புதுதில்லி, டிச. 3 - பிரபல தேர்தல் வியூக வகுப்பாள ரான பிரசாந்த் கிஷோர், அண்மை யில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். இந்த தேர்தலில் திரிணாமுல் வெற்றிபெற்றதால், பிரசாந்த் கிஷோர் நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்த லுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் நீட்டித்தது. திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி யை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதும் கிஷோருக்கு தரப்பட்ட பணியாகும். ஆனால், பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரஸ் இதற்கு குறுக்கே வரும் என்பதால், அந்தக் கட்சியை இப்போதே பலவீனப்படுத்தி, அதனை பின்னுக்குத் தள்ளும் திட்டத்தை மம்தா-வுடன் இணைந்து கிஷோர் கையில் எடுத்துள்ளார்.
ஒருபுறம் மம்தாவும், மற்றொரு புறம் கிஷோரும் காங்கிரசை குறி வைத்து தாக்கி வருகின்றனர். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற ஒன்று இருக்கிறதா? அது எங்கே இருக்கிறது?” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பிய நிலையில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை” என்று பிரசாந்த் கிஷோர் தன் பங்கிற்கு தாக்குதல் தொடுத்தார். “எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி த்துவம் முக்கியமானது. ஒரு வலிமை யான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற கருத்தும் முக்கியமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவிகிதத் தோ்தல் களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு என்பது தனிநபருக்கு (ராகுல் காந்திக்கு) இறைவனால் நேரடியாக வழங்கப்பட்டுள்ள தெய்வீக பதவி அல்ல.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமை ஜனநாயக முறையிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்” என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளார். “எந்தக் கொள்கை வரம்புக் குள்ளும் இல்லாத ஒரு தொழில்முறை நிபுணர் (கிஷோர்), ஒரு அரசியல் கட்சி குறித்தோ, தனிநபர் குறித்தோ கருத்து தெரிவிக்கலாம்.. ஆனால் எங்களின் (காங்கிரசின்) அரசியல் எல்லையை அவர் நிர்ணயிக்க முடியாது. அவரால் (கிஷோரால்) விவாதிக்கப்படும் தனிநபர் (ராகுல் காந்தி) ஆர்எஸ்எஸ்-ஸிடம் இருந்து போராடி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தனது ‘தெய்வீகக்’ கடமையைத்தான் தொடர்கிறார்..!” என்று பவன் கேரா குறிப்பிட்டுள்ளார்.