பிரதமர் மோடி அடுத்ததாக பிரான்ஸ் புறப்படுகிறார்!
புதுதில்லி, ஜூலை 10 - மணிப்பூர் 2 மாதங் களுக்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி அதுபற்றி எந்த கவலையும் இல்லாமல், அமெரிக்கா, எகிப்து என்று வெளிநாடு களுக்குச் சென்று வந்தார். அடுத்ததாக தற்போது, ஜூலை 13, 14 தேதிகளில் பிரான்ஸ் நாட்டு சுற்றுப்பய ணத்திற்கு புறப்படுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடியும், பிரான்ஸ் ஜனாதி பதி இம்மானுவேல் மேக்ரா னும், கால நிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள், இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதிக்க இருப்ப தாக கூறப்படுகிறது.
மாநிலங்களவைக்கு ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்
புதுதில்லி, ஜூலை 10 - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ஏற்கெனவே குஜராத் மாநிலத்திலிருந்தே மாநிலங்களவை உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடை கிறது. இதையடுத்து மீண்டும் குஜராத்திலிருந்தே மாநி லங்களவைக்குப் போட்டி யிட திங்களன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்துள் ளார். குஜராத்தில் காலி யாகும் 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தில் மொத்த முள்ள 11 மாநிலங்களவை இடங்களில் 8 பாஜக வசமும், 3 காங்கிரஸ் வசமும் உள்ளது குறிப்பிடத் தக்கது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் துணைமுதல்வர் கைது
காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி. சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை, முன்னாள் துணை முதல்வர் ஓ.பி. சோனி மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், ஆனால், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘இமாச்சலுக்கு தமிழக அரசு உதவும்’
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவமழை ஏற்படுத்தி யுள்ள பேரழிவின் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். பேரழிவுகளை காட்டும் காணொலிகள் கவலை யடைய வைத்துள்ளது. தமிழக அரசின் முழு ஆதரவும், உதவி யும் இமாச்சலுக்கு அளிப்போம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு உறுதி அளிக்கிறேன். இமாச்சல் சகோதர, சகோதரி களுடன் தமிழகம் ஒற்றுமையாக நிற்கும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தொடருக்கான திமுக எம்பிக்கள் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரையொட்டி, திமுக எம்பிக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 14 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தரவரிசைப் பட்டியல் ஜூலை 16-ல் வெளியீடு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டி யல் ஜூலை 16 அன்று வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். அகில இந்திய கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ்நாட்டில் கலந்தாய்வுக்கான தேதி வெளியிடப்படும். தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒன்றிய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேனா சின்னத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணா நிதிக்கு பேனா சின்னம் அமைக்க ஒன்றிய கடலோர ஒழுங்குமுறை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் வளத்தை பாதுகாக்கக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என தள்ளுபடி செய்தது.
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
எந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உரு வாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயல்பாடு கள் குறித்து குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பி யுள்ளார். இதன் மீது குடியரசுத் தலைவர் விரைந்து ஒரு நல்ல முடிவெடுத்து தமிழ்நாட்டில் தொடர்ந்து குழப்பம் விளைவித்து வரும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரி வித்துள்ளார்.
மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்
தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு உடனே தலையிட்டு மீன வர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சண்டிகர்-மதுரை ரயில் ரத்து
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சண்டிகர் - மதுரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சண்டிகர் - மதுரை இடையே ஜூலை 12 அன்று 11.35 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனல் மின்நிலையத்தில் பழுது
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு வடசென்னை அனல் மின்நிலை யத்தில் திங்களன்று காலை கொதிகலன் குழாய் கசிவு கார ணமாக, மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டது. அவற்றை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடு பட்டு வருகின்றனர். இதனால் அந்த அலகில் மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நடிகர் விஜய் அரசியல் முஸ்தீபா?
அரசியல் முஸ்தீபில் இருக்கும் நடிகர் விஜய், தனது பனை யூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் செவ்வா யன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதில், ‘ஜூலை 15’ காமராஜர் பிறந்த நாளை வெகு விமரி சையாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்க ரின் பிறந்த நாளன்று அவரது சிலைகளுக்கு மாலையணி விக்குமாறு தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டு, அவர்களும் மாலையணிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர்களுக்கு அதிகாரத்தில் தலையிடும் அதிகாரம் இல்லை!
“ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர்வாகி. ஆளுநர்களுக்கு நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். சீர்குலைவு மற்றும் தலையீடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெறுப்பைத் தூண்டுகின்றனர். அந்த வகையில், ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்குமாறு மு.க. ஸ்டாலின் கேட்பது சரியானதே!” என்று ஒன்றிய முன்னாள் அமைச்ச ரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வை திசைத் திருப்பவே பொது சிவில் சட்டம்
“பொது சிவில் சட்டம் தொடா்பாக வலுவான எந்த முன்மொழிவும் இல்லை. இச்சட்டம் குறித்து நாடாளுமன்றத்திலோ, நிலைக்குழுக்களிலோ எந்த நடைமுறையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியல் கருவியாகவே, இந்த விவகாரத்தை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துகிறது. விலைவாசி உயா்வு குறித்து எந்த பேச்சும் எழுந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், பொது சிவில் சட்ட விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. காற்றாடி பறக்க விடுவதுபோல, பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுகள் பறக்க விடப்பட்டுள்ளன” என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் விமா்சித்துள்ளார்.
