politics

img

வன்முறையை களையும் வாக்குரிமை

காண்பதும், ரசிப்பதும், சுவைப்பதும் பொதுவான மனித உணர்வுகள். இயற்கையிடம் மட்டுமல்ல சக மனிதர்களின் மீதான நேசத்துடன் இணைந்த உணர்வுகளும் கூட! குறிப்பாக பாலின வேறுபாடு காரணமாக வேறுபட்ட வாழ்நிலை கொண்ட ஆண் பெண்களிடையே இயல்பாய் மலரும் ஈர்ப்பு நேசமாக மாற மனிதரை மனிதர் மதிக்கும் குணம் மிகமிக அவசியமாகிறது!ஆனால் நடைமுறையில் ஆண் தன்னை மேலானவனாய் நிறுத்திக் கொண்டு பெண்ணைக் காண்பதால் அவளின் குண மதிப்பு மட்டுமல்ல உயிர் மதிப்பு கூட அவன் கண்ணுக்குத் தெரிவதில்லை!எனவே தான் வெளிப்பார்வைக்கு பண்பட்ட மனிதராக காட்சி தந்து உலவிக் கொண்டே, தனக்கு முற்றிலும் அறிமுகமற்ற பெண்ணைக் கூட எந்தவித மன உறுத்தலுமின்றி சீண்டுவதும், ஏமாற்றி அல்லது வன்முறை பிரயோகித்து தான் மட்டுமோ அல்லது மற்ற நண்பர்களுடன் கூட்டாகவோ அனுபவிப்பதும், குதறுவதும், கொல்வதுமான பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் கசப்பான நிகழ்வுகளை அதிகமாய்க் காண்கிறோம்!‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூல் உலகம் முழுவதும் நடந்த உழைப்பு சுரண்டலின் கொடுமையைப் பதிவு செய்கிறது. சில நாடுகளில் நடந்த பெண் குழந்தைகளின் பாலியல் உறுப்பு சிதைக்கப்படுவது குறித்த கொடூரத்தைப் பதிவு செய்கிறது.


ஆனால் இந்தியா பற்றிய பதிவில் பதினோரு வயதிற்கு உட்பட்ட ஏராளமான இந்திய சிறுமிகளின் பிணங்கள், இடுப்பு மற்றும் தொடை எலும்புகள் முறிந்த நிலையில் காணப்பட்டதையும், அவையனைத்தும் பால்ய திருமணம் மூலம் நடந்த உடலுறவுக் கொடுமையின் சகிக்க முடியா பின்விளைவுகள் எனவும் பதிவு செய்கிறது.1800களில் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சில சட்டங்கள் முதல் சுதந்திர இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனம் வரை அனைத்திலும் இருக்கும் மனுதர்மத்திற்கு மாறான அம்சங்கள் பலவும் ஆங்காங்கு உருவான சீர்திருத்தவாதிகளின் முயற்சி மற்றும் மக்களின் எழுச்சி காரணமாகவே உருவாக்கப்பட்டன.தமிழகத்தில் பெரியாரின் கடும் முயற்சி மற்றும் கம்யூனிஸ்டுகளின் தொடர் செயல்பாடுகளின் விளைவாகவும், 70க்கு பிறகு உருவான மாதர் அமைப்புகளின் முயற்சியாலும், பெண்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் அவர்கள் ஒன்றுதிரண்டு நடத்திய இடைவிடாத போராட்டங்கள் காரணமாகவும் சமூகத்தின் சிந்தனையிலும், தேவைப்படும் சட்டங்களின் உருவாக்கம் மற்றும் காவல்துறையின் சட்ட நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் உருவாகின.ஆனாலும் கூட வட இந்திய பகுதிகளில் இதன் எதிரொலியை அதிகம் காண முடியவில்லை. எனவே தான் சதிமாதா கோவில் உருவாக்கும் முயற்சி, காஃப் பஞ்சாயத்துகள் தந்த தீர்ப்புகள், நிர்பயா பாலியல் வன்முறை போன்றவை இதன் உச்சங்களாக காட்சியளித்தன!


