கொச்சி, மார்ச் 27- ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரி போராடி வரும் நிலையில், கடும் சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனங்களின் பங்குகளில் இபிஎப் நிதி முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை ஊழலை அம்பலப்படுத்திய பிறகும், அதானி குழுமத்தின் பங்குகளில் EPFO தொடர்ந்து முதலீடு செய்வதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட் ஆகியவற்றின் பங்குகளில் அதிக அளவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) முதலீடு செய்துள்ளது. நிஃப்டி 50, சென்செக்ஸ் பங்குச் சந்தை குறியீடுகளைக் கண்காணிக்கும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (இடிஎப்எஸ்) 15 சதவீத நிதியை முதலீடு செய்கிறது. இதில், நிஃப்டி 50-ஐ கண்காணிக்கும் இடிஎப்களின் மொத்த ஈக்விட்டி முதலீட்டில் 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிஃப்டி 50 குறியீட்டில் அதானி எண்டர்பிரைசஸ் செப்டம்பர் 2022 இல் சேர்க்கப்பட்டது. அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல (எஸ்இஇசட்) பங்குகள் செப்டம்பர் 2015 முதல் நிஃப்டி 50 இல் உள்ளன. இந்தச் சூழலில்தான் தொழிலாளர் வைப்பு நிதி (பிஎப்) பணம் இந்தப் பங்குகளுக்குச் சென்றது. அதானி பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்தது முன்பு தெரியவந்தது. ஆனால், வருங்கால வைப்பு நிதி ஆணையர் நீலம் ஷாமி ராவ், அதானி குழுமப் பங்குகளில் பிஎப் நிதி முதலீடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது. பிஎப் ஆணைய அறங்காவலர்களுக்கும் அதானி பங்குகளில் முதலீடு செய்வது பற்றி தெரியாது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஒ) இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியாகும். 27.73 கோடி ஊழியர்களின் சேமிப்பு இந்நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது வருங்கால வைப்பு நிதியில் இருந்து 15 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. செப்டம்பர் 2016 இல், இந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட தொகை 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 2017 மே மாதம் இது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்யும் ஒன்றிய அரசின் பரிந்துரை, முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. 2018 இல் அரசு முன்வைத்த வாதம், பங்குச் சந்தையில் சாதகமான சூழல் இருப்பதால் அதிகப் பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்ய வேண்டும் என்பதுதான். இருப்பினும், நிலையற்ற சந்தையில் பிஎப் பணத்தை முதலீடு செய்வதில் உடன்பட முடியாது என்ற நிலைப்பாட்டை இடதுசாரி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் எடுத்ததால் முடிவு மாற்றப்பட்டது. மார்ச் 2022 வரை 1.57 லட்சம் கோடி ரூபாய் ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இடிஎப்-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 இல் புதிய ஒதுக்கீட்டில் இருந்து 38,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 24 முதல் அதானி பங்குகள் கடுமையாக சரிந்து வருவதால், பிஎப் வாரியத்தின் அதானி முதலீடுகளின் மூலமான வருவாய் குறையக்கூடும். இது உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர இபிஎப் விகிதங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும். அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள், நிஃப்டி 50 இல் சேர்க்கப்படும் நேரத்தில் அவற்றின் விலையிலிருந்து 49 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை மார்ச் 24 வரை சந்தித்துள்ளது. 52 வாரத்தின் அதிகபட்ச உயர்வான ரூ.4,190-இல் இருந்து 58.5 சதவீதம் தற்போது குறைந்துள்ளது.