politics

img

யாருக்கு வாக்கு? - ஒரு குடும்பம் வழிகாட்டுகிறது...

“திருப்பதிக்கு யாரெல்லாம் வறீங்க..” என பாலாஜி கேட்டார். வீட்டிலுள்ளோர் எல்லோரும் நான், நீ என போட்டிபோட்டு கைதூக்கினர். சந்தோஷ் மட்டும் ஒரு கேள்வியை வீசினான். “டாடி! எண்ணைக்குன்னு சொல்லுங்கோ அப்புறம் முடிவு செய்யலாம்.”“எல்லாம் ஏப்ரல் 18 தான். காலையில நாலு மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு தரிசனம் முடிச்சிட்டு இரவே வீடு திரும்பிரலாம்.” பாலாஜி மெதுவாக திட்டத்தை அவிழ்த்துவிட்டார்.“எலக்‌ஷன் நடக்குற நாள் ஓட்டுப் போடாமல் போனால் எப்படி?” சந்தோஷ் மீண்டும் கேட்க, பாலாஜி சூடானார், “ஆமாம், தொரை ஓட்டுப் போட்டாத்தான் நாடு நட்டமா நிக்கப் போகுதாக்கும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை.”“டாடி, ராமாயணத்தில 14 வருஷம் செருப்பே ஆட்சி செய்திருக்கு… இது ஜனநாயக யுகம்… யார் ஆள வேண்டும் யார் ஆளக்கூடாதுன்னு முடிவு செய்வதில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமே! நம்ம வீட்டில எட்டு ஓட்டு இருக்கு அத வேஷ்ட் பண்ண முடியாது…” சந்தோஷ் உறுதியாகச் சொன்னான்.“டேய்! பாலாஜி! என் பேராண்டி சந்தோஷ் கரெக்டாத்தான் சொல்றான், திருப்பதிக்கு இன்னொரு நாள் போலாம்டா… 18ஆம் தேதி ஓட்டு போடுறது முக்கியம்.” தாத்தா குரல் கொடுக்க, சந்தோஷுக்கு பாட்டி, அம்மா, அக்கா, அண்ணன், அத்தை எல்லோரும் ஆதரவு தர… இந்த வாரம் ஓட்டு அடுத்தவாரம் திருப்பதின்னு முடிவாச்சு…“யாருக்குடா ஓட்டு போடலாம் ?” அம்மா கேட்டாள்.“ஓட்டு ரகசியமானது அதெல்லாம் சொல்லக்கூடாது” அப்பா தடா போட்டார்.“சும்மா! நாம பேசிக்கிறதில என்ன தப்பு?” அக்கா கேட்டாள்.“தப்பே இல்லை பேசணும் சத்தமா பேசணும் யாரு ஜெயிக்கணும் யாரு ஜெயிக்கக் கூடாதுன்னு பேசணும்…” என்றார் சந்தோஷ்.“அரசியல் பேசி அப்பாவும் புள்ளையும் சண்டை போட்டுக்காதீங்க… போட்டி போடுறதில யாரு நல்லவங்களோ படிச்சவங்களோ அவங்களுக்கே போட்டாப் போச்சு…” என அத்தை விவாதத்தை முடிக்க நினைத்தாள்.


