states

கைகொடுக்குமா குறுவை தொகுப்பு திட்டம்? - ஐ.வி.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ஆம் தேதி கல்லணை திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் கல்லணை வறண்டு பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. காவிரி நீர் வராததால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விவசாயிகளிடம் பெரும் விரக்தியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு என ரூ.28.67 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் இந்த குறுவை தொகுப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பொருந்தாது என்றும் சம்பா தொகுப்பாக மாற்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் சங்க அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில் உண்மையான குறுவை பருவ சாகுபடி விவசாயிகள் தொகுப்பு திட்டத்தால் பயனடைவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934-லிலிருந்து இப்போது வரை 91 முறை திறக்கப்பட்டுள்ளது. இதில் 2000க்கு  பின்பு 2000, 2001, 2006, 2008 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே ஒவ்வொரு முறையும் ஜுன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது.  2011, 2021 ஆகிய ஆண்டுகளில் ஜுன் 12க்கு முன்னதாக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 முறைதான் ஜுன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆண்டுகளில் ஜுன் 12க்கு பின்னர்தான் தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. நடப்பாண்டு மழை இல்லை என்று யாரும் கூற முடியாது. தமிழக அரசு நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தூர்வாரும் பணிகள் இன்னமும் பல இடங்களில் நடைபெறவில்லை. உடனடியாக தூர்வாரும் பணியை துவக்கி அதை கண்காணிக்க விவசாயி கள் அடங்கிய குழுக்களை நியமிக்க வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு ஏமாற்றம்  அளித்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் பருத்தி போன்ற பயிர் சாகுபடி அதிகரித்து வரு கிறது. மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து 10 மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள், பழ வகைகள், தானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. மொத்தம் 17 லட்சம் ஏக்கர் நிலங்களில் காவிரி நீரால் ஆண்டுதோறும் சாகுபடி நடந்து வருகிறது.  மின் மோட்டார் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாரம்பரியமாக மண்ணுக்கேற்ற பயிர்கள் பல்வேறு ரகங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி செய்யும் முறையிலிருந்து சமீப ஆண்டுகளாக முற்றிலும் விலகிவிட்டனர். மாறாக புதிய பயிர்களை சாகுபடி செய்யும் முறை  அதிகமாகிவருகிறது. காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை, சம்பா, நவரை என மூன்று போக நெல் சாகுபடியும் சில இடங்களில் இரண்டு போக நெல் சாகுபடியும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் போக மாக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வந்த  நிலை மாறி பருத்தி போன்ற பயிர்களை பயிர் செய்து வருவது இப்போது அதிகரித்து வருகிறது.  கடந்த 20 ஆண்டுகளாக பருவ மழை தாமத மாக துவங்குவதும் குறைந்த கால அளவில் இயல்பான மழை பெய்வதும் மற்றும் மாநிலங்களுக்கிடையே நிலவி வரும் நதி நீர் பங்கீட்டு பிரச்சனையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுமாக தமிழக காவிரி விவசாயிகள் விவசாயப் பணிகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். 

கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகள் வழியாக வும், கொள்ளிடத்தின் வழியாக செல்லும். நடப்பாண்டில் கோடை மழை முழுமையாக பெய்யாமல் 53 சதவீதம் குறைவானதால் மேற்கு  தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங் களில் மழை இல்லாமல் வறட்சியே நிலவி வரு கிறது.  இந்நிலையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் பம்பு செட்டு பாசன விவசாயிகளுக்கு மட்டும்தான் பயன்படும் என்ற நிலை உள்ளது. நடப்பாண்டு பம்பு செட்டு பாசனம் மூலம் டெல்டாவில் சுமார் 2 லட்சம் ஏக்கர்  பரப்பில்தான் விவசாயிகள் சாகுபடி செய்து வரு கின்றனர். காரணம் பம்பு செட்டு வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு சென்றுவிட்டனர்.  எதிர்காலத்தில் குறுவை சாகுபடி நேரத்தில் நெல்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு தொகுப்பு திட்டத்தை அறி வித்துள்ளது. ஆனால் அரசியல் செல்வாக்கு படைத்தவர்களும், அதிகாரத்தில் இருப்பவர் களும்தான் இந்த திட்டத்தில் முழு பலனை அடைகின்றனர்.   குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டிருப்பது நியாயமல்ல. தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்புத் திட்டத்தின்படி, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல்  சாகுபடி செய்யப்படும் பரப்பளவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. டெல்டா மாவட்டங்களில் எப்போதும் குறுவை  இலக்கு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தபோதிலும் தற்போது ஆறுகளில் நீர் வரத்து இல்லாததால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது, இதனை கணக்கில் கொள்ளாமல் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே  குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப் பது நிறைவானதாக இல்லை. எனவே குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு. திட்டம் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.  அதோடு தமிழ்நாடு அரசு உண்மையான குறுவை சாகுபடி விவசாயிகளை அடையாளம் கண்டு தொகுப்புத் திட்டத்தின் பலன் சென்றடை கின்றதா என கண்காணிக்க வேண்டும். அப்போது தான் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இந்த தொகுப்புத் திட்டம் கைகொடுக்கும்.