headlines

img

குப்பை ஆர்.செம்மலர்

‘‘செண்பகம் செண்பகம்.......” இட்லிப் பானை இறக்குவதில் மும்முரமாய் இருந்த செண்பகம் ‘யாரு?’ எனக் கேட்டபடியே வெளியே வந்தாள். வாசலில் வீராயி நின்றிருந்தாள். கம்பெனிகளும் வீடுகளும் நிறைந்த அந்த நான்கு தெருவிலும் கம்பெனி கூட்டவும் வீட்டு வேலைகள் செய்யவும் செண்பகமும் வீராயியும் சேர்ந்தே சென்று அங்கங்கு பிரிந்து வேலை செய்து விட்டு திரும்பி வரும்போது இணைந்து வருவார்கள். இவர்களுக்குள் சண்டையே வராதா என்று பார்ப்பவர் யோசிக்கும் படி எப்போதும் கேலியும் கிண்டலுமாய் பேசியபடியே வளைய வருவார்கள். சின்னச்சின்ன சண்டைகள் வந்தாலும் வந்த மாயத்தில் காணாமல் போகும். போன சனிக்கிழமை கம்பெனி கூட்டி வளிச்சு சின்ன மூட்டையா கட்டின குப்பையை ரெண்டு பேரும் தனித்தனியா குப்பைத் தொட்டில கொட்டினாங்க. தொட்டி நிறைஞ்சிருந்ததால உள்ள விழுகாம தவறி கீழ விழுந்துச்சி. அதைக் கூட ரெண்டு பேரும் கவனமா எடுத்து உள்ள போட்டாங்க.. திங்கள்கிழமை பார்த்தா தொட்டிக்கு கீழ நிறைய குப்பைக சிதறிக் கிடந்துச்சு. லேசா பேஞ்ச மழை கெட்ட வாடையைக் கிளப்பி விட அந்த வழியா போன சனங்க மூக்கைப் பொத்திகிட்டு போனாங்க.

அன்னைக்கு கூட்டி வளிச்ச குப்பைகளை  தொட்டில கொட்ட கொண்டு போன செண்பகத்துகிட்ட ‘‘குப்பையை பொறுப்பா கொட்ட மாட்டீங்களா’’னு கோடி வீட்டு கோமளம் அதிகாரமாய்க் கேட்க ‘‘குப்பையை தொட்டிக்குள்ள தான கொட்டினேன். நீங்களே பார்த்திங்கள்ல’’ என்று செண்பகம் அடக்கமான குரலில் பதில் சொன்னாள். ‘‘இப்ப போட்ட ஆனா எப்பவும் இப்பிடிதான் போடறியா? உங்கூட வர பொம்பளையும் அப்பிடித்தான் போடறாளா?’’ என்று கேட்டாள். பதில் சொல்ல வாய் திறந்த செண்பகத்தை எதையும் பேச விடாமல் அவளே தொடர்ந்து பேச. கூந்தலுள்ள மகராசியை எதிர்த்து வாயாட முடியாமல்  செண்பகம் அமைதியாகத் திரும்பினாள்..  

அடுத்த நாள் செண்பகம் “நீ ஒழுங்கா குப்பை கொட்ட மாட்டயாம் உன்னை வார்த்தை பேசின கோமளாம்மா என்னையும் சேர்த்து பேசுது’’ என்று ஆரம்பித்தாள். எவடி அவ கோமளா என்னைப் பத்தி பேச... நீதான் அவசரம்னு அப்பப்ப தூக்கி வீசிட்டு ஓடற.. அது அவ கண்ணுக்கு தெரியலையாமா..” என்று ஆத்திரமாய் திருப்பிக் கேட்டாள் வீராயி. இரண்டு குழந்தைகளுடன் அல்லாடும் செண்பகம் சில சமயம் குப்பை எங்கு விழுந்தது என சரியாய் கவனிக்காமல் தூக்கி வீசுவது உண்மைதான். அதை ஒத்துக் கொள்ள மனமின்றி யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி வார்த்தையாடினாள். ‘‘நீதான் ஒண்டிக்கட்டைனா எல்லாரும் அப்பிடியா’’ என்று கேட்ட கேள்வி வீராயி மனதின் பலவீனமான பகுதியில் குத்த ஆங்காரமாய் வார்த்தையாடி செண்பகத்தின் வாயடைத்தாள். விளைவு... பத்து நாளா ரெண்டு பேர்க்குள்ள பேச்சுவார்த்தை இல்லை.     விடிந்ததும் வீராயி தன் வீட்டு வாசலில் வந்து நின்று தன்னை அழைத்ததில் செண்பகத்திற்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஒன்றாய் வந்தன.   ------------------------ பொழுது சாஞ்சா குப்பை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. நேரம் காலம் பார்க்காம எறிஞ்சா மூதேவியுடன் ஸ்ரீதேவியும் வீட்டை விட்டு போயிடுவானு பாட்டி சொன்ன பாடத்தை என்னைக்கும் மறக்காத தேவிகா அவசரமா குப்பையை ஒரு கவர்ல நிறைச்சுட்டு வேகமா நடந்து போய் தொட்டில எறிஞ்சா. அது நிறைஞ்சிருந்த குப்பை மலைல உக்காராம  வெளியே உருண்டு விழுந்துச்சு. பக்கத்துல போய் அதை எடுத்து நிதானமாய் தொட்டியில் இருந்த குப்பை மூட்டைகளின் மேல வெச்சா.. கடைசி நேரத்தில் ரேசன் கடைக்கு வந்து சாமான் வாங்க முடியாமல் திரும்பிய மல்லிகா ‘வேலைக்கு லீவு போட்டு வார அன்னிக்கு எதுவும் போட மாட்டேங்குறாங்க. இப்பிடி வேலைக்கு போய்ட்டு வந்தா கடை சாத்தறாங்க. ஹூம்.. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்கிற மாதிரி நம்ம பொழைப்பு ஆயிறுச்சு’ என்று புலம்பியபடி நடந்தாள்..