மணிப்பூர் இணையதள சேவை முடக்கம்: இன்று விசாரணை
மணிப்பூரில் இணையதள சேவை முடக்கத்தை திரும்பப் பெறுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மணிப்பூர் பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கான விசாரனையை செவ்வாய்க்கிழமையன்று உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அப்போது அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துபவர்கள், கலவரத்தை அடக்க முடியாதா?
“பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கலைக்க வேண்டும். அவர் இந்த நாட்டின் ஒருமைப் பாட்டை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா வில் ஜனநாயகம் நிலவுகிறது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்க அவருக்கு இதுவே சிறந்த வாய்ப்பு. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட மதச்சார்பின்மை என்பது ஒரு அலங்காரச் சொல் அல்ல, இயற்றப்பட்ட தத்துவம். எந்த மதத்தையும் பின்பற்றவும், செயல்படவும் உரிமை வழங்கும் நமது அரசியலமைப்பு ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதில் பெயர் பெற்ற அரசால் தற்போது 2 மாதங்களுக்கு மேலாக நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது ஏன்?” என்று சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கார்டினல் மார் பேலியோஸ் கிளீமிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஜோல் மீது ஏன் ஆத்திரம்?
“இன்றைய அரசியல் தலைவர்கள் படிக்காத வர்கள் என்ற நடிகை கஜோலின் கருத்து பொதுவானது. நாட்டில் உள்ள படிக்காத தலைவர்களைப் பற்றி கஜோல் பேசும்போது பாஜ்பாய்கள் (பாஜக) மட்டும் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?” என காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலுக்கு ஷர்மிளா நன்றி
“மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ராஜ சேகர ரெட்டியின் 71-ஆவது பிறந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். ஆந்திரப் பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவர் எப்போதும் மக்களால் நினைவுகூரப்படுவார்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா நன்றி தெரிவித்துள்ளார். ஷர்மிளா விரைவில் தனது கட்சியை காங்கிரசில் இணைக்கப் போவதாக பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு எங்கிருந்து இவ்வளவு நிதி வந்தது
“ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை பாஜக குறிவைக்கிறது. மக்களின் பணத்தை கொள்ளையடித்து மால்கள், ஹோட்டல்கள் போன்று பல மாநிலங்களில் பாஜக அலுவலகங்களை உருவாக்கி இருக்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு எங்கிருந்து இவ்வளவு நிதி கிடைத்தது என்று பதில் சொல்ல வேண்டும்” என பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான ராப்ரி தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
சேவைக் கட்டுப்பாடு தொடர்பான அரசாணையை எதிர்த்து தில்லி அரசு தொடர்ந்த மனு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்களன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசாணைக்கு தடை கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 17 அன்று பரிசீலிக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை; போலீஸ்காரர் கொலை
மணிப்பூரில் காங்சுப் பகுதியில் ஞாயிறன்று இரவு முழுவதும் வன்முறை சம்பவம் அரங்கேறியது. பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தனிக்கட்சி உருவாக்கிப் பாருங்கள்: சரத் பவார் சவால்
“பாஜகவுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. அதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள், தங்கள் சொந்தக் கட்சியை உருவாக்கிப் பாருங்கள். மேலும் தங்கள் கட்சியின் சித்தாந்தத்தையும் அறிவிக்க வேண்டும்” என அஜித் பாவருக்கு சரத் பவார் மறைமுக மாக சவால் விடுத்துள்ளார்.
நிலவு பயணம் : ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா
“நாட்டின் நான்காவது நிலவு பயணம் 2026இல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த பயணத்திற்கு ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியுடன் (ஜாக்ஸா) இஸ்ரோ திட்டமிட வாய்ப்புள்ளது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறியுள்ளார். இந்தியாவின் மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான்-3 வரும் வெள்ளியன்று விண்ணில் ஏவப்படுகிறது.
கனமழை : பஞ்சாபில் பள்ளிகளுக்கு விடுமுறை
வடமாநிலங்களில் கடந்த ஒருவாரமாக மழை புரட்டியெடுத்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முக்கிய பகுதியான பாட்டியாலா மற்றும் மொஹாலி பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 13 வரை பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் அறிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
வெளிநாடுகளுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் சூடான் இறங்கியுள்ளது. கடுமையான உள்நாட்டுச் சண்டை நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பொது மக்கள் பாதிக்கப்படாவண்ணம் இருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை அந்நாட்டின் கூட்டாளிகளே ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிட்டன், ஸ்பெயின், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த முடிவைத் தாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டன. வேறு வழியில் உதவி செய்வோம். ஆனால் தடை செய்யப்பட்ட குண்டுகளைத் தர மாட்டோம் என்று கூறியுள்ளன.
தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று வடகொரியா எச்சரித்திருக்கிறது. தங்கள் நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.