states

img

எரிக்கப் பணமில்லாமல் கங்கையில் வீசப்படும் உடல்கள்.... உ.பி., பீகார் மாநிலங்களில் அரங்கேறும் கொரோனா பேரவலம்.....

பாட்னா:
உத்தரப் பிரதேசம், பீகாரில் பிணங்களை எரிக்க முடியாமலும், போதியபணவசதி இல்லாமலும் அவற்றை கங்கை ஆற்றில் வீசிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறத் துவங்கியுள்ளன.பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந் துள்ள பக்சர் மாவட்டம், மகாதேவ் காட் பகுதிக்கு உட்பட்ட சவுஸா நகரகங்கையாற்றில் திங்களன்று 45க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டறியப்பட்டு உள்ளன.இவை உத்தரப்பிரதேசத்தின் பராயிச், வாரணாசி அல்லது அலகாபாத்திலிருந்து வந்த உடல்கள் என்று பீகார் பாஜக அரசும், இல்லை... பீகார் மாநிலத்திற்குள் தூக்கி வீசப்பட்ட உடல்கள்என்று உத்தரப்பிரதேச பாஜக அரசும்மாறி மாறி குற்றம் சாட்டும் நிலையில், உண்மையில் எரிப்பதற்கு இடமில்லாமலும் அல்லது எரிப்பதற்கு முடியாமலும் தூக்கி வீசப்பட்ட உடல்கள் தான் இவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிலேயே இறப்பவர்களின் உடல்கள் தான் இவ்வாறு கங்கையில் தூக்கி வீசப்படுகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்கு முன்னர் பிணங்களை எரிக்கஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில் தற்போது விறகு முதல் இறுதிச் சடங்குக்கான பொருட்கள் என்று அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்து, 15 ஆயிரம் வரை செலவாகிறது. கொரோனா காலம் என்பதால் இடைத்தரகர்களும் முளைத்து விட்டனர். இந்நிலையில், அவ்வளவு பணத்திற்கு வழி இல்லாதவர்களே இறந்துபோன தங்களின் உறவினர்களை கங்கையில் வீசுகின்றனர் என்று கூறப்படுகிறது.இவ்வாறு தூக்கி வீசப்படும் உடல்களை கழுகுகளும் நாய்களும் கடித்து இழுப்பதால் கங்கை ஆறு மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கு புதியபிரச்சனையாகவும் உருவெடுத் துள்ளன.இந்நிலையில், கங்கை நதியைதூய்மைப் படுத்த ‘நவாமி கங்கே’என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் (மத்திய பாஜக ஆட்சியாளர்கள்) கங்கைக் கரையில் மின்மயானங்களை அமைத்திருந்தால் ஏழைகளுக்கு அது உதவியாக இருந்திருக்கும் என்று பீகாரைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் அஸ்வினி குமார் வர்மா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.