science

img

உங்களைப் பற்றி கூகுள் சேமித்த தகவல்களை அழிப்பது எப்படி­?

===என்.ராஜேந்திரன்===
கூகுள் தேடல், ஜிமெயில், கூகுள் மேப், ஆண்ட்ராய்ட் இயங்குதளம், காலண்டர், டிரைவ் சேமிப்பகம், பிளே ஸ்டோர், குரோம் பிரௌசர் என்று நீளும் கூகுளின் சேவைப் பட்டியலில் ஏதேனும் ஒன்றையாவது பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கக்கூடும். கூகுளின் சேவைகளுக்குள் நுழையும் எந்த ஒரு பயனரும் உள்ளிடும் தேடல் கேள்விகள், காலண்டர் குறிப்புகள், குரோமில் திறந்த இணையப் பக்கங்கள், நாம் இருக்கும் இடம், சென்ற இடம், பயணித்த வழித்தடம் என கூகுள் மேப் மூலம் சேகரித்த தகவல்கள் என உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை டெராபைட் கணக்கில் கூகுள் சேமித்து வைத்திருக்கிறது. கூகுள் மூலம் ஒரு பயனர் 15 ஜிபி தகவல்களை மட்டுமே இலவசமாக பதிவேற்றிக் கொள்ளமுடியும். ஆனால், எந்த உச்ச வரம்பும் இல்லாமல் உங்களின் இணையம் சார்ந்த நடவடிக்கைகளை கூகுள் நொடிக்கு நொடி சேமித்துக் கொண்டே இருக்கிறது. 

இதுபோன்ற தனிநபர் தகவல்களைக் கொண்டே நம்முடைய தேவைகளை நிறைவு செய்யும் வசதிகளை கூகுளால் தரமுடிகிறது. எனினும், இதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று பல போராட்டக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பல நாடுகளில் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன.

தகவல் அழிக்கும் வசதி
மக்களிடம் தனி நபர் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் கூகுள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் பயனரின் தகவல் தரவுகளை பராமரிக்கும் வழிமுறைகளை மாற்றி வருகின்றன.அந்த வகையில் கூகுள் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு சில வசதிகளைத் தந்துள்ளது. கூகுள் கணக்கில் பயனர் விவரங்கள் எவ்வளவு நேரம் வரை இருக்க வேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது.

இந்த புதிய வசதி மூலம் கூகுள் எவ்வளவு நேரம் தங்களைப் பற்றிய விவரங்களை வைத்திருந்து பின் தானாக அழிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யமுடியும். தற்போது தரப்பட்டுள்ள வசதியில் மூன்று மாதம் முதல் 18 மாதங்கள் வரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்த ஆட்டோ-டெலீட் வசதி தற்போது இணையம் மற்றும் கூகுள் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கூகுளின் பிற சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

கூகுள் சேமித்த தரவுகளைப் பார்க்க
கூகுள் உங்களைப் பற்றி சேகரித்த சில விபரங்களைப் பார்வையிடும் வாய்ப்பைத் தருகிறது. இதனை account.google.com தளத்தில் Data & personalisation என்ற மெனுவில் நுழைந்தால் Activity and timeline என்றுள்ள பகுதியில் My Activity மற்றும் Timeline என்ற இரண்டு காட்டப்படும். My Activity என்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் கூகுள் தேடலில் தேடிய தளங்கள் அதன் மூலம் தேர்வு செய்து நுழைந்த தளங்கள் போன்ற விபரங்கள் பதியப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். Timeline என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மொபைல் லொகேஷன் ஆன் செய்திருந்த நாட்களில் அல்லது கூகுள் மேப் பயன்படுத்தி பயணித்த இடங்கள் உள்ளிட்ட விபரங்களைப் பார்வையிடலாம். இதுபோல நீங்கள் பயன்படுத்தும் யுடியூப், பிளேஸ்டோர் போன்ற சேவைகளில் உங்கள் பயன்பாட்டு விபரங்களையும் பார்க்கலாம்.

தரவுகளை எப்படி அழிப்பது?
கணினியில் பயன்படுத்துபவராக இருந்தால் முதலில் பிரவுசரில் account.google.com வலைதளம் சென்று உங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டு நுழையவும். ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்துபவர்கள் கூகுள் செயலியை புதிதாக அப்டேட் செய்து கொண்டபிறகு, திறக்கவும். Data & personalization என்ற டேப் திறந்து அதில் Web & App Activity என்பதைக் கிளிக் செய்யவும். அதில் Manage activity என்பதைக் கிளிக் செய்யவும். தோன்றும் புதிய திரையில் தகவல்கள் தானாக அழிக்க வேண்டிய ஆப்ஷனை (delete automatically) தேர்வு செய்து அதனை க்ளிக் செய்யவும். தோன்றும் புதிய மெனுப் பட்டியலில் மூன்று வகை காட்டப்படும். ஒன்று நாமே விரும்பும்போது அழித்துக் கொள்வது (Keep until I delete manually) இரண்டாவதாக 18 மாதங்கள் வரை வைத்திருந்து தானாக அழிக்கவும் (Keep for 18 months then delete automatically) மூன்றாவதாக 3 மாதங்களுக்குப் பிறகு தானாகவே அழிக்கப்படவேண்டும் (Keep for 3 months and then delete automatically) எனத் தோன்றும் மூன்று வசதிகளில் ஒன்றைத் தேர்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
இது தவிர்த்து பயனர்கள் புதிதாக தங்களது எந்த ஒரு டேட்டாவையும் கூகுளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நினைத்தால், பயனர் விவரம் சேகரிப்பதை நிறுத்தும் வகையிலான வசதியும் ஒன்றுள்ளது. Web & App Activity என்பதற்கு நேராக உள்ள பட்டனை ஆஃப் (Pause) செய்துவிட்டால், தகவல்கள் எதுவும் கூகுளில் சேமிக்கப்படாது.