தனது அதிகாரியையும் சுட்டுக் கொன்ற கொடூரம்
மும்பை, ஆக.1- ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சேத்தன் சிங், 3 அப்பாவி முஸ் லிம்கள் உள்பட 4 பேரை சுட்டுப் படு கொலை செய்த பயங்கரம் அரங்கேறியது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் வீழ்ந்த பின், “நீங்கள் இந்தியாவில் வாழ விரும் பினால், மோடி, யோகிக்கு மட்டும் வாக்களியுங்கள்” என ரயில்வே பயணிகளிடம் அவர் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து திங்களன்று காலை மும்பை யை நோக்கி ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) வந்து கொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் பாகல்கர் ரயில் நிலையம் அருகே வந்த பொழுது B-5, PC, S-6 இணைப்பு உணவகப் பெட்டியில் எஸ்கார்ட் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) கான்ஸ்ட பிள் சேத்தன் சிங் (34) B5 பெட்டியில் இருந்த ஆர்பிஐ மூத்த அதிகாரி டிகா ராம் மீனாவை (57) திடீரென தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதன் பிறகு PC, S-6 பெட்டி யில் இருந்த பயணிகள் 3 பேரை அடுத்த டுத்து சுட்டுக்கொன்றார். பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென துப் பாக்கிச்சூடு சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது 3 பேர் ரத்த வெள்ளத் தில் இறந்து கிடந்தனர். சேத்தன் சிங் கையில் துப்பாக்கியுடன் நின்றதால் அவரிடம் நெருங்க அனைவரும் பயந்த னர். அதற்குள் ரயில் மும்பைக்கு அரு கில் உள்ள தாஹிசார் ரயில் நிலை யத்தை நெருங்கியது. அந்நேரம் பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுக்க, மீரா ரோடு - தாஹிசார் நிலையங்களுக்கு இடையில் ரயில் நின்றபோது சேத்தன் சிங் தப்பி ஓட முயன்றார். மீரா ரோடு ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் போரிவலி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன.
“மோடி, யோகிக்கு மட்டும் வாக்களியுங்கள்”
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் வீடியோ, ‘டுவிட்டர் எக்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி யுள்ளன. அந்த வீடியோவில், துப்பாக் கிச்சூடு நடத்திய சேத்தன் சிங் தனது கையில் துப்பாக்கியை வைத்து பயணி களை மிரட்டுகிறார். ஒரு பயணியின் சட லமும் அவரது கால்களுக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. “தான் கொன்றவர்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள். ஊடகங்களும் இதையேதான் சொல்லும். இந்தியா வில் வாழ விரும்புபவர்கள் மோடி மற்றும் யோகிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்று சேத்தன் சிங் கொக்க ரிக்கிறார்.
முஸ்லீம்களை குறிவைத்து தாக்குதல்
துப்பாக்கிச்சூடு நடத்திய சேத்தன் சிங் மதவெறியுடன் படுகொலை செய் தது உறுதியாகியுள்ளது. “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் மோடி மற்றும் யோகிக்கு மட்டுமே வாக்களிக்க வேண் டும்” எனக் கூறி முஸ்லீம்களை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள் ளார். கொல்லப்பட்ட பயணிகள் மூன்று பேரும் முஸ்லீம் மதத்தைச் (அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் (48), அக்தர் அப்பாஸ் அலி (48), சதர் முக மது உசேன்) சார்ந்தவர்கள் ஆவர்.
பயணிகள் அச்சம்
“அதிகாலை 5 மணிக்கு மேல் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஓடும் ரயிலில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் இதுவே முதல் முறை. இதனால் நாடு முழுவதும் பய ணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்துவார்கள் என்று உறுதியளிக்க விரும்புகிறோம்” என மேற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திர ஷிஸ்வே கூறினார்.
