states

‘நீட்’ தேர்வு ஊழல் மீது புலன் விசாரணை நடத்துக!

புதுதில்லி, ஜூன் 10 - நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து முறையான புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில், இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  “நீட்’ தேர்வுகள் நடத்தியதில் ஏராளமான முறைகேடுகள் மற்றும் முறையீடுகள் வந்துள்ளன. இதனை நடத்திய தேசிய தேர்வு முகமை (NTA-National Testing Agency) மிகவும் மோசமான முறையில் செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு கல்வியை மத்தியத்துவப்படுத்தியது அரசமைப்புச் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானதாகும். அரசமைப்புச் சட்டம், கல்வியை மாநிலம் மற்றும் ஒன்றிய அரசாங்கத்தின் பொதுப் பட்டியலில் (concurrent list) வைத்துள்ள நிலையில், மாநில அரசாங்கங்களை முற்றிலுமாக ஓரங்கட்டியிருப்பதை ஏற்க முடியாது. இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வுகள் குறித்தான அனைத்து அம்சங்கள் தொடர்பாக வும் முறையான புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. (ந.நி.)