புதுதில்லி, அக். 10 - பசுவை தேசிய விலங்காக அறி விக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள் ளது. மேலும், “இதுதான் எங்களுக்கு வேலையா?” என்றும் நீதிபதிகள் காட்டமாக கேட்டுள்ளனர். 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்தது முதலே, ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசுப் பாதுகாப்புக்கு என தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கு பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு பணம் அள்ளி இறைக்கப்பட்டுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், ‘பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்’ என கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். மேலும் பசுப் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமை. இதை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். தேசத்தின் கலாச்சாரம், நம்பிக்கைகள் பலவீனமானால் நாடும் பலவீனமாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ‘கோவன்ஷ் சேவா சதன்’ (Govansh Sewa Sadan) என்ற தன்னார்வ அமைப்புஉச்ச நீதி மன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், பசு வைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ் ஓஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, “பசுவைத் தேசிய விலங்காக அறிவிப்பதுதான் எங்கள் வேலையா? இதில் என்ன அடிப்படை உரிமைகள் மீறப் பட்டுள்ளன?” என்று கேள்வி எழுப்பி யதுடன், மனுவை விசாரிக்கவும் மறுத்துவிட்டனர்.