states

ஆரணி அணைக்கட்டு திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர், டிச.10- ஆந்திர மாநிலம் சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணி நீர் தேக்கம் உள்ளது. இந்த நீர் தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவு 281 அடியாகும்.  டிசம்பர் 10 அன்று பகல் 2 மணிக்கு நீர் இருப்பு 277 அடியாக உள்ளது.  தற்போது பருவமழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்துள்ளதால் நீர் தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணைக்கட்டின் பாதுகாப்பு கருதி, ஆரணி அணை நீர் தேக்கத்திலிருந்து சனிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விட திறந்துவிடப்பட்டது. எனவே ஆரணி அணை நீர் தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், ஆந்திர மாநில எல்லையான சுருட்டுப்பள்ளி அணைக்கட்டுக்கு கீழ் உள்ள ஆரணி ஆற்றின் தமிழ்நாட்டில் எல்லையான ஊத்துக்கோட்டைக்கு மாலை எட்டு மணிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் முதல் கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டைக்கு இருபுறமும் உள்ள தாராட்சி, கீழ் சிட்ரம்பாக்கம், பேரண்டூர், பெரியபாளையம், பனப்பாக்கம், ஆத்துப்பாக்கம், ஏ.என். குப்பம், மேல்முதல்பேடு, ஏலியம்பேடு, சின்ன காவனம்,  உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக கவனமுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.