science

img

மும்பையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையில் ஆண்டிபயாடிக் மருந்துகளால் அழிக்க முடியாத பாக்டீரியா - ஆய்வு தகவல்

மும்பையில் 12 இடங்களில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அதில் ஆண்டிபயாடிக் மருந்துகளால் அழிக்க முடியாத பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில், கோழி இறைச்சி மற்றும் முட்டைகளில் 12 ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டு அதன் தன்மைகளை சோதனையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோழி இறைச்சி மற்றும் முட்டையில் இருக்கும் ’சால்மோனெல்லா பாக்டீரியம்’ என்ற ஒரு வகை பாக்டீரியா,12 ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்ட நிலையிலும், அதனை அழிக்க முடியவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நேஷனல் ஃபெஸிலிடி ஆஃப் பையோ-ஃபார்மசிடிக்கல்சின் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை, ஆக்டா சைண்டிஃபிக் மைக்ரோபயாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, ஆய்வாளர்களில் ஒருவரான விகாஸ் ஜா கூறுகையில், ”விலங்களுக்கு அதிக அளவில் ஆண்டிபயாடிக் மருந்துகள் அளித்ததன் விளைவாக தான், அவற்றில் இருக்கும் நுண்ணுயிர்களை ஆண்டிபயாடிக் மருந்துகளால் அழிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2017-ஆம் ஆண்டு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கையில், ஆண்டிபயாடிக் மருந்துகளால் அழிக்க முடியாத ஈ.கோலி, கிளேப்சில்லா நிமோனியா மற்றும் ஸ்டாஃபிலோகோகஸ் லென்டஸ் போன்ற பாக்டீரியாக்கள் கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய முக்கிய கோழி விற்பனை மாநிலங்களில் இருக்கும் கோழி பண்ணைகளில் இருந்து மாதிரிகள் எடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கோழிகளில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு, 16 ஆண்டிபயாடிக் மருந்துகளை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 100 சதவீதம் ஈ.கோலி, 92 சதவீதம் கிளேப்சில்லா நிமோனியா மற்றும் 78 சதவீதம் ஸ்டாஃபிலோகோகஸ் லென்டஸ் ஆகியவை பல ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டும், அளிக்க முடியவில்லை. மேலும் சில பாக்டீரியாக்கள் பென்சிலின் மற்றும் ஃப்ளோரோக்வினொலோன் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளாலும் அழிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


;