states

img

நீங்க பாஜகவின் கைப்பிள்ளையா... இந்தாங்க சின்னம்!

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் தான் நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாமக, மதிமுக, விசிக, அமமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர்  பேரவை, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட  பல கட்சிகள் அங்கீகாரம் பெறுவதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை. அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு பொதுச் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இதில் தங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற  கோரிக்கையை கட்சிகள் முன்வைக்கலாம். ஒன்றுக்கும்  மேற்பட்ட கட்சிகள் ஒரே சின்னத்தை கோரினால் முன்னுரிமை அடிப்படையில் சின்னத்தை ஒதுக்குகிறது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு முன்பு ஒதுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை கர்நாடக மாநி லத்தில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். பம்பரம் சின்னம் கேட்டு மதிமுகவும், பானை சின்னத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளன. ஆனால், இதுவரைக்கும் பதில் இல்லை. பாஜக அணியோடு கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்த அமமுக கட்சிக்கு உடனடியாக ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவின் ஒப்பந்தத்தை  ஏற்றுக் கொண்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த கட்சிக்கு மீண்டும் ‘சைக்கிள்’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். பாமகவும் ‘மாம்பழம்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணி என்றதும் உடனுக்குடன் சின்னம் ஒதுக்கப்படுகிறது. எதிர் அணியில் உள்ளவர்கள் விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்துக் கிடக்கிற போதும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதிலிருந்து தேர்தல் ஆணையம் சுயமாக செயல்படவில்லை என்று உறுதியாகிறது.