science

img

அறிவியல் கதிர்

                                          அறிவியல் கதிர்

மாத்தி யோசி 

நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்காமல் முற்றிலும் மற்ற ஆதாரங்களிலிருந்து மட்டும் தயாரித்த மின்சாரத்தைக் கொண்டு 90 மணி  45 நிமிடங்களுக்கு இயங்கி இங்கிலாந்து(UK) சாதனை படைத்துள்ளது. தொழிற்புரட்சிக்குப் பின் நிலக்கரியல்லாத ஆதாரங்களிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்ட நீண்ட நேரம் இதுவே. இதில் எரிவாயு மூலம்.  42%மும் அணு சக்தி மூலம்  23%மும் தயாரிக்கப்பட்டது. என்று யூ கே தேசிய கிரிட் அறிவித்துள்ளது. இதற்கு முன்    2018ஆம் ஆண்டு  76 மணி நேரம் இயங்கியதே சாதனையாக இருந்தது. 

மைக்ரோ சிப்ஸ்களில் மனித செல்கள் 

விண்வெளிப்பயணம் மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதைக் கண்டறிய மனித செல்கள் பதிக்கப்பட்ட மைக்ரோ சிப்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இவைகள் மனித உள் உறுப்புகள் போல் விளங்குகிறது. இப்படி தயாரிக்கப்பட்ட சிப்களில் சிறுநீரகம்,எலும்பு,நுரையீரல் போன்ற மாதிரிகள் உள்ளன. மனித நோய் தடுப்பு மண்டல மாதிரி டிசம்பர் 2018இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது.

நாக்கும் மூக்கும்
 

‘நாக்கில நரம்பில்லாம பேசாதே’ என்கிறோம். நாக்கில் சுவை அரும்புகள் இருக்கின்றன.அவற்றின் முடிவில் நரம்புகள் இணைந்து மூளைக்கு சுவையைத் தெரிவிக்கின்றன. இப்பொழுது நாக்கில் மணத்தை உணரும் உணர்வுகளும் இருக்கின்றன என்று அமெரிக்க ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் மணம், சுவை இரண்டின் கூட்டுணர்வு நாக்கிலேயே தோன்றுகின்றன;மூளையில் அல்ல என்று தெரிகிறது. ஆய்வாளரின் 12 வயது மகன் பாம்பு மணத்தை உணர்வதற்காகவா தன் நாக்கை நீட்டுகிறது என்று கேட்டதே இந்த ஆய்வைத் தூண்டியதாம்.

எப் ஆர் எஸ் விருது பெறும் முதல் இந்தியப் பெண் அறிவியலாளர் 
 

ரோட்டா நுண் கிருமிகளால் ஏற்படும் குடல் அழற்சி நோயினால் சிறு குழந்தைகளுக்கு தீவிரமான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 2௦13ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்த தொற்று நோயினால் ஒவ்வொரு ஆண்டும் 215௦௦௦ குழந்தைகள் இறக்கின்றன. இதில் பெரும்பான்மை வளரும் நாடுகளைச் சேர்ந்தவை. ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கும் சமயத்தில் பெரியவர்களுக்கும் இந்த நோய் பரவுகிறது.  இதை தடுப்பு மருந்தினால் மட்டுமே தவிர்க்கமுடியும். வளரும் நாடுகளில் 15-34 சதவீதமும் வளர்ந்த நாடுகளில் 37-96 சதவீதமும் தடுப்பு மருந்தினால் தவிர்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரான ரோடாவாக் எனும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர் ககன்தீப் காங். பரிதாபாதில் உள்ள THSTI எனும் ஆய்வு நிறுவன இயக்குனரான இவருக்கு இங்கிலாந்து நாட்டு பெல்லோ ஆப் ராயல் சொசைட்டி(FRS) விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய பெண் விஞ்ஞானி இவர்தான். இந்தியாவில் பெண் விஞ்ஞானியாக ஒருவர் இருப்பதிலுள்ள சவால்களைப் பற்றி குறிப்பிடும் இவர் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் நாற்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்கிறார்.

சந்திராயன்-2
 

2௦19ஜூலை மாதம் சந்திராயன்-2 ஏவப்படலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் அது நிலவில் இறங்கலாம். 800கோடி அளவிலான இந்த திட்டம் 2௦16ஆம் ஆண்டிலிருந்து தாமதப்பட்டுள்ளது.கடைசியாக சென்ற ஏப்ரல் மாதம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரேலின் நிலவுத் திட்டம் தோல்வியடைந்ததால் தள்ளிவைக்கப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

2௦5௦ இல் பூஜ்யம் உமிழ்வு 
 

சுற்றுச்சூழல் மற்றும் தட்ப வெப்ப அவசர நிலை அறிவித்த முதல் நாடாக ஐக்கிய குடியரசு(U.K) உள்ளது என்று அதன் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. அதன் தலைவர் ஜெர்மி கோர்பின் கொண்டு வந்த ‘2050ஆம் ஆண்டிற்குள் பூஜ்யம்  நிகர உமிழ்வு’ (zero emission) நிலையை அடைய வேண்டும் என்ற முன் மொழிவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழிவுகள் இல்லா பொருளாதாரம் ஏற்படுத்தவும் நாட்டின் இயற்கை சுற்று சூழலை மீட்டெடுக்கவும் தேவையான திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று அந்த முன்மொழிவு கூறுகிறது.
 

 

;