மன்ரோதுருத்து (கொல்லம்)
கேரளத்தில் வன்முறை நடத்தி அரசியலில் தங்களது இருப்பை நிலைநாட்ட பாஜக முயற்சிப்பதாக எல்டிஎப் ஒருங்கிணைப்பாளரும் சிபிஎம் கேரள மாநில பொறுப்பு செயலாளருமான ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.கொல்லம் மாவட்டம் மன்ரோதுருத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட சிபிஎம் ஊழியர் மணிலால் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற அவர் பின்னர் செய்தியாளர்களுடன் கூறியதாவது:
மணிலாலின் கொலை தனிப்பட்ட விரோதத்தின் விளைவாக நிகழ்ந்தது என்கிற காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்க முடியாது. சிபிஎம் மாவட்டக் குழு இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறியுள்ளது. உள்ளாட்சி அமைப்பு தேர்தலின் போது எல்டிஎப் வாக்குச் சாவடி அலுவலகம் அருகே ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் சிபிஎம் ஊழியரைக் கொன்றது அரசியல் படுகொலை அல்லாமல் வேறென்ன?. அது மிகப்பெரிய சான்று.கொலையாளி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். குற்றப்பின்னணியைக் கொண்டவர்களைச் சேர்ப்பதன் மூலம் பாஜக வன்முறைகளைத் தூண்டுகிறது. குற்றவாளியின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் பாஜக மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். காவல்துறை விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை. இப்போது நடப்பது ஒரு ஆரம்ப விசாரணை. விசாரணை முன்னேறும் போது, விசயங்கள் தெளிவாகி விடும். இவ்வாறு விஜயராகவன் கூறினார். கொலை நடந்த மன்ரோதுருத்து வங்கி சந்திப்பையும் அவர் பார்வையிட்டார்.
மணிலாலின் வீட்டில்...
வில்லிமங்கலம் நிதிபாலஸில் உள்ள தோழர் மணிலாலின் வீட்டிற்கு ஞாயிறன்று ஏ. விஜயராகவன் சென்று மணிலாலின் மனைவி ரேணுகா மற்றும் மகள் நிதியிடம் ஆறுதல் கூறினார்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மணிலாலுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த சம்பவம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டினர். அவருடன் சிபிஎம் கொல்லம் மாவட்ட செயலாளர் எஸ்.சுதேவன், குன்னத்தூர் பகுதி செயலாளர் டி.ஆர்.சங்கர பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து எல்டிஎப் வேட்பாளர்கள் பி.கே.கோபன், சி பால்ட்வின் உள்ளிட்டோர் சென்றனர்.