states

img

களம் பல கண்ட போராட்டத் தலைவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பின ராகவும் திறம்பட பணியாற்றியவர் தோழர் ஆர்.உமாநாத். இந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழக மக்களின் பேரன்புக்குரிய தலைவராக விளங்கியவர். கேரள மாநிலம் காசர்கோடில் பிறந்தவர். அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டம், உப்புச் சத்தியாகிரகம் என - சுதந்திரப் போராட்டங்களால் சுண்டி இழுக்கப்பட்டவர். கள்ளிக்கோட்டை கிறிஸ்தவ கல்லூரியில் இண்டர்மீடியட் படித்த காலத்தில் மாணவர் சங்கத்தால் ஈர்க்கப்பட்டவர். சுப்ரமணிய சர்மா, பி.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பு; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்டுகள் செயல்பட்ட காலத்தில் அவர்களின் கருத்துக்களால் புடம் போடப்பட்ட தலைவர் ஆர்.உமாநாத். இண்டர்மீடியட் முடித்து பின் அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் பி.ஏ.ஹானர்ஸ் படிக்க அவர் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவர்களை ஈர்த்த தலைவராக மிளிர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் அகற்ற சதி செய்ததாக  கைது செய்யப்பட்ட பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட 7 பேரில் ஆர்.உமாநாத்தும் ஒருவர். சென்னை சிறை, அங்கிருந்து ஆந்திராவில் உள்ள அலிப்புரம், அங்கிருந்து பெல்லாரி என பல சிறைகளுக்கு ஆர்.உமாநாத் மாற்றப்பட்டார். அங்கிருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கோவை, திருச்சி என மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட தொழிலாளர் இயக்கப் போராட்டங்களை தலைமையேற்று நடத்திய காரணத்தால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆர்.உமாநாத்தின் வாழ்க்கை சிறையில் கழிந்தது. இவ்வாறாக தமது பொதுவாழ்க்கையைத் துவக்கி தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்க முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர் தோழர் உமாநாத்.  தலைமறைவு வாழ்க்கையும், நீண்ட சிறை வாழ்க்கையும் அவரது இயக்கப் பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. சென்னை சதி வழக்கு, திருச்சி சதி வழக்கு ஆகியவற்றில் தண்டனை பெற்றவர். கிளர்ச்சி பிரச்சார பேச்சாளர். அவரது வழியில் மக்கள் பணியைத் தொடர உறுதியேற்போம்!