states

‘வாஷிங் மிஷின்’ மீண்டும் வேலைசெய்யத் துவங்கிவிட்டது

மும்பை, ஜூலை 3 - மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவார்  தலைமையில் அக்கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள், ஆளும் பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  அஜித் பவாருக்கு துணைமுதல்வர் பதவியும், மேலும் 8 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.  இவர்களில் தேசியவாத காங்கிரசை உடைத்த அஜித் பவார் மற்றும் அவருடன் சேர்ந்து அமைச்சர் பதவியைப் பெற்றுள்ள சஜன் சந்திரகாந்த் புஜ்பால், அனில் பாட்டீல், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டோர் மீது  கடந்த காலத்தில் பாஜக-வால் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட வர்கள். அத்துடன், இவர்கள் மீது அமலாக்கத் துறையும் ஏவி விடப்பட்டது. அதிலும் குறிப்பாக, ஹசன் முஷ்ரிப் பண மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று ஜாமீன் பெற்றவர்.  இந்நிலையில், இவர்களை எல்லாம் தங்களின் கூட்டணிக்குள் இழுத்துப்போட்டு, அவர்களுக்கு அமைச்சர் பதவிகளையும் தூக்கிக் கொடுத்துள்ளது பாஜக.

இந்நிலையில், பாஜக-வின் இந்த நட வடிக்கை, ஊழலில் புரளும் அதன்  உண்மை யான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. “ஊழல் கறைபடிந்த தலைவர்களுடன் கைகோர்த்துள்ள பாஜக, இனி ஊழலுக்கு எதிராக போராடுவது பற்றியெல்லாம் பேசக் முடியாது” என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. “மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமை யிலான கூட்டணியில் புதிதாக இணைந்திருப் பவர்கள், தீவிரமான ஊழல் குற்றச்சாட்டு களுக்காக அமலாக்கத்துறை, சிபிஐ  மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். இப்போது அவர்களுக்கு நற்சான்று கிடைத்துள்ளது. இதன்மூலம் பாஜகவின் ‘சலவை இயந்திரம்’ மீண்டும் வேலையை தொடங்கியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  “ஊழல்வாதிகளை ஆதரிக்கும் நாட்டின் மிகப்பெரிய ஊழலின் புரவலர் யாரென்றால் அவர் நரேந்திர மோடிதான். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவாதம் அளித்த இரண்டு நாட் களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் சிவ சேனா - பாஜக கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்வராக பவார் நியமிக்கப் பட்டுள்ளார் மற்றும் புஜ்பாலும் அமைச்சர வையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று ஆம்  ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பா ளர் சஞ்சய் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “மகாராஷ்டிராவில் ஊழல் கறைபடிந்த வர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனா். அமலாக்கத் துறை விசாரணை வளை யத்தில் இருந்த இவா்களை இணைத்துக் கொண்டதன் மூலம் பாஜக-வோ, பிரதமா் மோடியோ இனி ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து பேச முடியாது. பாஜக  ஒரு நயவஞ்சகமான கட்சி” என்று திரிணா முல் காங்கிரஸ் மூத்த தலைவா் பாபுல் சுப்ரியோ சாடியுள்ளார்.

“அனைத்து ஊழல்வாதிகளும் தங்களது  அணியில் இணைந்து, ஊழல் கறையை போக்கிக் கொள்ளலாம் என்று பாஜக பகிரங்க மாக அறிவித்துள்ளது” என்று ஆம் ஆத்மி  கட்சியின் மூத்த தலைவர் அதிஷி விமர்சித்துள் ளார். “பாஜக-வின் நடத்தையை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. மகாராஷ்டிரத்தில் மக்களின் தீா்ப்பை பாஜக தொடர்ந்து அவ மதித்து வருகிறது” என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். “அஜித் பவாரின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிா்க்கட்சிகளில் இருந்து கட்சித் தாவலை பாஜக தொடர்ந்து நிகழ்த்துமா? என்ற கேள்விதான் இறுதியாக  நிற்கிறது” என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி குறிப்பிட்டுள்ளார். “மத்திய பிரதேசத் தைத் தொடர்ந்து, பாஜக-வின் மிகப் பெரிய  சோதனைக் கூடமாக மகாராஷ்டிரா மாறி யுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, இன்னும் பல சோதனை களை பாஜக செய்யும். அக்கட்சியின் செயல் பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்” என்று சமாஜ்வாதிகட்சித் தலைவர் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார். “பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் முயற்சியால் அக்கட்சி அச்சமடைந் துள்ளது. மகாராஷ்டிர அரசியல் நிகழ்வு, தேசிய அளவிலான எதிா்க்கட்சிகளின் நகர் வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று ஐக்கிய ஜனதா தளம் தலைமை செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியுள்ளார்.