states

img

தனியார் நிறுவனங்களை மூக்குடைத்த இந்திய விமானப்படை

புதுதில்லி, டிச.23- இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான பணியை பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ(இந்திய தொலைபேசி நிறுவனம்) பெற்றுள்ளது. இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு வசதிகள் 3ஜி தொழில்நுட்பத்துடன் தற்போது இயங்கி வருகிறது. விமானப்படைக்கென்று தனியாக ஏர் போர்ஸ் செல்லுலார் என்ற இணைப்பு வளையம் உருவாக்கப்பட்டது. அதன் போர் மற்றும் போர் சாரா திறன்களை சரியான வகையில் இயக்க இந்த தகவல் தொடர்பு வசதிகள் மிகவும் முக்கியமானவையாகும். இந்த வசதிகள் உருவாக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட கருவிகள் பிப்ரவரி 2022ல் காலாவதியாகி விடும் என்று கணிக்கப்பட்டது.  தற்போது அவற்றின் காலம் முடியவிருப்பதால் 4 ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுடன் கூடிய தகவல் தொடர்புக்கு விமானப்படை மாற விரும்புகிறது.

ஒரு ஆண்டுக்குள் இந்தத் திறன் மேம்பாட்டை அடையும் வகையிலும், விமானப்படையின் திறன்களில் எந்தவித சமரசமும் செய்யாத வகையிலும் “முன்மொழிவுக்கான வேண்டுகோளை” வெளியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தகவல்தொடர்பு வளையத்தின் முக்கியத்துவம், குறிப்பாக அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பு குறித்த ரகசியங்களின் பாதுகாப்பு கருதி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த முன்மொழிவுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் அழைப்பதன் நோக்கமாக இருந்தது. இருப்பினும், இந்த வேண்டுகோளை விடுப்பதற்கு முன்பாக தனியார் நிறுவனங்களிடமும் விமானப்படை ஆலோசனை நடத்தியது.

இது குறித்த விளக்கக்காட்சியுடன் அவர்களின் முன்மொழிவுகளையும் கேட்டறிந்தனர். திட்டத்தின் துவக்கத்திலிருந்து நிறைவுப்பகுதி வரையில் எந்த நிறுவனத்தாலும் முழுமையாக இயங்க முடியாது என்பது அதில் தெரிந்தது. இடையில் வெவ்வேறு நிறுவனங்கள் அல்லது நபர்களின் பங்களிப்பு அந்தத் தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டது. இது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஆபத்தை விளைவிக்கலாம் என்ற கருத்து விமானப்படை அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. இதனால் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.ஐயிடம் இந்தத் திட்டத்தை ஒப்படைக்க இந்திய விமானப்படை முடிவு செய்திருக்கிறது.  இதுகுறித்து தனியார் நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. அவர்கள் பல்வேறு அம்சங்களை முன்வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் இந்திய விமானப்படை விடையளித்துள்ளது:

தனியார் நிறுவனங்களின் கருத்து - முன்மொழிவுக் கான வேண்டுகோள் இந்திய விமானப்படையின் இணையதளத்திலோ அல்லது அரசின் இணையவழி சந்தையிலோ பதிவு செய்யப்படவில்லை. இந்திய விமானப்படையின் எதிர்வினை- பாது காப்பு தொடர்பான காரணங்களுக்கான அது பிரசுரிக்கப்பட வில்லை. எந்த வகையான கட்டமைப்பை விமானப்படை வைத்திருக்கப் போகிறது என்பது அனைவரின் பார்வை யிலும் படுவதைத் தவிர்க்கவே இந்த முடிவு.

தனியார் நிறுவனங்களின் கருத்து - தகுதிக்கான நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை வைத்துப் பார்த்தால் அந்நிய நிறுவனங்களுக்கு என்று உருவாக்கப்பட்டவையாகத் தெரிகிறது. இந்திய விமானப்படையின் எதிர்வினை- இல்லை. “இந்தியாவுடன் நில ரீதியான எல்லையைக் கொண்டி ருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் இந்த திட்டத்தைக் கோர தகுதியானதுதான். அதே வேளையில், பொறுப்பான அதிகார மட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் கருத்து - திட்டம் வழங்கப் பட்டுள்ள பொதுத்துறை நிறுவனத்திடம் தொழில்நுட்பம் இல்லை. 4ஜி கருவியை அந்நிய உற்பத்தியாளர்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும். ஏனென்றால், இந்திய உற் பத்தியாளர்கள் இதில் பங்கேற்க தகுதியற்றவர்களாகிவிட்டனர். இந்திய விமானப்படையின் எதிர்வினை - தேர்வு  செய்யப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனம் பெரிய திட்டங் களைக் கையாள்வதில் நிரூபிக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டதாகும். அவர்களிடம் ஆய்வுக்கூடங்கள் உள்ளன. பன்முகத்தன்மை கொண்ட ஆயுதங்களுக்கான தளங்கள் மற்றும் உணரிகள்(Sensors) ஆகியவற்று டனான  பாதுகாப்புத் தகவல் தொடர்பை மேம்படுத்தி, தனித்துவ முள்ளதாக, குறியீடுகளாக மாற்றி ஒருங்கிணைக்கும் பணியை செய்ய வைக்கும் திறன்கள் இந்தப் பொதுத்துறை நிறுவனத்திடம் உள்ளது.

தனியார் நிறுவனங்களின் கருத்து -  பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தியபோது, தனியார் உற்பத்தி நிறுவனங்கள் அதில் பங்கேற்றன. இந்திய விமானப்படையின் எதிர்வினை - திட்டத்தைப் பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனம் தனது சாதன உற்பத்தியாளரைத் தேர்வு செய்து கொள்ளலாம். பொதுத்துறை மூலமாக இந்தத் திட்டத்தில் பணிபுரிய எந்தத் தனியார் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை.

தொகுப்பு: கணேஷ் 
செய்தி ஆதாரம் - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(டிசம்பர் 23)

;