states

img

விவசாயிகளின் போராட்டங்களை ஆதரித்து ஹைதரபாத் தொழில்நுட்ப வல்லுநர் உண்ணாவிரதம்

 

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த மனோஜ் என்னும் தொழில்நுட்பப் பட்டதாரி, தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தில்லி சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் விவசாயிகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஹைதராபாத் ஹிமாயத் நகரைச் சேர்ந்த மனோஜ் (வயது 30), சனிக்கிழமையன்று, ஹைதராபாத்திலிருந்து தில்லி வந்து  தனக்கு முன் எவ்விதமான பதாகையோ, வேறெதுவுமோ இன்றி உண்ணாவிரதம் இருந்துவரும் விவசாயிகளுடன் சேர்ந்து தானும் அமர்ந்துகொண்டுள்ளார்.

மனோஜ் தொழில்நுட்பவியலில் இளநிலைப் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்று, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார், தன் நிறுவனம் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று விதிகள் நிர்ணயித்திருப்பதால், தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் அமர்ந்திருப்பதை எவரும் அநேகமாகக் கவனிக்கவில்லை.

இவரது சகோதரரான டாக்டர், வீடியோ அழைப்பு மூலமாக அவரிடம், மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எனினும் மனோஜ் தண்ணீர் மட்டும் அருந்திக்கொண்டு, குறைந்தது பதினைந்து நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.

மனோஜோ அல்லது அவரது குடும்பத்தினரோ நேரடியாக விவசாயத்தில் ஈடுபடவில்லை. எனினும்கூட, விவசாயிகள் இவ்வாறு வேலை செய்யாது நிறுத்திவிட்டார்கள் என்றால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று தான் கருதியதால், இவ்வாறு தான் இவர்களுடன் சேர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“இந்த சமயத்தில், மத்திய அரசு பிறப்பித்திருக்கும் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிக்கும். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அது அனைவர் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். பஞ்சாப், ஹர்யானா விவசாயிகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டால், விவசாய விளைபொருள்களின் விலைகள் கடுமையாக உயரும். போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும். இவை மக்களைச் சென்றடையும்போது, விலைகள் விண்ணையெட்டியிருக்கும்,” என்று மனோஜ் கூறினார்.

“எனவே இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரின் போரட்டமும் ஆகும்” என்றும் மனோஜ் தெரிவித்தார்.

“மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது ஒரு டாலருக்கு இந்தியாவின் ரூபாய் மதிப்பு 48 ரூபாயாக இருந்தது. இப்போது 74 ரூபாய் என்று சரிந்திருக்கிறது. இத்துடன் விவசாயிகளின் விரக்தி நிலை தொடருமானால் பொருளாதா நெருக்கடி மிகவும் மோசமாகும்” என்றும் மனோஜ் தெரிவித்தார்.

(ந.நி.)

Attachments area

 

;