தில்லியில் 1700 காவலர்களுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துவங்கிய நிலையில் தில்லியில் கடந்த வாரம் முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொடா்பான வழிகாட்டுதல்கள் மீறுவதைக் கண்காணிக்கக் காவல் துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காவலர்களிடையே தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முன்னதாக, சுமார் 1,000 தில்லி காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பாதிப்பு 1,700 ஆக அதிகரித்துள்ளது. தில்லி காவல்துறை தலைமையகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்குத் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது. பாதிப்பு விகிதம் 25,65 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மேலும், ஒரேநாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,200 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.