states

img

இந்துத்துவா மதவெறியை முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுக - சிபிஎம்

இந்துத்துவா மதவெறியை முறியடித்திட, மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் செப்டம்பர் 15-16 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளியன்று மாலை 4 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அரசியல் தலைமைக்குழு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியதாவது:

இந்துத்துவா மதவெறியை முறியடித்திட மதச்சார்பற்ற சக்திகளை விரிவான அளவில் அணிதிரட்டுக

அரசியல் தலைமைக்குழு, கட்சியின் சுயமான பலத்தை வளர்த்திடவும், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திடவும் தீர்மானித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திடவும், ஜனநாயகத்தைப் பாதுகாத்திடவும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாத்திடவும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாத்திடவும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளையும் ஒருங்கிணைத்திட முயற்சிகளை மேற்கொள்ளும்.

பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது

நாட்டின் பொருளாதார நிலைமையை மிகைப்படுத்தி மோடி அரசாங்கம் என்னதான் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தபோதிலும், உண்மையில் இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பது தொடர்கிறது. சர்வதேச ரேட்டிங் ஏஜன்சியான  ஃபிட்ச் (International rating agency Fitch), 2023ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்று கணித்திருக்கிறது. அதேபோன்றே இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் உண்மையான பண மதிப்பீட்டில் வெறும் 0.8 விழுக்காடே உயர்ந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.  

இந்திய ரிசர்வ் வங்கியின் 6 விழுக்காடு உச்சவரம்பையும் தாண்டி, உணவுப் பொருள்களின் விலைஉயர்வுகளால் பணவீக்கம் பாய்ச்சல் வேகத்தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக உயர்ந்திருக்கிறது. சில்லரைப் பணவீக்கமும் ஆகஸ்ட்டில் 7 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் 7.62 விழுக்காட்டைக் கடந்திருக்கிறது. கிராமப்புற இந்தியாவின் நிலைமை பணவீக்கம் 7.15 விழுக்காட்டிற்குச் சென்றிருப்பதால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (industrial output growth)யும், ஜூனில் 12.7 விழுக்காடாக இருந்த நிலையிலிருந்து, ஜூலையில் 2.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபோன்றே நுகர்வுப் பொருள்கள் உற்பத்தியும் ஜூனிலிருந்ததைவிட 3 விழுக்காடு குறைந்திருக்கிறது.

இவற்றின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டமும் நாட்டில் மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்றிருக்கிறது. தேசிய குற்றப் பதிவு நிலையம் (NCRB-National Crime Records Bureau), 2021ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் நாட்கூலித் தொழிலாளர்கள் என்று ஏற்கனவே கூறியிருக்கிறது.  

செப்டம்பர் பிரச்சாரம்

மத்தியக்குழு, செப்டம்பர் 14 முதல் 24 வரையிலும் மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்துள்ள சுமைகளுக்கு எதிராகவும், ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திடவும், நாடு முழுதும் பல்வேறு வடிவங்களில் பிரச்சாரங்களை நடத்திடவும் மாநில அளவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுடன் நிறைவடைய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.

பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் அளிப்பதையும், கூட்டுக்களவாணி முதலாளிகள் வங்கிகளில் வாங்கியுள்ளக் கடன்களைத் தள்ளுபடி செய்வதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றுக்குப் பதிலாக இவ்வளங்களை,  வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள்

2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் 15 விழுக்காடு அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதையும், இதில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிரான தண்டனைகள் என்பது மிகவும் அற்ப அளவிலேயே இருப்பதையும் அரசியல் தலைமைக்குழு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இரு தலித் சிறுமிகள் மிகவும்  பயங்கரமான முறையில் பாலியல் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு சீர்குலைந்திருப்பதன் பிரதிபலிப்பாகும்.  

ஹைதராபாத்-பாஜக மீண்டும் வரலாற்றைத் திரிக்கிறது

1948 செப்டம்பர் 17 அன்று ஹைதராபாத் நிஜாம் இந்திய ஒன்றியத்திடம் சரணடைந்தது. அதுவரையிலும் தனியாக இருந்த நாடு, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இந்த தினத்தை ‘விடுதலை’ (‘liberation’) பெற்ற தினமாக அனுசரித்திட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பிரகடனம் செய்திருக்கிறது. அதன் நோக்கம் இவ்வாறு ஹைதராபாத் நிஜாம் முஸ்லீம் ஆட்சியாளர்களிடமிருந்து ‘விடுதலை’ செய்யப்பட்ட தினம் என்று கூறி மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு வரலாற்றை வேண்டுமென்றே திரித்து, மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறது.

1946இல் மிகவும் கொடூரமான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இது நிஜாமுடைய எதேச்சாதிகார ஆட்சியைக் கணிசமான அளவிற்கு நலிவடையச் செய்தது. 1948 செப்டம்பர் 13 அன்று மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கை, நிஜாம் ஆட்சியாளர்களைச் சரணடையச் செய்வதற்கான கடைசி துருப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அது 1948 செப்டம்பர் 17 அன்று சரணடைந்தது.

உண்மை வரலாறு இவ்வாறிருக்கையில் அதனை ‘விடுதலை’ பெற்ற தினமாக ஆர்எஸ்எஸ் இப்போது உரிமை கொண்டாடுவது கேலிக்குரியதாகும்.  மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்தார் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். இந்தத் தடை 1948 பிப்ரவரி 4இலிருந்து ஜூலை 11 வரை நீடித்தது. நிஜாமைச் சரணடைய வைப்பதில் ஏதாவது பங்கினை பாஜக கூறினால் அது கேலிக்குரிய ஒன்றாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த தினத்தை ஆயுதப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூரும் தினமாக அனுசரித்திடும், நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்காகப் போராடிய லட்சக்கணக்கான விவசாயிகளின் விடுதலைப் போராட்டத்தைதையும் அதில் பலியான எண்ணற்ற தியாகிகளின் வரலாற்றையும், நினைவு கூர்ந்திடும்.  இத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளின் எழுச்சிகள் நடைபெற்றன. ஆயுதந்தாங்கிய தெலங்கானா விவசாயிகள் போராட்டமானது, சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்திருத்தங்கள் பிரச்சனையை ஒரு மையமான பிரச்சனையாகக் கொண்டு வந்தது.

மத்தியக் குழுக் கூட்டம்

மத்தியக் குழுக் கூட்டம், 2022 அக்டோபர் 29-31 தேதிகளில் தில்லியில் நடைபெறும்.

(தமிழில்: ச.வீரமணி)

 

;