அன்றைய வேலையை முடித்த வீராயி அவர்கள் இருவருக்கும் நாலடி பின்னால் நடந்து வந்தாள். அந்திப்பொழுது சூரியனின் நிறத்தை ரசித்தவாறே மெதுவாக நடந்த தேவிகா மல்லிகாவைக் கண்டதும் பேச்சுத் துணைக்காக கொஞ்சம் வேகமாய் நடந்து அவள் தோளைத் தொட்டு ‘‘எங்க இப்பிடி பொடிநடையா கிளம்பிட்ட  மல்லிகா’’ என்று கேட்டாள்.   எதிர்பாரா தோள் தொடுகையில் திடுக்கிட்டாலும் உடனே சமாளித்த மல்லிகா “ரேசன் கடைக்கு வந்தன் நேரமாயிடுச்சு காலைல வான்னுட்டாங்க அதான்..” என்று பதில் சொன்னவள் ‘‘நீங்க...’’ என்று இழுத்தாள். ‘‘நானா.... குப்பை கொட்டலாம்னு வந்தன். குப்பைத் தொட்டி நெறைஞ்சு போச்சு. எப்பதான் அள்ளுவாங்களோ’’ என்றாள்.

ஆமாக்கா நானுங்கூட  நேத்து சாய்ந்தரம் குப்பை கொட்டினேன். குப்பை வண்டி வந்து ஒரு மாசமாச்சு. குப்பை நிறைஞ்சு கிடக்கு. நாத்தம் வேற பக்கத்துல போனா மூச்சு முட்டுது. எப்ப வந்து அள்ளிட்டு போவானுங்களோ.. இன்னொரு தொட்டியாச்சும் வைக்கலாம்.. அதுவும் வைக்காம நாறடிக்கிறாங்க... நம்ம கவுன்சிலர் ராசா இருந்த வரை. இதெல்லாம் அவர் பார்த்துகிட்டார். இப்ப அவருக்கு பவர் இல்லையாம் யார்கிட்ட சொல்லி என்ன செய்ய...” என்று  கையறு நிலையை  உணர்த்தும் அலுத்த குரலில் சொன்னாள் மல்லிகா. ‘‘நீயும் நானும் மட்டுமா ஊரே இப்ப இதைதான் யோசிச்சுட்டிருக்கு” என்ற தேவிகா வீடு நெருங்க ‘‘வாரேன்’’ என்றபடி நடந்தாள். தேவிகா வீட்டின் வாசல் பார்த்து பத்துக்கு எட்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கும் வீராயியும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்து தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

