science

img

அறிவியல் கதிர் - ரமணன்

1. நிமோனியா எனும் எமன் 
 

நமது நுரையீரலிலுள்ள காற்றுப்பைகளில் சளி அல்லது திரவங்கள் சேர்வதையே நிமோனியா காய்ச்சல் எனப்படுகிறது.இது வைரஸ்,பேக்டீரியா அல்லது பூஞ்சைக்காளான்களால் ஏற்படுகிறது. இது எல்லா தரப்பினருக்கும் வரும் என்றாலும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கும் வரக்கூடிய அபாயம் அதிகம்.சிலவகை நிமோனியாக்களை வேக்சின் மூலம் தடுக்கலாம்.பாக்டீரியாக்களால் ஏற்படுபவற்றை ஆன்டி பயாடிக்ஸ் மருந்துகளால் குணப்படுத்தலாம்.ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நலத் துறை(UNICEF) நடத்திய ஆய்வு ஒன்றில் சென்ற வருடம் ஐந்து வயதுக்குட்பட்ட 800000 குழந்தைகள் இந்தக் காய்ச்சலினால் இறந்திருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 1,27,000 இறப்புகளும் பாகிஸ்தானில் 58000 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாம். 

2. கருந்துளையின் வீச்சு 

நமது சூரியக் குடும்பம் உள்ள பால்வீதி மண்டலத்தின் மத்தியிலுள்ள ஒரு பெரும் கருந்துளையுடன் ஏற்பட்ட மோதலினால் ஒரு நட்சத்திரம் நொடிக்கு 1700 கி.மீ வேகத்தில் இந்த மண்டலத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. கருந்துளைகள் மிகப் பெரும் வேகத்தில் நட்சத்திரங்களை வெளியே தூக்கி எறியும் என்று முப்பது வருடங்களுக்கு முன்பே  கணிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் முதன் முதலாக அப்படிப்பட்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டது. பால்வெளியின் மத்தியுள்ள கருந்துளை சூரிய னைப்போல நான்கு மில்லியன் மடங்கு எடை யுள்ளதாம்  இந்த நட்சத்திரம் 100மில்லியன் வருடங்களில் பால்வெளியைவிட்டு வெளியேறி மீதமுள்ள தன்  வாழ்நாளில் மண்டலங்களுக்கிடையேயான வெளியில் மிதந்துகொண்டிருக்குமாம். இந்த நட்சத்திரம் ஒரு இரட்டை தொகுதியாக இருந்தது.அது கருந்துளையின் அருகில் வந்தபோது அதில் ஒன்று கருந்துளையுடன் இணைந்து அதனால் விழுங்கப்பட்டு மறைந்தது.இதன் விளைவாக இரட்டை நட்சத்திரத்தின் மூல ஜோடி  மிக உயர் வேகத்தில் வெளி தள்ளப்பட்டது.ஜாக்  ஹில்ஸ் என்னும் வானவியலாளர்  முப்பது ஆண்டு களுக்கு முன் இப்படிப்பட்ட நிகழ்வை முன்மொழிந்தி ருந்தார். அவர் பெயரில் இது ‘ஹில்ஸ் மெக்கானிசம்’ எனப்படுகிறது. 

(ஹன்னா டேவலின்- தி கார்டியன் 13/11/19 கட்டுரையிலிருந்து)

3.மோதலின் விளைவு ஒழுங்கு 

எம் ஐ டி (MIT) ஆய்வாளர்கள் மிகுவேக லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு செய்த ஆய்வில் பொருட்களின் இதுவரை அறிந்திராத ஒரு நிலை தெரியவந்துள்ளது. லேந்தனம் டிரைடெலூரைடு(Lanthanum tritelluride) என்ற கூட்டுப்பொருளின் மீது ஒரு பிக்கோ நொடிக்கும்(ONE TRILLIONTH OF A SECOND) குறைவான நேரத்திற்கு லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டன. பொதுவாக ஒரு பொருளின் மீது சக்தியை அதிகரிக்கும்போது அதன் கட்டமைப்பு ஒழுங்கற்றதாக மாறும்.ஆனால் இந்த சோதனையில் எலெக்ட்ரான் அடர் பகுதி ஒழுங்கான அலை போன்று காட்சி அளித்தது.  

4 . பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன்

நவம்பர் 11ஆம் தேதி புதன் எனப்படும் மெர்குரி கோள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்தது. இந்தப் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. சூரியக் குடும்பத்தில் மிகச் சிறியதும் சூரியனுக்கு வெகு அருகிலும் உள்ள கோள் மெர்க்குரி ஆகும். இதற்கு முன் 2016 இல் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தது. இனி 2032இல் மீண்டும் நடைபெறும். புதனும் சுக்கிரனும்தான் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ளன. எனவே அவை இரண்டும் இப்படி கடந்து போகும் நிகழ்வுகள் ஏற்படும். இத்தகைய நிகழ்வு 1631 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று முதன் முதலாக கவனிக்கப்பட்டது.அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பாகவே 1627இல் கெப்ளர் இந்த தேதியில் மெர்க்குரி கடப்பது நடக்கும் என்று கணித்திருந்தார்.  வானவியலாளர்களுக்கு இந்த நிகழ்வு இரண்டு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று பூமியை மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கருத்தை கெப்ளரின் கண்டுபிடிப்பு மாற்றியது. இன்னொன்று எல்லாக் கோள்களும் சூரியனை வட்டப் பாதையில் சுற்றவில்லை;நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன என்றும் கெப்ளர் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் செய்த கணக்கீடுகளே மெர்க்குரி என்று கடக்கும் என்பதை சரியாக கணித்திருந்தது.

5. சோதனை மருந்து  சாதனை படைக்குமா?

எபோலா வைரஸ் நோய் ஒரு அரிய ஆனால் கொடிய தோற்று நோயாகும். இது பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகிறது. இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்று கண்டறியப்படவில்லை.வௌவால்கள்,குரங்குகள் மூலம் பரவுகின்றன.இதற்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்த எர்வெபோ எனும் சோதனை வேக்சைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. தீர்வு காணப்படாத மருத்துவ நிலைமைகளை சமாளிக்க உதவும் மருந்துகளுக்கு அளிக்கப்படுவது நிபந்தனை விற்பனை அனுமதியாகும். இப்படி அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த தடுப்பு மருந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் பத்தாண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது.



 

;