states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சரித்திரம் படைத்த விராட் கோலி..

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல்  இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதமடித்து  அசத்தினார். கோலி சதமடிப்பது வழக்கமான விஷயம்தான் என்றாலும், மேற்கு  இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த போட்டி கோலிக்கு 500-வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் ஐநூறாவது சர்வதேச போட்டியில் சதம் அடித்த  முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை விராட் கோலி படைத்தார். இதுபோக 500 ஆவது டெஸ்ட் போட்டியில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் கோலி (76 சதம்) இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை (75 சதம்) பின்னுக்குத்தள்ளி முதலிடத்துடன் மற்றொரு உலக சாதனை படைத்துள்ளார். 

‘மால்டா சம்பவத்தை மணிப்பூருடன் ஒப்பிடக்கூடாது’

“மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நெரிசல் மிகுந்த சந்தையில் இரண்டு  பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கும் சம்பவம்  கண்ட னத்துக்குரியது. இது மேற்கு வங்க அரசாங்கத்தின் அராஜகத்திற்கு ஒரு உதா ரணம். நாட்டின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் மால்டா சம்பவத்தை மணிப்பூர் சம்பவத்து டன் ஒப்பிடக்கூடாது. மணிப்பூர் சம்பவம் மிக கொடுமையானது.” என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வராக பூபேஷ்  பாகேல் உள்ளார். சத்தீஸ்கர்  சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் அரசுக்கு எதிராக பாஜகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.  13 மணி நேர விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. 

பொறியியல் படிப்பு: கலந்தாய்வு தொடங்கியது

சென்னை,ஜூலை 22- பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டு ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 378  இடங்கள் உள்ளன. 2023 -24 ஆம் கல்வியாண்டு மாணவர்  சேர்க்கை தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் மாணவர்  சேர்க்கை கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், மருத்துவ கலந்தாய்வு குறித்த அறிவிப்பு  வெளியாகாததால் பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூலை 22 இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு  இணையவழியில் சனிக்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான 38 இடங்களுக்கு 226 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களுக்கு 89 பேரும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 579 இடங்களுக்கு 26 பேரும் (7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு) கலந்தாய்வில் பங்கேற்றனர்.  இதைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.