states

img

பக்காப் படியும் பட்டணம் படியும்

மதராஸ் மாகாணத்தில் அன்றைய தினம் நிலவிவந்த அளவீட்டு முறைகள் மாகாணம் முழுமைக்கான ஒரே தன்மையை கொண்டிருக்க வில்லை. ஜில்லாக்களுக்கிடையில் மட்டுமின்றி, அதற்கும் கீழுள்ள தாலுகாக்கள் அளவிலும் வெவ்வேறு முறைகள் நடைமுறையில் இருந்திருக்கிறன.  அன்றைய மதராஸ் மாகாணம் இன்றைய தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா போன்ற இன்றைய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது.  வெவ்வேறுவிதமான நிறுத்தல், முகத்தல், அளத்தல் ஆகியவற்றுக்கான அளவீட்டு முறைகளும் அலகுகளும் இருந்து வந்திருக்கின்றன. தானியத்தை முகந்து அளப்பதிலும், தூரத்தை நிர்ணயிப்பதிலும், பொருளை எடையிடுவதிலும் மாகாணத்திற்குட்பட்ட ஜில்லாக்களில் ஒரே மாதிரியான முறை பின்பற்றி வராதபோது இந்தியாவெங்கிலும் ஒரே மாதிரியான அலகுகளுக்கு சாத்தியமே இல்லை. 

பட்டணத்தை ஒட்டிய செங்கல்பட்டு ஜில்லாவில் ஒரு குண்டு விறகு என்பது 56 பவுண்ட் எடையைக் கொண்டதாக இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட இன்றைய எடை 25 கிலோவிற்கு சமமாகும். முகர்தல் அளவையில் எட்டு ஆழாக்கு ஒரு பட்டணம் படியாக வும், நாலு பட்டணம் படி ஒரு ஜோடு திருவள்ளூர் என்றும் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.  தமிழ்பேசும் ஜில்லாக்களான வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் தோலா, பலம், வீசை, தூக்கு என்ற நிறுத்தல் அலகுகள் இருந்திருக்கின்றன. ஒரிசாவின் ஒரு பகுதியான கஞ்சம் ஜில்லாவிலும் தோலா, சேர், வீசை, மணங்கு, கண்டி என்ற அலகு முறைகள் வெவ்வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. தமிழகத்தில் ஒரு சேருக்கு 24 தோலா, ஆனால் கஞ்சத்திலோ ஒரு சேருக்கு 80தோலா என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.  தஞ்சை, திருச்சி போன்ற ஜில்லாக்களில் தானிய அளவுக்கு படி, மரக்கால், கலம் என்றும் கோதாவரி ஜில்லாவில் கிட்டா, சோலா, அட்டா, குஞ்சம் என்றும் தென் கனராவில் பாவு, கலசிக்கி, மூடை, கோர்கி என்றும் தனித்தனி அலகு முறைகள் இருந்திருக் கின்றன. தானியத்தை அளப்பதில் பெல்லாரியில் ஒரு சேர் 84 தோலாக்களை கொண்டதாக இருக்கையில், அனந்தப் பூரில் 88 தோலாக்கள் ஒரு சேராக இருந்திருக்கிறது

தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி ஜில்லாக்களில் பெரும்பாலும் மரக்கால் என்பது தானியத்தை அளப்பதற்கான அலகுகளின் முக்கியமானதொன்றாக இருந்து வந்திருக்கிறது, இருப்பினும் இடத்திற்கு இடம் மரக்காலின் அளவு மாறியிருந்திருக்கிறது. தென் ஆற்காட்டில் கும்பாசியாக அளக்கப்பட்ட இரண்டு பட்டணம் படி ஒரு மரக்காலாக இருக்கையில் மதுரையில் நாலு படி ஒரு மரக்காலாக இருந்திருக்கிறது. தஞ்சை, திருச்சி ஜில்லாக்களில் இரண்டு படி ஒரு மரக்கால் என்ற அளவு முறை பின்பற்றி வரப்பட்டிருக்கிறது. தென் ஆற்காட்டில் 576 பட்டணம் படி என்பது 24 கலம் அல்லது ஒரு வண்டிச்சுமையாக இருக்கையில், பக்கத்தில் உள்ள பாலூரில் 432 பட்டணம் படியே 36 கலம் எனும் வண்டிச் சுமையாக இருந்திருக்கிறது. இதைத்தவிர அளப்பதிலும் கும்பாசியாக அளப்பது, தலை தட்டி அளப்பது என்ற வேறுபாடுகள் ஊருக்குத் தக்கவையாக இருந்திருக்கின்றன.  இந்நிலையில், ஒன்றுபட்ட அலகுமுறையின் தேவையை விற்போரும் வாங்குவோரும் மட்டுமின்றி அரசும் உணர்ந்திருக்கக்கூடும். இதன் முதல் கட்டமாகத்தான் பட்டணம் படி எனும் பக்காப் படி உருவாகியிருக்கிறது. ஆங்கிலத்தில் இது மெட்ராஸ் மெஷர் என்று அழைக்கப்பட்டது. ஒரு பட்டணம் படியென்பது நாலரை அங்குல விட்டமும், ஆறே முக்கால் அங்குல ஆழமும் கொண்டதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் நிறையளவு 108 கன அங்குலமாகவும் 62.5 திரவ அவுன்ஸ் பிடிக்கத்தக்கதாக வும் இருந்தது. சைதாப்பேட்டை மற்றும் மதராஸில் தலை தட்டிய முறையிலும் மற்ற இடங்களில் கும்பாசியாகவும் அளக்கும் முறை இருந்து வந்திருக்கிறது. இந்தப் பட்டணம் படிதான் நிர்ணயிக்கப்பட்ட அலகுமுறையின் கீழான படி என்பதைக் குறிப்பிடுவதற்கான சொல்லே பக்காப் படி என்பதாகும். இன்னொன்று பட்டணம் படியென்று தமிழில் சொல்லப்பட்டாலும், மதராஸ் மெஷர் என்ற ஆங்கில வார்த்தை மதராஸ் பட்டணம் உருவான பின்னர் நிர்ணயிக்கப்பட்ட அலகு முறை இதுவே என்பதை உணர்த்துகிறது . 

இப்படி நிர்ணயிக்கப்பட்ட பட்டணம் படியால் அளக்கப்படும் பொருட்களின் எடையளவு என்பது பொருளின் தன்மைக்கேற்ப நிச்சயம் மாறுபட்டு இருக்கவே செய்யும். எனவே அதன் அடிப்படையில் அதற்கான நிர்ணயிப்புகள் இருந்திருக்கின்றன. முன்னரே குறிப்பிட்டதைப் போன்ற வெவ்வேறுபட்ட அலகு முறைகளைக் கொண்ட பகுதியினரிடையே நிகழக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளை ஒன்று படுத்தும் கருத்தினையே இத்தகைய நிர்ணயிப்புகள் கொண்டிருந்திருக்கின்றன.  இவை அனைத்திற்கும் ஆதார அளவுகோலாக மதராஸ் மெஷர் எனும் பக்காப் படியான பட்டணம் படியே இருந்திருக்கிறது. தோலுடன் கூடிய வேர்க்கட லையை பட்டணம் படியால் தலை தட்டி அளக்கையில் 1.75 பவுண்டாகவும் அதுவே தோலுரித்ததெனில் 2.5 பவுண்டாகவும் எண்ணையாக இருப்பின் 3.5 பவுண்டாக வும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்திருக்கிறது. ஒரு பவுண்ட் என்பது மெட்ரிக் முறையில் 450 கிராமுக்கு சமமானதாகும்.  அனைத்து விதமான தானிய வகைகளும், எண்ணெய் வித்துக்களும், பருப்பு வகைகளும் பட்டணம் படிக்கு நிகரான எடை நிர்ணயிப்புகளை பவுண்டில் கொண்டி ருந்திருக்கிறது. சோளமும் சாமையும் 3.1, குத்திய தினை 2.7, நெல் 2.5, ஆமணக்கு 2.87, எள் 2.57, கொண்டைக் கடலை 3.13, கொள்ளு 3.45. இது தவிர பாலெனில் 4.13 பவுண்ட் ஆகவும் காலன் எனும் அளவு நிகராக 2.57 பட்டணம் படியும் 1 பட்டணம் படி .385 காலனாகவும் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.  காலனிய ஆட்சி விரிவு பெற்றவுடன் இந்தியா முழுமைக்குமான ஒரு அளவீட்டு முறையின் தேவை அரசாங்கத் திற்கு மட்டுமின்றி வர்த்தகம் புரிவோருக்கும் வாங்குவோ ருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் பல்வேறு தருணங்களில் பட்டணம் படியை பக்காப்படியாக்கியது போன்ற ஒன்றிணைப்புக்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பினும் அது பொருத்த மாக அமையவில்லை. இதன் பொருட்டு 1913இல் வைஸ்ராயின் உத்தரவின் பேரில் அமைக்கப் பட்ட குழுவொன்று 180 தானியம் ஒரு தோலா என்ற அடிப்படையில் அளவீட்டு அலகுகளை நிர்ணயம் செய்திட சிபாரிசு செய்தது. அக்குழுவின் சிபாரிசினை கொள்கையளவில் வைஸ்ராய் அரசாங்கம் ஏற்றாலும் இவற்றை அமல்படுத்தும் பொறுப்பினை மாகாண அரசுகளுக்கு அளித்தது. எந்தெந்த துறைகளில் உடனடி தேவையோ அங்கே படிப்படியாக இவற்றை அமல்படுத்திடும்படி வைஸ்ராய் அரசு கேட்டுக் கொண்டது. 

