மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவு அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது. அதிமுக சார்பில் மதுரை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதற்குள்ளேயே அவர்களுக்கு விழி பிதுங்கிவிட்டது. முதலில் தற்போது எம்.பியாக உள்ள கோபால கிருஷ்ணன் பெயரை அறிவித்தார்கள். தன்னுடைய மகனை எப்படியாவது வேட் பாளராக்கி விடவேண்டும் என்பதற்காக அதிமுக அலுவலகத்தில் பாயைப் போட்டு படுத்திருந்த ராஜன் செல்லப்பா ஐந்தாறு நாற்காலியை தூக்கி அடித்து தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போனவர்கள், அடுத்த அரை மணிநேரத்தில் வேட்பாளரின் பெயரை மாற்றி வி.வி.ஆர். ராஜ் சத்யன் என அறிவித்தார்கள். அத்துடன் மதுரை மாவட்டத்தை கேக் வெட்டுவது போல மூன்றாக பிரித்து செல்லூர் ராஜூ, ஆர்.வி.உதயகுமார், ராஜன் செல்லப்பா என ஆளுக்கொன்றாக கொடுத்து சமாளித் தார்கள். நல்ல வேளையாக மூன்று கோஷ்டியோடு பிரச்சனை முடிந்தது. நூறு கோஷ்டி இருந்திருந்தால் மதுரை மாவட்டத்தை சல்லி சல்லியாக பிரித்து மேய்ந்திருப்பார்கள். செல்லூர் ராஜூ தன்னுடைய பரப்புரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாததால் அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதையே பெரும் குற்றமாக பேசி வருகிறார்.
வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூட முயன்ற பெரும் விஞ்ஞானி யான செல்லூர் ராஜூ, தன்னைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் விஞ்ஞானிகளாக இல்லையே என்று வருத்தப்படுகிறார் போலிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்பாளர் கிடைக்காததால்தான் ஒரு எழுத்தாளரைப் பிடித்து வேட்பாள ராக்கியிருக்கிறார்கள் என்று கூறியிருக் கிறார் ராஜூ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளருக்கு பஞ்சமில்லை. கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே வேட்பாளராக நிற்பதற்கு முழுத் தகுதி யுள்ளவர்கள்தான்.
அதுகுறித்து விஞ்ஞானி ராஜூ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக தன்னுடைய கொடியில் பொறித்திருக்கும் அறிஞர் அண்ணாவே பெரும் எழுத்தாளர்தான். அண்ணாவுடன் சேர்த்து கலைஞர், நாவலர், பேராசிரியர் என நூற்றுக்கணக்கான சிந்தனை யாளர்களும், எழுத்தாளர்களும் திமுகவில் இருந்தார்கள். அதிமுகவை துவக்கிய எம்ஜிஆரும், இவர்களால் அம்மா என்றழைக்கப்படும் ஜெயலலிதாவும் கலைத்துறையிலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் இன்றைக்கு கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார், நரேந்திர மோடியின் பேரன் ராகுல் என்று அரிய கண்டுபிடிப்புகளை வெளியிடும் “மேதைகளால்” நிரம்பி வழிகிறது அதிமுக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் களப்பணி எதுவும் ஆற்றியதில்லையாம். ஆனால் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் அன்றா டம் களப்பணி ஆற்றி களைத்துவிட்டாராம். அவர் இதுவரை ஆற்றிய களப்பணி என்ன என்பதை வேட்புமனுவோடு சேர்த்து அவர் கொடுத்துள்ள சொத்துப்பட்டியலைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும். அதிமுக வேட்பாளரின் தந்தை ராஜன் செல்லப்பா மதுரை மேயராக இருந்தபோது ஆற்றிய ‘களப்பணியின்’ அருமை பெருமைகளை மதுரையில் கிழிந்து கிடக்கும் சாலைகளையும், பதறிக்கிடக்கும் பாதாளச் சாக்கடைகளையும் கேட்டாலே தெரியும். ஆனால் கலை இலக்கியப் பணியோடு சேர்த்து, மக்களுக்கான போராட்டக் களப்பணியில் எப்போதும் முன்னிற்கும் சு.வெங்கடேசனைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தி யிருக்கிறது. செல்லூர் ராஜூ வகையறா இப்போதுதான் பிரச்சாரத்தை துவக்கி யிருக்கிறது. வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் பேசுவார்களோ என நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.