வீட்டிற்கு வந்த தேவிகா கைகால் கழுவி சாமி விளக்கேற்றி கும்பிட்டு விட்டு வாசலுக்கு வந்தாள். இரவு டிபன் வேலை துவங்க நேரம் இருப்பதால் வீட்டு முன் இருக்கும் இருபதடி சாலையில் போகும் வரும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி நின்றவளை எதிரே இருந்த வேப்ப மரத்தில் ஓடி விளையாடிய அணில்களின் கீச் சத்தம் இழுக்க அதை ரசித்தபடி நின்றாள். மினி வண்டியில் இருந்து இறங்கி நடந்து வந்த சாந்தி ‘‘குடிக்க  தண்ணி குடுக்கா’’ என்று தேவிகாவிடம் கேட்டபடி அந்த வாசலில் அமர்ந்தாள். கவனம் கலைந்த தேவிகா தண்ணீர் கொண்டு வந்து தர அதைக் குடித்ததும்  களைப்பு தீர முகம் துடைத்த சாந்தி ‘வேலை முடிஞ்சதாக்கா’ என்றாள். ‘‘ம்ம் முடிஞ்ச  மாதிரிதான் நைட் டிபன் வேலைக்கு இன்னும் நேரம் கிடக்குதே” என்றபடி தானும் அமர்ந்தாள். வீட்டுக்கு சென்று பையையும் கார்டையும் வைத்து விட்டு ஒரு வாய் காப்பியும் போட்டுக் குடித்த  மல்லிகாவும் அவர்களுடன் வந்தமர்ந்தாள்.  

‘‘நேத்து என் கொழுந்தன் பொண்ணுக்கு வலி வந்து நம்ம தங்கசாமி ஆஸ்பத்திரில சேர்த்தினாங்க. நல்லபடியா பேரனை பெத்தெடுத்துட்டா. அதைப் பாக்க போனேன். குழந்தை அவன் அப்பனையே உரிச்சு வெச்சிருக்கு’’ என்றாள் சாந்தி ‘‘பரவாயில்லை செலவில்லாம பிரசவம்’’ என்றாள் மல்லிகா. ‘‘நானும் அப்பிடிதான் நினைச்சேன். டாக்டருக்கு ஆயிர ரூபாய், என்ன குழந்தைன்னு சொல்ல நர்சம்மாக்கு  ஆயிரம் ரூபாய் வாங்கினாங்களாம். ஆயாம்மா தோலாந்துருத்தினு இன்னும் நிறைய கேக்கறாங்கனு கதையா சொல்றாங்க’’ என்றாள் சாந்தி. என்ன தங்கசாமி ஆஸ்பத்திரியிலயா? அது நகராட்சி ஆஸ்பத்திரியாச்சே... அங்க முன்னாடியே ஒரு தரம் இப்பிடி பணம் வாங்கினாங்கனு சனங்க நம்ம கவுன்சிலர் ராசா கிட்டதான் போனாங்க. அவர் கேட்டப்ப யார்கிட்டயும் பணம் வாங்கலன்னு சாதிச்சாங்க. பொறவு அவர் சொல்லி சுத்துபத்துல இருக்கற சனம் சேர்ந்து போய் நியாயம் கேட்டு அது எல்லாருக்கும் தெரியற மாதிரி பொதுவா ஒரு தட்டி எழுதி கட்டினாங்க. பொறவு அவங்க தப்பை ஒத்துகிட்டு அங்க யாருக்கெல்லாம் குழந்தை பொறந்துச்சோ அவங்களுக்கெல்லாம் வாங்கின பணத்தை திருப்பிக் குடுத்தாங்களே’’ என்றாள் தேவிகா