காலனிய ஆட்சி விரிவு பெற்றவுடன் இந்தியா முழுமைக்குமான ஒரு அளவீட்டு முறையின் தேவை அரசாங்கத் திற்கு மட்டுமின்றி வர்த்தகம் புரிவோருக்கும் வாங்குவோ ருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் பல்வேறு தருணங்களில் பட்டணம் படியை பக்காப்படியாக்கியது போன்ற ஒன்றிணைப்புக்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பினும் அது பொருத்த மாக அமையவில்லை. இதன் பொருட்டு 1913இல் வைஸ்ராயின் உத்தரவின் பேரில் அமைக்கப் பட்ட குழுவொன்று 180 தானியம் ஒரு தோலா என்ற அடிப்படையில் அளவீட்டு அலகுகளை நிர்ணயம் செய்திட சிபாரிசு செய்தது. அக்குழுவின் சிபாரிசினை கொள்கையளவில் வைஸ்ராய் அரசாங்கம் ஏற்றாலும் இவற்றை அமல்படுத்தும் பொறுப்பினை மாகாண அரசுகளுக்கு அளித்தது. எந்தெந்த துறைகளில் உடனடி தேவையோ அங்கே படிப்படியாக இவற்றை அமல்படுத்திடும்படி வைஸ்ராய் அரசு கேட்டுக் கொண்டது. 

இதற்கேற்ப மதராஸ் மாகாணத்தில் ரெவின்யு போர்டால் இம்பீரியல் எடை அலகுகள், இம்பீரியல் ரயில்வே எடை அலகுகள், மதராஸ் எடை அலகுகள் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தன.  பவுண்டை அடிப்படை எடையாக கொண்ட அலகு முறையான எடை அலகுகள் என்ற பிரிட்டனின் அளவீட்டு முறைதான் இம்பீரியல் எடை அலகாகும். இது பவுண்ட், ஸ்டோன், க்வார்ட்டர், டன் என்ற பகுப்புகளைக் கொண்ட தாகும். இம்பீரியல் ரயில்வே அளவீட்டு முறை சேர், மணங்கு என்ற பகுப்புகளைக் கொண்டது. மதராஸ் அளவீட்டு அலகுகள் பலம், சேர், வீசை, மணங்கு, கண்டி ஆகிய பகுப்புகளையும் கொண்டிருந்தது.  அந்நாளில் குழந்தைகளுக்கான வாய்ப்பாடு புத்தகங் களில் கணித வாய்ப்பாடு தவிர இது போன்ற மெட்ரிக் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான நிறுத்தல், முகத்தல்,  அளவைகளுக்கான வாய்ப்பாடுகளையும், தமிழ் ஆங்கில மாதங்கள் நட்சத்திரங்கள் பல்வேறு தேச நாணய முறைகள் ஆகியவற்றையும் கொண்டிருந்தது. நாடு விடுதலை பெற்று கிட்டத்தட்ட அறுபதுகள் வரை இத்தகைய அளவீட்டு முறைகளே நடைமுறை யில் இருந்து வந்தது. தலைச் சுமையாக வியாபாரம் செய்யக்கூடியோர் கூட இருபக்கங்களைக் கொண்டதாக இராமல் ஒரு பக்கத்திலேயே எடையிடும் தூக்கு எனும் எடைக்கோலை வைத்திருப்பினும் சேர், பலம் என்ற பகுப்புகளைக் கொண்டதாகவே அதுவும் அமைந்திருந்தது. பின்னரே மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு தேசத்தை கிட்டத்தட்ட ஒன்றிணைத்தது. இதன் தொடர்ச்சியாக மதராஸ் பட்டணத்தின் சுவடு களில் ஒன்றாக இருந்த மதராஸ் மெஷர் எனும் பட்டணம் படியும் மாறி லிட்டர் அலகு வந்தபின், அதுவே பட்டணம் தாண்டிய பக்காப் படியாகிவிட்டது.