ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நாசகரமான தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளுமாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரியான அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது.
மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை நவம்பர் 11 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இப்போது அதன் சார்பாக டிசம்பர் 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு பிப்ரவரி 23-24 தேதிகளில் வேலை நிறுத்தத்தை நடத்திடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையுடன் ஒருங்கிணைந்து பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, குறிப்பாக 2022இன் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திட தீர்மானிக்கப்பட்டது. அத்தகைய இயக்கங்களுக்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தொடர்ந்து ஆதரவு அளித்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மத்தியத் தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் மாநிலக் கிளைகள், மாநில அளவில் சிறப்பு மாநாடுகள், மனிதச் சங்கிலி இயக்கங்கள், எரிவிளக்குப் பேரணிகள் (torchlight processions), கையெழுத்து இயக்கங்கள், நடத்தி, ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், விவசாயிகள் விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் எவ்வாறெல்லாம் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டு மேடையின் அறைகூவலுக்கிணங்க ஏற்கனவே பல்வேறு துறைகளில் பல்வேறு போராட்டங்களும், கிளர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2021 டிசம்பர் 16-17 தேதிகளில் வங்கிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்த முடிவுக்கும் கூட்டு மேடை வரவேற்பும் ஆதரவும் அளித்துள்ளது. அதேபோன்று 2022 பிப்ரவரி 1 அன்று மின் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தனியார்மயத்திற்கு எதிராக நடத்திடவுள்ள வேலைநிறுத்தத்திற்கும் ஆதரவினை அளித்துள்ளது.
நம்முடைய ஒன்றுபட்ட போராட்டம் மக்களின் உரிமைகளையும், வாழ்வையும், வாழ்வாதரங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புமுறையையும் பாதுகாப்பதற்கான போராட்டமும்,
ஆட்சியில் உள்ள எதேச்சாதிகார சக்திகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தனியார் கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் ஒட்டுமொத்த சமூகத்தையே பேரழிவுக்கு ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும்.
விவசாயிகள் போராட்டம், மூர்க்கத்தனமான மோடி அரசாங்கத்திடமிருந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்திடும் வரலாறு படைத்திடும் வெற்றியைப் பறித்து எடுத்திருக்கிறது. இப்போதுமு உழைக்கும்மக்கள் தங்கள் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலமாக மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களைப் பறித்திடும் ஆட்சியாளர்களின் கொள்கைகளை முறியடித்திட முன்வர வேண்டும்.
வேலை செய்வதற்கான உரிமை, வாழ்க்கை ஊதியத்ம அளிப்பதற்கான உரிமை, தரமான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியை இலவசமாக அளித்தல், மற்றும் நியாயமான அரசமைப்புச்சட்ட உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாத்திட அனைத்து அரசியல் கட்சிகளையும் நாம் கோர வேண்டும். இவற்றை வரவிருக்கும் 2024 தேர்தலின்போது அவை தங்கள் தேர்தல் அறிக்கையில் பதிவு செய்திட வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்போம் என உறுதி அளித்திட உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே இவற்றை வலியுறுத்தி ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது கட்டாயம். இத்தகைய உறுதியுடன் இருநாட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தை நடத்திடுவோம்.
அகில இந்திய வேலை நிறுத்தத்தின்போது நான் உயர்த்திப்பிடிக்கும் கோரிக்கைகள்:
1. தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்து செய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA (Essential Defence Services Act) ரத்து செய்.
2.வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்று.
3.எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்.
4.அங்கன்வாடி,’ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும்எ இதரத் திட்ட ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்கு.
5. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவா.
6.வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திடு.
7. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடு.
8. கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளித்திடு.
9. வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமை.
10.பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடு.
11.ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு.
12. தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவா. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திடு.
இத்துடன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்காகவும் அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியும், அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறும்.
இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.