‘‘ஆமாக்கா எனக்கு கூட நினைப்பிருக்கு  என்ற சாந்தி அது மட்டுமா?? இங்க குடி வந்த புதுசுல கவுன்சிலர் யாரு எவருன்னு தெரியாது. அப்ப தண்ணி கனெக்சன் குடுக்கறதுக்கு அதிகாரிக காசு கேட்டாங்க. நாங்களும் குடுத்தோம். என்னை மாதிரியே பலரும் குடுத்தாங்க. எல்லார் வீட்டுக்கும் கனெக்சனும் வந்துச்சி. சரியா ரெண்டு வருசம் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்களும் சந்தோசமா தண்ணி பிடிச்சோம். எங்களுக்கு தந்த கனெக்சன் எதுவுமே ஆபிஸ் ரெகார்டுல பதிவாகுல. அதனால இந்தக் கனெக்சன் எல்லாம் பிடுங்க தீர்மானம் ஆயிருக்குனு கவுன்சிலர் ராசா மூலம் தான்  தெரிஞ்சது. பிறகு எங்களை ஆபிசுக்கு கூட்டிட்டு போயி திருப்பியும் பணம் கட்டி முறையா ரசீது வாங்கி தந்து, தண்ணி கனெக்சன் கட்டாகாம இருக்கவும் அந்த அதிகாரியை மாத்தவும் அவர்தான் உதவி செஞ்சார்’’ என்றாள். ஆமா அதெல்லாம் எப்ப நடந்த விசயம். இப்பதான்  கவுன்சிலரும் இல்லை.. குப்பைத் தொட்டி எலக்சனும் இல்லை.. வீட்டு வரி வேற எச்சு பண்றாங்களாம். யாரைக் கேட்க.. என்ன செய்ய... வரி குறைக்கணும்னா அவங்களை தனியா கவனிக்கணும்னு சொல்றாங்க...என்றாள் மல்லிகா. எங்கம்மா வூடு இருக்கறது வரபட்டிக்காடுன்னு உனக்கே தெரியுமில்லை மல்லிகா.. அங்க கூட எலக்சன் நடக்குதாம்.. நாம இருக்கறது பட்டணம்னு பேரு... இப்பிடி நாறிகிட்டு கிடக்கு... இங்க வரி கட்டற நமக்கு இன்னும் எலக்சன்கிற பேரு கூட காதுல விழுகல’’ என்றாள் தேவிகா எல்லாவற்றையும் அமைதியாக கேட்டபடி உடன்  அமர்ந்திருந்த   ராஜலட்சுமி  “என்னமோ போ இதெல்லாம் நாம பேசித் தீரப்போற விசயமா.. ஒலவம் எப்பிடி போகுதோ நாமளும் அப்படி போக வேண்டியது தான்.. இப்ப  நாம அடுப்படி வேலையைப் பார்க்கலைன்னா நம்ம பொழப்பைப் பார்க்க ஊர் கூடிரும்’’ என்றபடி எழுந்தாள். ‘‘சரிதான்’’ என மற்றவர்களும் எழுந்தனர்.

வேலை முடிந்து வந்த வீராயி அலுப்பில் படுத்து விட்டாள்.  அன்று அதிகமாய் வாகனப் போக்குவரத்து இல்லாததும் இவர்களின் பேச்சு சத்தம் கூட ஓரளவு பெரிதாகவே இருந்ததும் இவள் அவைகளைக் கேட்க உதவியது. ராசாவின் பெயர் அடிபட்டதும் அன்றைய ஆஸ்பத்திரி பிரச்சனையை பொதுப் பிரச்சனை என்று கூறி அவர் தன்னையும் அழைத்ததும், தானும் அவர்களுடன் சென்று அவர்கள் சொன்னதை திருப்பிச் சொன்னதும்  நினைவில் வந்தது. இப்போ குப்பைத் தொட்டி பிரச்சனையும் எல்லாருக்கும் உள்ள பிரச்சனையா தான் தெரியுது. இதை ரோசிக்காம எந்த முண்டையோ நம்மள பேசினதுக்கு நாம செண்பகத்து கூட சண்டை போட்டிருக்கம். ரெண்டு குழந்தையோட அல்லாடற அவ கஷ்டத்தை நாம கூட புரிஞ்சுக்கலைனா... என்ன இருந்தாலும் வயசுல அனுபவத்துல மூத்தவ நானு! நாந்தான இதை ரோசனை செஞ்சிருக்கணும். ராசாவைப் போய்ப் பார்த்தால் இதுக்கொரு விடிவுகாலம் பொறக்கும் என்று  நினைத்தபடியே தூங்கி விட்டாள்.

விடிந்ததும் காப்பி வைத்துக் குடித்தவள் மனதில் எல்லாரும் ஒண்ணா இருந்தாதான் எதையும் சாதிக்க முடியும்னு அவர் சொன்னாரே. இப்ப செண்பகத்து கூட நாம பேசாம இருக்கறது தெரிஞ்சா அவர் எப்பிடி நம்ம சொல்றதை கேப்பார் நு தோன்ற முதல் வேலையாக செண்பகத்தின் வீடு தேடிச் சென்றாள். நான் என்று நினைத்த போது அலைக்கழிந்த மனம் நாம் என்று நினைத்ததும் அமைதியானது. வீராயியின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு செண்பகத்தை சண்டையை மறக்கச் செய்து அவள் முகத்திலும் தொற்றிக் கொண்டது.   சற்று இருள் படிந்திருந்த அந்தக் காலை நேரம் கதிரவன் வரவால் ஒளி பெற்று மனதை குளுமையாக்கியது. பிரிந்தவர் கூடும் மகிழ்வு நட்பிலும் உண்டு என்பதை உணர்த்துவது போல் அந்த வெளிச்சத்தில் செண்பகமும் வீராயியும் மகிழ்வுடன் வேலைக்கு கிளம்பி மாலையில் ராசாவை சந்தித்து பேசும் முடிவுடன்  நடை போட்டனர்.