states

img

மனிதத் தன்மை மனச்சாட்சி எங்கே போனது ?

மணிப்பூர் விவகாரத்தில் இரட்டை இன்ஜின் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்ட ஒன்றிய - மாநில அரசுகள் தவறிவிட்டன. இந்தக் கலவரத்துக்கு பாஜக-தான் முழு பொறுப்பேற்க வேண்டும். 77 நாட்களுக்கு முன்பு கொடூரமான வகையில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் மணிப்பூர் அதிகாரிகளும், காவல்துறையினரும் இது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதும் கூட நடவடிக்கை எடுத்து நீதி வழங்குவதில் எந்த அவசரமும் காட்டப்படவில்லை. மாறாக, இச்செய்தியை உலகுக்கு தெரிவித்த ட்டுவிட்டர் தளத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அரசு மிரட்டுகிறது. இது மூர்க்கத்தனமானது. 

                       சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவத்தைக் கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு அழிக்கிறது. நமது மனசாட்சி எங்கே போனது? மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

                 மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

வெறிபிடித்த கும்பலால் இரண்டு பெண்கள் கொடூரமாக நடத்தப்படுவதைக் காட்டும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்தது. கோபம் ஏற்பட்டது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் காணும்போது ஏற்படும் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. குற்றவாளிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

              மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதல்வர்

மணிப்பூரில் வன்முறைகள் நிற்காமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த நாடும் கவலையடைந்துள்ளது. பாஜகவின் அலட்சியத்தால், மணிப்பூரில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

         அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர்

வைரலாகிய வீடியோ தேசத்தின் மனசாட்சியை உலுக்கி விட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வன்முறைகள் நடந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குற்றம் மட்டுமல்ல மிகவும் வெட்கக்கேடானது. இதற்கு மணிப்பூர் (அரசாங்கம்) மற்றும் மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். இதுபோன்ற சம்பவங்களில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது அடிக்கடி தெரிகிறது. இது ஒரு பலவீனமான தலைவரின் அடையாளம். 

            அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி முதல்வர்

2 பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது; முற்றிலும் மனிதாபிமானமற்றது. 

              ஸ்மிருதி இரானி, பெண்கள் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

ஆர்எஸ்எஸ்-ன் வெறுப்பு அரசியலும், பாஜகவின் வாக்கு அரசியலும் மணிப்பூரில் உள்ள நிலைமைக்குக் காரணம்.

             அகிலேஷ், சமாஜ்வாதி கட்சி தலைவர்

மணிப்பூரில் தொடரும் வன்முறை மற்றும் கலவரத்தால் நாடு முழுவதுமே கவலை அடைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான அநாகரீகமான சமீபத்திய சம்பவம் பாஜக மற்றும் அதன் அரசாங்கத்திற்கு மிகவும் சங்கடமாக மாறியிருக்கிறது. முதல்வரை (பைரேன் சிங்கை) பாஜக தொடர்ந்து பாதுகாக்குமா?  

               மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்

பிரதமர் மோடியின் உரை 8 நிமிடங்களுக்கு மேல் இருந்தது. ஆனால் மணிப்பூருக்கு 36 வினாடிகள் மட்டுமே பேசியுள்ளார். மாறாக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரை பிரதமர் மோடி  கேலி செய்தார். இந்த சம்பவம் குறித்து பிரதமருக்கு உண்மையில் என்னவென்றே தெரியாதா? 

             சுப்ரியா ஷ்ரினேட், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

பிரதமரின் அமைதி மற்றும் செயலற்றதன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது. இந்தியா என்ற மனப்பான்மை மணிப்பூரில் தாக்கப்படும் போது ‘இந்தியா’ அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே இதனை முன்னோக்கி செல்லும் வழி. 

          ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைந்துவிட்டது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது. அமைதிக்கான முயற்சிகளை மணிப்பூரில் முன்னெடுத்துச் செல்லும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் வன்முறையைக் கண்டிக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஒன்றிய அரசும், பிரதமரும் கண்மூடித்தனமாக இருப்பது ஏன்? இத்தகைய படங்களும் வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யாதா?  

               பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்

1800 மணி நேரத்திற்கும் மேலாக  புரிந்து கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத அமைதிக்குப் பிறகு, இறுதியாக மொத்தம் 30 வினாடிகள் மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசினார். அதன்பிறகு, ம.பி., உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விட்டுவிட்டு, மணிப்பூர் மாநில குற்றத்தை எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களின் குற்றங்களோடு சமன் செய்து, மணிப்பூரில் நடந்த மாபெரும் நிர்வாகத் தோல்விகள் மற்றும் மனிதாபிமான துயரங்களிலிருந்து கவனத்தைத் திசைத் திருப்ப பிரதமர் முயன்றார். இதில், முதலாவதாக, நடந்துகொண்டிருக்கும் இனக்கலவரத்தின் பிரச்சனையை அவர் முற்றாகப் புறக்கணித்தார். அமைதிக்காக எந்த வேண்டுகோளும் அவர் விடுக்கவில்லை, மணிப்பூர் முதல்வரை பதவி விலகுமாறு கேட்கவில்லை. உண்மையில், மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்முறை சம்பவங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. வெறும் வார்த்தைகள் இனி எதுவும் செய்யாது. செயல்கள் சத்தமாக பேச வேண்டும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது. மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையை உறுதிப்படுத்த ‘இந்தியா’ தொடர்ந்து பதில்களைக் கோரும்.

                      ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் பொதுச்செயலாளர்

மணிப்பூரில் இருந்து வரும் மனத்தை உலுக்கும் காட்சிகள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வெறுக்கத்தக்கவையாகும்.  மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் அலுவலகம் உடனடியாக தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

              சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்

மணிப்பூரில் இரட்டை எஞ்சின் அரசு உள்ளது, ஆனாலும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை பற்றி எரிகிறது: மணிப்பூரில் ஒரு கும்பல் பெண்களை மானபங்கப்படுத்தியது, பயங்கரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது.

             ராஜீவ் ரஞ்சன் சிங், ஐக்கிய ஜனதாதளம் தலைவர்

இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். உண்மை குற்றவாளி கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

              பைரேன் சிங், மணிப்பூர் முதல்வர்