states

img

கல்லூரி உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்ட மாணவர் திடீர் மரணம்!  

ஆந்திரா தனியார் கல்லூரியில் உள்ள உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவன் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் தீரஜ் ரெட்டி(20). இவர் சென்னை சோழிங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள விடுதியில் நண்பர்களுடன் தங்கி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் தீரஜ் மதிய உணவை கல்லூரி உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.    

சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவன் தீரஜ்க்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.  

இதனிடையே மாணவன் உடல்நிலை மோசமடைந்ததால், மூச்சு விட முடியாமல் தீரஜ் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் ரெட்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவன் கோழிக்கறி சாப்பிட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.