கடந்த 6 மாதங்களில் 1.32 கோடி இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் நீக்கி உள்ளது.
பெரும்பாலான மக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கான புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கொண்ட நிறுவனங்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும், இது கடந்த ஆண்டு மே 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதையடுத்து டிசம்பர் மாதத்திற்கான அறிக்கையில் இந்தியர்களின் 20,79,000 வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய தகவல் தொழில் நுட்ப கொள்கை அமலுக்கு வந்த 6 மாதங்களில் மட்டும் 1.32 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 16 ஜூன் 2021ல் இருந்து 31 ஜூலை 2021 வரை சுமார் 30.27 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியானது எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் அடிப்படையில் இயங்கும் போது எவ்வாறு கணக்குகள் நீக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் தாங்கள் அவதூறுகளை கண்டுபிடிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும்,இதில் 3கட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கணக்கு எப்போது தொடங்கப்பட்டது. அதில் இருந்து எத்தனை மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. எத்தனை பேர் அந்த கணக்கை ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்புகளை வலுவாக வைத்துள்ள ஒரு கட்சியோ அல்லது அமைப்போ எந்த ஒரு தனிநபர் கணக்கின் மீதும் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு புகார் அழித்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக ஆளும் பாஜக அரசு அரசியல் ரீதியான தனது தோல்விகளை மறைக்கவும், தனக்கு எதிரான கருத்துகளை வெளியிடுபவர்களை பழிவாங்கவும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.