‘பெரிய சுடுகட்டில் கனலாய் தொடரும் கேரளத்தின் அழியாத போராட்ட உணர்வு’
ஆலப்புழா கேரளத்தின் அன்புக்குரிய நாயகன் வி.எஸ். அச்சுதானந்தன், புன்னப்புராவின் பெரிய சுடுகட்டில் கனலாய் தகிக்கிறார், அங்கு போராட்டத்தின் கனல்களும் ஒருபோதும் இறக்காது. இறுதி ஊர்வலம் கடந்து வந்த அனைத்து சாலைகளும், கொட்டும் மழையில், மக்கள் பெருங்கடலாய் மாறின. “எங்கள் இதய ரோசாவே.. வி.எஸ்.சே...” என்ற அதே முழக்கத்துடன் உணர்ச்சிப் பெருக்கில் கூடி யிருந்த மக்கள் முழக்கமிட்டனர். புரட்சிகர நாயகன் வி.எஸ்.சின் வீரஞ் செறிந்த போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் கேரளத்தின் ஒவ்வொரு தெருவையும், சந்திப்பையும் நிறைத்தனர். அவர்கள், ஆச்சரியப்படத்தக்க ஒழுக்கத்துடன் வி.எஸ்.ஸின் அன்பிற்கு அஞ்சலி செலுத்தினர். தலைமுறைகளால் போற்றப்படும், தோழர் வி.எஸ்.சின் உரிமைப் போராட்டங்கள், ஒவ்வொரு மனிதனிலும் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கு சாலையோரங்கள் சாட்சியமளித்தன. அதனாலேயே, 150 கி.மீ. தூரத்தை 29 மணி நேரத்திற்குப் பிறகே கடக்க முடிந்தது. கேரளம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதி ஊர்வலமாக தோழர் வி.எஸ்.சின் இறுதி ஊர்வலம் அமைந்தது. இறுதியாக, ஆலப்புழா பெரிய சுடுகாட்டில் உள்ள புன்னப்புரா தியாகிகள் மண்டபத்திற்கு அருகில் தகன நிகழ்வு தொடங்கியதும், அங்கி ருந்த மக்கள் பெருங்கடல், சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்ட வரலாற்றை யும், வி.எஸ்.ஸின் நினைவுகளையும் தலை முறைகளுக்கு மரியாதையுடன் கையளித்தனர். ஒவ்வொருவரும் அந்த புரட்சிகர துணிச்சலை ஒரு உறுதிமொழியாக எடுத்துக் கொண்டு முழக்கமிட்டனர். வி.எஸ். உடல் வைக்கப்பட்ட பெரிய சுடுகாட்டின் தகனமேடை நோக்கி இரவு ஒன்பது மணிக்குப் பிறகும், மக்களின் வருகை தொடர்ந்தது. 29 மணி நேர இறுதி ஊர்வலம், மக்கள் பெருங்கடலைக் கடந்து, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பொது தரிசன மேடைகளைக் கடந்து, மிகவும் மெதுவாகவே தகன மைதானத்தை அடைய முடிந்தது. அதைத்தொடர்ந்து, சுரண்டல் அமைப்பின் துப்பாக்கி முனைகளால் அடித்து நொறுக்கப் பட்ட கால்களுக்கு அரசு முழு மரியாதையை வழங்கியது. பின்னர் சிதைக்கு தீ மூட்டினார் வி.எஸ்.ஸின் மகன் வி.ஏ. அருண்குமார். நினைவுகள் கனன்று கொண்டிருக்க ஒவ்வொருவரும் அவர்கள் கொண்டுவந்த மலர்களை அர்ப்பணம் செய்து திரும்பினர். வி.எஸ்.ஸின் நினைவுகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபியும், முதல்வர் பினராயி விஜயனும் மனம் உடைந்தாலும் தளராத உறுதியுடன் சுருக்கமான வார்த்தைகளில் பேசினர். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. கலைந்து செல்ல மனமில்லாமல், மக்கள் தங்கள் விருப்பமான தலைவரின் போராட்ட உணர்வை தங்கள் இதயங்களில் உறுதி எடுத்துக் கொண்டவர்களாக உணர்ச்சியுடன் முழக்கங்களை தொடர்ந்தனர்....வி.எஸ். இல்லை என்று யார் சொன்னது. ஜீவிக்கின்றார் ஜீவிக்கின்றார் எங்களிலூடே....!