மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, ரூ.3,200 கோடிக்கு மதுபானக் கொள்கை ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நேற்று ராஜாம்பேட் எம்.பி மிதுன் ரெட்டியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து நேற்று மாலை 7.30 மணிக்கு மிதுன் ரெட்டியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணையில் ஏற்கனவே பல உயர்மட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.தனுஞ்சய் ரெட்டி மற்றும் 2019 மற்றும் 2024 வரையில் அப்போதைய முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி பி.கிருஷ்ணமோகன் ரெட்டி ஆகியோர் அடங்குவர். இவ்வழக்கில் இதுவரை 40 பேர் குற்றவாளிகளாக சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.