அதோடு இக்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் களம் இறங்கியதை காஷ்மீர் ஆஃஷிபா மற்றும் உபியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளில் கண்டோம்.சமீப காலமாய் தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்றங்களிலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் இந்து முன்னணி, பாரத் சேனா போன்ற பல அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்களே குற்றவாளிகளாக இருப்பதை அரியலூர் நந்தினி வழக்கிலும், கோவை குழந்தை ரிதன்யா வழக்கிலும் காண்கிறோம்.ஆளுநர் உள்ளிட்ட அதிகார மையங்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற கல்லூரிப் பெண்களை பாலியல் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலாராணி வழக்கு, மாநில அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிகார மையங்களின் வலைப் பின்னல்களைக் கொண்ட பொள்ளாச்சி வழக்கு போன்ற குற்றங்கள் பலவற்றிலும் கடந்த காலங்களில் நாம் கண்டிராத அளவில் அதீத இறுமாப்புடன் அதிகார மையங்கள் நடந்து கொள்வதைக் காண்கிறோம்.அண்டை நாட்டின் மீதான காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான ஆயுத பலம் காட்ட விஞ்ஞானத்தை சாட்சியாக்குவது தவிர மற்ற அனைத்து வகையிலும் விஞ்ஞானத்துக்கு புறம்பான நடைமுறைகளை பின்பற்றும் மத்திய அரசும், குற்றங்கள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் பாதிப்பிற்கு உள்ளாகும் பெண் இனத்திற்கு மட்டும் இலவச உபதேசங்கள் வழங்கும் மத்திய அமைச்சர்களும் பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூறே!


‘உங்களை நம்பித்தானே வந்தேன் அண்ணா’ எனும் கதறல் காதில் விழாத கிராதகர்களின் செயல் இன்று பெண்களின் திருமணத்திற்கு தடை உருவாக்கியதுடன் பெண்கள் நவீன தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதற்கும் தடை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த நிலையில் பெண்கள் மீதான மதிப்பை உருவாக்கும் வகையில் ஆண்களுக்கான சிந்தனை மாற்றத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக்கும் முயற்சிகளை குடும்பம், கல்வி நிறுவனங்கள், பொது சமூகம் இணைந்து மேற்கொள்வது அவசியம்! மறுபுறம் இந்த வன்முறைகளை ஆணாதிக்க கருத்தியல் மற்றும் நடைமுறை என மட்டும் குறுக்கி சிந்திப்பதை மாற்ற வேண்டும்!


ஏனெனில் வட இந்திய காவல்துறை போலவே தமிழக காவல்துறை நடவடிக்கைகளும் குற்றவாளிகளின் மீது அதீத கருணை கொண்டதாக மாறி வரும் சூழலில் அதற்கு சாதகமாக மகளிர் ஆணையங்களின் பிற்போக்குப் பார்வையும் தமிழக அரசின் பிற்போக்குப் பார்வையும் இணைந்து நிற்கிறது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் விசாரணைகள் தாமதப்படுவது போலவே பல்வேறு குற்றங்களை விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் காலியிடம் நிரப்பலில் அரசு காட்டும் மெத்தனம் ஆகியவையும் இணைந்து நியாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறது. அல்லது அநீதி இழைக்கிறது.எனவே பெண்ணுடல் மீதான ஆணாதிக்க அரசியல் அதிகார மையங்களின் ஆதிக்கம் வீழ்த்த அனைவரும் கரம் கோர்ப்பது அவசியம்! மீண்டும் இந்த சனாதனிகளின் கைகளில் அதிகாரம் சேராமல் தடுக்கும் வகையில் நமது வாக்குரிமை எனும் ஆயுதத்தைக் கையிலெடுப்பதும் அவசியம்!பெண்களைப் பற்றிய முற்போக்குப் பார்வையுடன் அரசியல் அதிகாரம் நிறைந்த நாடாளுமன்ற சட்டமன்றத்தில் பெண்களின் அதிகாரம் வலுக்க 33ரூ இடஒதுக்கீட்டிற்காக நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் குரல் தந்து தொடர்ந்து போராடி வரும் இடதுசாரிகளின் கரங்களை வலுப்படுத்தி மாற்று சிந்தனைக்கு கதவை அகலத் திறக்க வேண்டும்!எங்கு குற்றம் நடந்த போதிலும் அங்கெல்லாம் உடனடியாக தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்து நியாயம் கிடைக்கும் வரை உடன் நின்று போராடும் இடதுசாரிகளை அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அதிகாரம் பெறச் செய்யும் திசை வழியில் சக்திமிக்க நமது வாக்குரிமையை பயன்படுத்துவோம்! அதையே சமத்துவத்திற்கான ஆயுதமாக்குவோம்!

;