குறுகிய மனப்பான்மை
“சேத்தன் சிங் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர். தனது தானியங்கி துப்பாக்கியில் 12 ரவுண்டு கள் சுட்டார். சம்பவத்திற்குப் பிறகு அவ ரது தானியங்கி துப்பாக்கியில் இருந்து எட்டு தோட்டாக்கள் மட்டுமே மீட்கப்பட் டுள்ளன” என ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ரூ.40 லட்சம் நிவாரணம்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஏஎஸ்ஐ டிகா ராம், மீனா ராஜஸ்தானின் சவாய் மாதோபூரைச் சேர்ந்தவர். இவ ரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவா ரணம் வழங்கப்படும் என மேற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி தெரி வித்தார். மீனாவின் உறவினர்களுக்கு ரயில்வே சுரக்சா கல்யாண் நிதியில் இருந்து ரூ.15 லட்சமும், இறுதிச் சடங்கு செலவுகள் ரூ.20,000 வழங்கப்படும். அவரது குடும்பத்தினர் இறப்பு, ஓய்வூ திய பணிக்கொடை மற்றும் குழு காப்பீடு திட்டத்தில் இருந்து ஒரு தொகையைப் பெறுவார்கள்” என மேற்கு ரயில்வே யின் தலைமை மக்கள் தொடர்பு அதி காரி சுமித் தாக்கூர் தெரிவித்தார். மீனாவுக்கு மனைவியும், 25 வய தில் ஒரு மகனும், 18 மற்றும் 20 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது மகளும் மருமகனும் உடலைக் கோருவ தற்காக கண்டிவலியில் உள்ள மருத்து வமனைக்கு வந்துள்ளனர். ஆனால் கொல்லப்பட்ட 3 முஸ்லிம் பயணிகளுக்கு வழங்கப்படும் நிவா ரணத் தொகை குறித்து எவ்வித தகவ லும் வெளியாகவில்லை. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் கொடூரம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த சேத்தன் சிங் மார்ச் மாதம் பாவ்நகர் பிரிவில் இருந்து மும் பைக்கு மாற்றப்பட்டார். சில நாட்க ளுக்கு முன் ஹாத்ரஸுக்கு சென்ற சேத்தன் சிங், மீண்டும் ஜூலை 17 அன்று பணியில் சேர்ந்தார். இந்திய தண்ட னைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) கீழ் கைது செய்யப்பட்ட சேத்தன் சிங் கிற்கு மனைவி மற்றும் 6, 8 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தாடியுடன் இருந்தவர்களை தேடிச் சென்று சுட்டுக்கொன்ற பயங்கரம்
சேத்தன் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயணிகளும் தாடியுடன் இருந்த முஸ்லிம்கள். வெவ்வேறு மூன்று பெட்டி களுக்கு தேடிச் சென்று முஸ்லீம் பயணி களை சுட்டுக் கொன்றுள்ளார் என ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் முகமது ஜுபை யர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
ஐந்து பேர் கொண்ட குழு
ஜெய்ப்பூர்-மும்பை ரயில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 7 வரை போலீஸ் காவல்
இதனிடையே கொலையாளி சேத் தன் சிங்கை ஆகஸ்ட் 7 வரை ரயில்வே காவல்துறை காவலில் வைக்க நீதி மன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.
‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ எப்படி பாஜகவிற்கு ஆதரவாக பேசுகிறார்?
துப்பாக்கிச்சூடு நடத்திய சேத்தன் சிங் பணியின் பொழுது ஏற்பட்ட அழுத்தம் மற்றும் முன்விரோதம் காரணமாக மூத்த அதிகாரி டிகா ராம் மீனாவை சுட்டுக் கொன்றதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ரயில்வே மூத்த அதிகாரி பிரவீன் சின்ஹா கூறினார். ஆனால் ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ எப்படி முஸ்லிம்களை தரம் பிரித்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாளர்கள் என்று கூறி, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் யோகியை குறிப்பிட்டு பாஜகவிற்கு ஆதரவாக பேச முடியும்? என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.