states

img

“நானும் அர்ஜுனா விருதை திரும்பக் கொடுக்கிறேன்”

ஹரியானா, டிச. 27- மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலி யல் வன்முறைகளை அரங்கேற்றிய பாஜக எம்பியும், முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரும், தொழில் கூட்டாளியான சஞ்சய் சிங்  புதிய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஜ் பூஷ னின் பாலியல் வன்முறைக்கு நட வடிக்கை எடுக்கக்கோரி போராடிய வரும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான சாக்சி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதே போல மல்யுத்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஒலிம்பிக் பதக்க நாயகனுமான பஜ்ரங் புனியா ஒன்றிய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியின் இல்ல வாச லில் வைத்து, கனத்த இதயத்துடன் மல்யுத்த விளையாட்டில் இருந்து விடைபெற்றார்.

இந்நிலையில், தனது கட்சி  எம்பியை காப்பாற்றவே ஒன்றிய மோடி அரசு மல்யுத்த விளையாட்டை சிதைத்துள்ளதாக “இந்தியா” கூட்டணி கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் தனக்கு ஒன்றிய அரசு கொடுத்த கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்பக் கொடுப்பதாக அறிவித்து பிரதமர் மோடிக்கும் இது குறித்து கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் பிரதமர் மோடிக்கு எழுதி யுள்ள கடிதத்தில்,’’என்னை இந்த சூழ்நிலைக்கு உருவாக்கியவர்களுக்கு நன்றி. சாக்‌சி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகி இருக்கிறார். பஜ்ரங் புனியா தனது பத்ம விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளார். எதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள் என்று ஒட்டுமொத்த நாடும் அறியும். இது உங்களுக்கும் தெரிந்து இருக்கும். கடந்த ஒரு வருடமாக நான் என்ன துன்பம் அனுபவிக்கிறேன் என்பதை தெரிவிக்கவே உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடமாக, நாங்கள் நீதி கோரி தெருக்களில் இருந்தோம். ஆனால் யாரும் கேட்க வில்லை. நாங்கள் வாங்கிய பதக்கங் கள் எங்கள் உயிரை விட மிகவும் பிடித்த மானவை. இப்போது நீதிக்காக குரல் எழுப்பிய நாங்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். பிரதமர் அவர்களே நாங்கள் துரோகிகளா? பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர தூண்டியது எது என்று எனக்குத் தெரியவில்லை. அவரைப் போலவே எனது விருதுகளையும் நான் வெறுக்கிறேன். இந்த விருதுகளைப் பெற்ற போது, என் அம்மா அக்கம்  பக்கத்தில் இனிப்புகளை வழங்கினார். என் உறவினர்கள் டி.வியில் செய்தி களைப் பார்த்தார்கள். அந்த உற வினர்கள் இப்போது என் அம்மாவிடம் என்ன சொல்வார்கள் என்று நினைத் தால் நான் நடுங்குகிறேன். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியமாக வாழவே விரும்புகிறாள். அதனால்தான், எனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதைத் திருப்பித் தருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.