science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) லூயி பாஸ்டர் 200ஆவது  பிறந்த ஆண்டு 

1822ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவருக்கு முதலில் கலைகளின் மீதே ஆர்வம் இருந்தது. பின்னர் வேதியியல்மீது கவனம் திரும்பியது. மருத்துவ படிப்பு எதுவும் படிக்காத இவர் நோய்களை குணப்படுத்தும் நவீன மருத்துவத்தின் அடிப்படையை ஏற்படுத்தினார். நுண்ணுயிர்கள் குறித்த புரிதலினால்  அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொண்டார்.கடுமையான சோதனைகளை விடாமல் செய்து கிருமிகளும் நோய்களும் குறித்த கருதுகோளை நிலைநிறுத்தினார்.பட்டு நெசவு,ஒயின் புளிக்காமல் இருப்பது, குடிப்பதற்கு ஆபத்தில்லாத வகையில் பாலை மாற்றியது போன்ற பல்வேறு துறைகளிலும் இவரது கண்டுபிடிப்புகள் உதவின. வெறி நாய்க்கடி போன்ற வியாதிகளுக்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தார்.  

2 ) வருகிறது சுயமான கிருமி எதிர்ப்புக் கவசம் 

இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று புதிய முகக் கவசத்தை வடிவமைத்துள்ளார்கள்.இதில் தாமிரத்தை அடித்தளமாகக் கொண்ட நுண்துகள்கள் பூசப்பட்டுள்ளன. இது கொரோனா கிருமி மற்றும் பல வைரஸ்,பேக்டீரியா தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே இது சுயமான கிருமிநாசினியாக செயல்படுகிறது. இது மக்கக்கூடியதும்,மூச்சு விட எளிதானதும் துவைக்கக் கூடியதும் ஆகும்.இந்த தகவலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.

3 ) பிளாஸ்டிக்கை மக்கவைக்க நுண்ணுயிரிகள் 

அண்டார்டிக்காவில் காணப்படும் ஒரு வகை நுண்ணுயிரிகள் எண்ணெய்க் கழிவுகளை உட்கொள்வதை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுள்ளார்கள்.பிளாஸ்டிக்கும் எண்ணெயும் வேதியியல் ரீதியாக கார்பன் மற்றும் ஹைடிரஜன் சேர்ந்த  பாலிமர் எனப்படும் வகையை சார்ந்தவை.எனவே இந்த நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யவும் பயன்படலாம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள். இதே துறையில் இந்திய ரூர்கி ஐஐடி நிறுவனம் பிளாஸ்டிக்குகளை வேகமாக அழிக்கும் என்சைம் ஒன்றின் கட்டமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது ஒரு நுண்ணுயிரிலிருந்து கிடைக்கிறது. இயற்கையாக மக்காத பிளாஸ்டிக்குகளை அழிக்க இது உதவும் என்கிறார்கள்.பிளாஸ்டிக்கின் மக்காத  தன்மைக்காக சேர்க்கப்படும் தாலேட் எனும் வேதிப்பொருளையும் டெராதாலேட் எனும் இன்னொரு பொருளையும் அழிக்கும் பல என்சைம்களையும் கண்டறிந்துள்ளதாக இதன் முதன்மை ஆய்வாளர் ரவீந்திர குமார் கூறுகிறார்.     

4 ) நூற்றாண்டுகளின் விழா (சென்ற வார தொடர்ச்சி)

பெற்றோர்களிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சில குணாம்சங்கள் ஜீன்களின் மூலம் கடத்தப்படுவதைக் கண்டறிந்த கிரிகர் மெண்டல் அவர்களின் 200ஆவது பிறந்தநாள் இந்த ஆண்டு.அவர் 1822ஆம் ஆண்டு இப்போதைய செக் குடியரசுப் பகுதியில் பிறந்தார். 1866ஆம் ஆண்டு தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.சார்லஸ் டார்வின் உட்பட பல அறிஞர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பிறகே  பொதுவாக உயிரியலுக்கும் குறிப்பாக மரபியல் மற்றும் பரிணாமத்திற்கும் அதன் முக்கியத்துவம் கண்டுகொள்ளப்பட்டது.

5 ) அறிவியலில் பாலினப் பாகுபாடு - காத்ரின் ஜான்சன்

•    பல அறிவியல் கண்டுபிடிப்புகள் பெண்களால் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் அங்கீகரிக்கப்படாததும் அதற்கான விருதுகள் ஆண்களுக்கு அளிக்கப்பட்டதும் கசப்பான வரலாற்று உண்மைகள் என்கிறது எம்எஸ்என் செய்திக் கட்டுரை ஒன்று.அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

•    1800களின் மையக் காலத்தில் அடா லவ்லேஸ் என்பவர் முதன் முதலாக கணினி நிரலுக்கான வழிமுறைகளை எழுதினர்.ஆனால் கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜ் இதற்கான கவுரவத்தைப் பெற்றார்.ஏனெனில் அவர்தான் கணினி இயந்திரத்தை  உண்டாக்கினார்.  

•    காத்ரின் ஜான்சன் 1961இல் ஃபிரீடம் 7 என்கிற விண்கலம் விண்வெளியில் வெற்றிகரமாக நுழைவதற்கான பாதையை கண்டுபிடித்தார். பின்பு 1969இல் அப்பல்லோ11 நிலவில் இறங்குவதற்கான பாதையையும் அவரே வகுத்தார். அவரது ஆண் சகாக்கள் அவரது பணியை அங்கீகரிக்காதது மட்டுமல்லஅவரை  இனரீதியான  பாகுபாட்டிற்கும் ஆளாக்கினர். 

6 ) மின்னல் சின்னதல்ல 

ஏப்ரல் 29 2020 அன்று தென் அமெரிக்காவில் ஏற்பட்ட இடியுடன் கூடிய புயலின்போது தோன்றிய மின்னல் 768கி.மீ நீளம் கொண்டிருந்ததாம். இதை செயற்கைக்கோள்கள் படம் பிடித்துள்ளன. மிகப் பெரும் மின்னல்களில் இதுவே நீண்டது எனக் கூறப்படுகிறது. இதற்கு முன் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி பிரேசில் நாட்டில் தோன்றிய மின்னலே மிக நீண்டதாக இருந்தது. இப்போது காணப்பட்ட மின்னல் அதைவிட 60கி.மீ நீண்டதாம்.

பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் கடுமையான வியாதியாகக் கருதப்பட்டு வந்தது. நமது வயிற்றுப் பகுதியிலுள்ள  கணையமானது சர்க்கரையை செரிக்கும் ஒரு பொருளை சுரக்கிறது என்று 20ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் ஊகித்தார்கள். கணையம் சரியாக வேலை செய்யாவிட்டால் கார்போஹைடிரேட்டுகளை ஆற்றலாக மாற்ற முடியாததோடு இரத்தத்தில் அபாயகரமான அளவு சர்க்கரை இருப்பதையும் தெரிந்து கொண்டார்கள்.1922ஆம் ஆண்டு பிரடெரிக் பேன்டிங் எனும் இளம் மருத்துவர் சர்க்கரை வியாதியை கணையத்தில் சுரக்கும் ஒரு பொருளைக் கொண்டு குணப்படுத்தலாம் என்று தெரிவித்தார். விலங்குகளிலிருந்து எடுத்து சுத்திகரிக்கப்பட்ட இன்சுலினை அவர் பயன்படுத்தினார். அடுத்த ஆண்டே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.