states

img

பீகாரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆன்மீக சொற்பொழிவாளர் போக்சோவில் கைது

பீகாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரவன் தாஸ் ஜி மகாராஜ், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்பில் இருந்த நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, ஸ்ரவன் தாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய குழந்தைகள் நலக் குழு (CWC) கவனத்தில் எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.