states

எஸ்.சி.- எஸ்.டி. இட ஒதுக்கீட்டை உயர்த்தி கர்நாடக பாஜக அரசு அவசரச் சட்டம்!

பெங்களூரு, அக். 21 - பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தும் அவசரச் சட்டத்திற்கு கர்நாடக பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை  தலைமையில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. இங்கு அடுத்தாண்டு  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, பல்வேறு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இதனொரு பகுதியாக, பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15-இல்  இருந்து 17 சதவிகிதமாகவும், பழங்குடி யினருக்கான இடஒதுக்கீட்டை 3-இல்  இருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்து வதற்கு அண்மையில் முடிவு செய்தது.  இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் வியாழனன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அவசரச் சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு அமைச்சர வையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவு  ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் இட ஒதுக் கீட்டின் அளவு 56 சதவிகிதமாகஉயர்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். இவை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், நிரந்தரச் சட்டம் கொண்டுவரும் வரை காத்திருப்பது என்ற நிலையை மாற்றிக் கொண்டு, கர்நாடக பாஜக அரசு வேகவேகமாக அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

;