடிக்கைக்கு வந்துள்ளனர்.  ஏனென்றால் அவர்கள் செய்ததை யாரோ அம்பலப்படுத்தி இருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது இருதரப்பு வரி விதிப்பேன், பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என அவர் மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடியோ வெளியுறவுத்துறை அமைச்சகமோ தற் போது வரை இதற்கு எந்த எதிர்வினையும் கொடுக்க வில்லை. அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக் கும் நாடுகள் மீது அமெரிக்காவும் அதே அளவு வரிகளை விதிக்க முடிவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ மீது வரிகளை அறிவித்தது. இதற்கு இந்தியா தவிர பிறநாடுகள் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந் நிலையில் ஏப்ரல் 2 முதல் இந்த வரி அமலாகும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்கப் பொருட்களு க்கு அதிக வரி விதிப்பதை விமர்சித்த அவர் இந்த நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன என குற்றம்சாட்டினார்.  மேலும் இந்த நாடுகளின் மீதும் கட்டாயமாக வரி விதிப்பேன்  எனவும் தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியம்  அமெரிக்காவைப் பயன் படுத்திக் கொள்ள உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டிய அவர் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக் காவை பயங்கரமாக துஷ்பிரயோகம் செய்கிறது என்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே கண்ணுக்கு கண் என்பது போல வரிக்கு வரி விதிப்பேன். நமது நாட்டின் பொருட்களுக்கு எவ்வளவு அதிக வரி விதிக்கின்றார்களோ அதே அளவு வரியை அமெரிக்காவும் விதிக்கும் என்றார்.