states

img

22 ஆண்டுகளுக்கு பின்பும் ஓய்வூதியம் வழங்காத விவகாரம்: உயர் அதிகாரிகளின் சம்பளத்தைப்பிடித்தம் செய்திட உயர்நீதிமன்றம் ஆணை

ஒருவர் ஓய்வுபெற்று 22 ஆண்டுகள் கழிந்தபின்பும் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததற்காக,  அடுத்து ஒரு வார காலத்திற்குள் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால், ஒடிசா நிதித்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் சம்பளங்களைப் பிடித்தம் செய்திட ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மிதுரம் பாய் (வயது 80), ஹிராகுட் அணைத் திட்டத்தில் வேலை செய்து, 1998 ஜூன் 30 ஓய்வு பெற்றார். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததால், அவர் மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகினார்.  தீர்ப்பாயம் அவருடைய பணிகளை 2015இல் முறைப்படுத்தி,   அவருக்கு அடிப்படைக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக நீர்ப்பாசனத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், ஒடிசா உயர்நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவை செல்லும் என்று உறுதிப்படுத்தி, மிதுரம் பாய் அவர்களின் பணிகளை முறைப்படுத்தி, அவருக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அளித்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

எனினும், உயர்நீதிமன்றத்தின் ஆணையை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், மிதுரம் பாய்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாண்டா மற்றும் பணிக்கிரஹி ஆகியோர் அடங்கிய அமர்வாயம், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு ஆகியும், அதனை நிறைவேற்ற அரசாங்கம் முன்வராததால், இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அடுத்த ஒரு வார காலத்திற்குள் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால், நிதித்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் ஊதியத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.