science

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி

சென்னை, மே 11-தமிழகத்தில் தேர்தல்கள் முடிந்த நிலையில் நயவஞ்சகமாக மோடி அரசு , டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், வேதாந்தா மற்றும் எண்ணெய் - இயற்கை எரிவாயுகழகம் ( ஓ.என்.ஜி.சி) ஆகிய நிறுவனங்களின் ஹைட்ரோ கார்பன்திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள் ளது.மத்திய அரசால் புதிய எண்ணெய்துரப்பணக் கொள்கை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒற்றை அனுமதி என்கிற முறையில் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதியுடன் மீத்தேன், ஷேல் கேஸ் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் காஸ் உள்ளிட்ட பலவகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு தாராளமாக அனுமதி அளிக்கப்பட் டது. சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. 2018 ஆகஸ்ட் 1ல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 2016க்கும் முந்தையகச்சா எண்ணெய் எடுக்கக் கூடியஇடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை விரிவுபடுத்தப்பட்டது. 731 சதுர கி.மீ பரப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை நில வளத்தையும், நீர்வளத்தையும் பாதிக்கக் கூடிய மரபுசாராத் திட் டங்களாகிய மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடந்த 2013ல் இடைக் கால தடையும், 2015ல் நிரந்தரத் தடையும் அமலில் இருக்கிறது. இந்நிலையில், திறந்தவெளி அனுமதி முறையில் முதல் சுற்றில் தரைப்பகுதியில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ளநிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ., பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை2,674 சதுர கி.மீ., பகுதியை வேதாந்தா நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் 14.3.2019 மற்றும்5.4.2019ம் தேதிகளில் விண்ணப்பித் தன. மேலும், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியகுடி மற்றும் கடலூர் மாவட்டம்புவனகிரி எண்ணெய் வட்டாரங்களில் டைட் கேஸ் எனப்படும் மரபுசாரா எண்ணெய் எடுப்பு முறைக்கு கடந்தபிப்ரவரி மாதம் சுற்றுச் சூழல் அனுமதிக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

நயவஞ்சகமான முறையில்...

அதேபோல் டெல்டா பகுதிகளில்‘ஹைட்ரோ ப்ராக்தரிங்’ முறையில்மேற்கண்ட வாயு எடுக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இரு திட்டங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய வனம் மற் றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தஅறிவுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்கஅறிக்கை, சுற்றுச் சூழல் மேலாண்மைஅறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 32க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களில், நயவஞ்சகமான முறையில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அனுமதி வழங்கும்வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இதனால், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு அளிப்பது உறுதியாகி உள்ளது. முன்கூட்டியே வழங்கியிருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய விவாதமாக மாறியிருக்கும் என்பதால் தேர்தல் முடிந்தவுடன் மோடி அரசு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

வருவாய் நடைமுறையிலும் மாற்றம் 

தற்போதைய கடிதத்தின்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கடிதத்தை நடைமுறைப்படுத்தும் போது, எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வுசெய்ய முடியும். லாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் ஏமாற்று  தேர்தல் அறிக்கை

சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், நிலப்பரப்பு பகுதியில் எண்ணெய் கிணறு அமைப்பதற்கான நிபந்தனைகளோ விதிமுறைகளோ ஏதும்இல்லை. மாறாக கடல் பகுதி குறித்தவிதிமுறைகள் மட்டுமே விதித்திருப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆளும் அதிமுக அரசு,‘‘டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாப்போம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்’’ எனதேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் நடைமுறைகள் இன்னும் முடியாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் கடிதம் அனுப்பி இருப்பது தமிழக மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் செய்யும் துரோகம் என்றும், இதுதேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிணறு அமையும் ஊர்கள்

திருவாரூர் மாவட்டம் திருக்களர், ராயநல்லூர், நாலாம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி,கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர், வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழகொத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் மற்றும் நாகை மாவட்டத்தில் அலிவலம், அத்திப்புலியூர், கூத்தூர், கீழ்வேலூர் பட்டமங்கலம், வெண்மணி, ஆந்தக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  பெரியகுடி வட்டாரத்திலும் கடலூர் மாவட்டத்தில் சியாப்பாடி, புத்தராயன்பேட்டை, வடஹரிராஜபுரம், வேதராயன் திட்டு, தலைக்குளம், குலக்குடி, புவனகிரி, சிதம்பரம்பசிமுத்தான் ஓடை, வெள்ளியக்குடி உள்ளிட்ட புவனகிரி வட்டாரத்திலும்மேற்கண்ட டைட் காஸ் எனப்படும்இறுக்கமான பகுதிகளில் உள்ளவாயுக்களை ஹைட்ரோ ப்ராக்கிங்முறையில் எடுப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. முதல்கட்டமாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுத்து ஆய்வுப் பணி மேற்கொள்ள வசதியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளது. 

புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு 

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம் மாநில முதல்வர் நாராயணசாமி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதிகோரினால் அதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2 ஆண்டு முன்பு மத்தியஅரசு காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் எரிவாயு அகழ்வாராய்ச்சிக் காக அனுமதி கொடுக்கப் போவதாகபுதுச்சேரி அரசுக்கு தெரிவித்தது. உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு புதுச்சேரியில் எரிவாயு சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கடிதம் எழுதினோம்.மேலும் சட்டமன்றத்தில் விவாதம்வந்தபோதும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி தர மாட்டோம்என்று தெளிவாக பதில் அளித்தேன்.இப்போது மீண்டும் எரிவாயுஅகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் போவதாக தகவல் வந்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும்வரவில்லை. இருந்தாலும் 2 ஆண்டுக்கு முன்பு என்ன நிலையை எடுத்தோமோ அதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.





;