science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 )  மரபணுக்களின்  புதிர் விடுவிக்கப்படுகிறதா?

மனித மரபணுக்கள் குறித்த ஆய்வு ஒரு முக்கிய நிலைக்கு வந்துள்ளது. இதற்கு முன் செய்யப்பட ஆய்வுகளில் ஜீனோம் எனும் நமது மரபணுக்கள் முழுவதுமாக கண்டறியப்படவில்லை. இப்போது நடைபெற்றுள்ள ஆய்வில் முழுமையாக விளக்கிக் கொள்ளப்பட்டதாக மனித மரபணு அறிவியலாளர் ஐஷ்லர் கூறுகிறார். ஏப்ரல்1 சயின்ஸ் இதழிலும் மார்ச் 31 நேச்சர் மெதெட்ஸ் இதழிலும் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. இதுவரை அடிப்படையாக (reference) வைத்திருந்த ஜீனோம் தொடரில் திரும்ப திரும்ப இடம் பெறும் சில பகுதிகள் அறியப்படவில்லை. இப்போதைய ஆய்வில் புதிய தொழில் நுணுக்கத்தினால் அவை பகுத்தறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரபணுக்கள் தொடரின் இறுதியிலும் டெலோமேர் எனப்படும் பகுதி திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன. இவை நமது ஷூ லேஸ்களிலுள்ள பின் போன்று குரோமோசோம்கள் இழை பிரியாமல் இருக்க உதவுகின்றன. இந்த இடத்தின் அமைப்பு இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது.  மேலும் மனித டிஎன்ஏக்களிலுள்ள சென்ட்ரோமேர் எனும் பகுதிகளின் தொடர்ச்சியை அறிய முடியும். இந்தப் பகுதிதான் டிஎன்ஏக்களின் எக்ஸ் வடிவ தோற்றத்திற்குக் காரணம். செல்பிரிவின் போது டிஎன்ஏக்களின் மாறுதலை ஏற்படுத்தும் கைனட்டோசோர் என்பது இங்குதான் உருவாக்கப்படுகின்றன. இது செல்களின் பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இது பிழையாகும்போது பிறப்புக் கோளாறுகள்,புற்று நோய் மற்றும் மரணம் கூட ஏற்படலாம். ஏற்கனவே ஈக்கள், மனித டிஎன்ஏ8 மற்றும் எக்ஸ் ,ஒய் குரோமோசோம்களின் சென்ட்ரோமேர்கள் பகுத்தறியப்பட்டுவிட்டன. ஆனால் இதுதான் முதல் முறையாக மற்ற  சென்ட்ரோமேர்களின் அமைப்புகளை காண முடிந்துள்ளது.   இது ஒரு குறிப்பிட்ட மனிதனின் ஜீனோம் ஆய்வு என்றுதான் சொல்ல முடியுமாம். ஏனெனில் மனித ஜீனோம் என்று பொதுவாக ஒன்று இல்லை. எந்த இரண்டு மனிதர்களின் மரபணுவை எடுத்துக் கொண்டாலும் பெரும்பகுதிகள் ஒத்ததாக இருப்பதிலிருந்து , சரியாக பொருந்தக்கூடிய மற்றும் சிறு பகுதிகள் பெரும் வேறுபாடு கொண்டதாக இருப்பது வரை காணலாம். ஏற்கனவே பகுத்தறியப்பட்ட ஒரு ஜீனோமை அடிப்படையாக(reference) கொண்டு மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து நோய்களுக்குக் காரணமான ஜீன்களை அடையாளம் காண முடியும்.  இதுவரை செய்யப்பட மரபணு ஆய்வுகளின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் அவை ஐரோப்பிய பரம்பரை மனிதர்களின் டிஎன்ஏக்களை மிகுதியாக சார்ந்து இருந்ததுதான். இந்த ஆய்விலும் ஐரோப்பிய பரம்பரை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே செய்யப்பட்ட வேறுபட்ட மனிதர்களின் டிஎன்ஏ மாதிரிகளை இத்துடன் ஒப்பிட்டு எங்கே வேறுபடுகிறார்கள் என்பதை எளிதாக காணமுடியும். மேலும் இந்த ஆய்வுக்குழு வாங் குழுவினருடன் இணைந்து வேறுபட்ட பின்புலம் கொண்ட 350 மனிதர்களின் முழுமையான ஜீனோம் பகுத்தறியும் ஆய்வை தொடங்க உள்ளார்கள். 

2 ) கருப்பை புற்று நோயும் தடுப்பூசியும் 

ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் கிருமியிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பெண்களின் கருப்பையில் வரும் புற்று நோய்(cervical cancer) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இரண்டு அல்லது மூன்று தவணை செலுத்தப்படுகிறது.இனி ஒரு தவணை செலுத்தினாலே போதுமானது என உலக சுகாதார அமைப்பை சேர்ந்த  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிர் காக்கும் இம்மருந்து அதிக எண்ணிக்கையிலான பெண்களை சென்றடையும்.

3 ) மயக்கத்திற்கும் தெளிவிற்கும்  ஒரே மருந்து 

மந்திரக் காளான்கள் என்றழைக்கப்படும் ஒரு வகை பூஞ்சைக் காளான்களிலுள்ள மன மயக்க வேதிப்பொருட்கள் இப்போதுள்ள மன அழுத்த சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவை மூளையை கூடுதல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் எதிர்மறை சிந்தனைப் பகுதிகளில் குறைவாகப் பதிந்திருப்பதாகவும் மாற்றுகிறதாம். மன அழுத்தம் உள்ளவர்களின் மூளை கெட்டித்தன்மை கொண்டதாக உள்ளது. இதை மாற்றுவதற்கு இந்த வேதிப்பொருட்கள் உதவுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் மத,தெய்வ மற்றும் ஆன்மீக கலாச்சார நிகழ்வுகளில் இந்தக் காளான்கள் மகிழ்விக்கும் மருந்தாக பலகாலமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கற்கால பாறைகளில் இவை சித்தரிக்கப்பட்டுள்ளன.

4  ) வசதியான செயற்கைக் கால் 

முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலிசென்ட்ரிக் செயற்கை முழங்காலை சென்னையிலுள்ள ஐஐடி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘கடம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முழங்காலுக்கு மேல் உள்ள கால் பகுதி  நீக்கப்பட்டவர்கள் வசதியான அசைவுடன் நடப்பதற்கு இது உதவுமாம். அதிக வலிமை உடைய எஃகும் அலுமினியமும் கலந்த கலவையால் வடிவமைக்கப்பட்ட இதில் குரோம் தகடுகளால் ஆன பின்களும் அதிக தளர்வுகள் கொண்ட  பாலிமர் புஷ்களும் உள்ளன. இந்த திட்டம் பயோ மெடிக்கல் டெக்னாலஜி கழகம் மற்றும்  மொபிலிட்டி இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவோடு நிகழ்ந்துள்ளது.
 

;