“அத்தை! அப்படி பார்க்கக் கூடாது!” “அச்சமில்லை அச்சமில்லை” ன்னு ஒரு படம் பாலச்சந்தர் எடுத்தாரே … போனவாரம் கூட அந்த மொக்கச் சேனல்ல போட்டானே… அதுல ராஜேஷ் ரொம்ப நல்லவரா இருப்பாரு ஆனால் தேர்தலில் ஜெயிச்சதுக்கு அப்புறம் தலைகீழாய் மாறிடுவாரு. கடிவாளம் இல்லாத குதிரை தறிகெட்டுத்தான் ஓடும். அதுனால எந்த தனிநபரச் சார்ந்தும் வாக்களிக்காமல் ஏதேனும் கட்சி சார்ந்தவரா இருக்கணும், அந்தக் கட்சி கொள்கை என்னண்ணு பாக்கணும்; அந்த கட்சி தேர்தல் மழையில் முளைத்த காளானா? மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுற கட்சியா? அதுக்கு என்ன கொள்கை இருக்கு? எல்லாவற்றையும் பார்க்கணும்…” சந்தோஷ் படபடென பொரிந்தான்.“கொள்கை புண்ணாக்கு எல்லாம் காந்தி, காமராஜ், அண்ணா, ஜெயபிரகாஷ் நாராயணன் காலத்தோடு போச்சுடா… எப்போ கொள்ளை அடிப்பதில் யாரு குறைவு கூடுதல் என்பதை வேணுன்னா பார்க்க முடியும்..” என தாத்தா பெருமூச்சுவிட்டார்.“தாத்தா! காலம் மாறி போச்சு ஒங்க காலத்தில ரேடியோ பொட்டியே கிராமத்துக்கு ஒண்ணுதான்… சைக்கிளே ஆபிஸ் கடன்ல வாங்கினதுதான்.. இன்னிக்கு அப்படியா உங்களுக்கே ஸ்மார்ட் போன்.. வீட்டில இரண்டு பைக்… அரசியலும் கொள்கையும் அதற்கொப்ப மாறத்தான் செய்யும் இன்னும் கதர் கோவணத்தோட திரிய முடியாதே…”அப்பா களுக் என சிரித்தார்; தாத்தாவ வாரிவிட்டது அவருக்கு செம குஷி.“சரி! சரி! அரசியல் பேச ஆரம்பிச்சாலே பசி எடுக்காதோ… மொதல்ல இடலிய சாப்பிட்டுட்டே பேசுங்க…” என்றார் அம்மா.“டேய்! சந்தோஷ் குழப்பாத யாருக்கு போடனும்னு பளிச்சின்னு சொல்லு…” என்றார் அக்கா சவுந்தர்யா .இட்லியை சாப்பிட்டபடியே பேச்சு தொடர்ந்தது.


“யாருக்கு போட வேண்டும்னு முடிவெடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் யாரு வரக்கூடாதுங்கிறதும்…” என்றான் சந்தோஷ்.“மோடி ஆட்சியில இருக்காரு ஏதாவது நன்மை செஞ்சாரா ஒண்ணுமில்ல கலர் கலரா ரீல் விட்டாரு காது நிறைய பூ சுற்றுனாரு அம்புடுத்தான்…” அண்ணன்  பிரகாஷ் வாயைத் திறந்தான்.“அடே! செல்லா நோட்டுன்னு நம்மள எல்லாம் திணறவிட்ட படுபாவி மோடி வேண்டவே வேண்டாம்டா! சமையல் கேஷ், பேங் சார்ஜஸ், ஜிஎஸ்டி ஒண்ணுவிடாம நம்ம மொட்டை அடிச்ச மோடி..” இப்படி பாட்டி பேசினதும் வீடே அதிர்ந்தது.“நான் எதச் சாப்பிடனும்னு முடிவு பண்ண அவங்க யாருடா?” என கேள்வியை நுழைத்தார் பீப் பிரியாணி பிரியன் பிரகாஷ்.“நாம யாரைக் கட்டிக்கணும் யாரைக் கட்டிக்கக் கூடாதுன்னு சொல்ல… காதலிச்சா வெட்டுவேன் குத்துவேன்னு சொல்ல இவங்க யாரு..” என்றார் காதல் பூ இப்போதுதான் மலர கனவோடு காத்திருக்கும் அக்கா சவுந்தர்யா.“ஸ்மால் இண்டஸ்டீரீஸ் எல்லாம் மூடியாச்சு .. எங்க பார்த்தாலும் வீட்டுக்கு வீடு நம்ம சந்தோஷ் மாதிரி படிச்ச பிள்ளைக்கு வேலை இல்ல… பி.எஸ்.என்.எல்.லில் வேலை செய்யும் நம்ம பிரகாஷுக்கும் அவன மாதிரி ஆள்களுக்கும் எப்போ வேலை பறி போகுன்னு தெரியல.. தூத்துக்குடிய ஸ்டெர்லைட் மூலம் சுடகாடாக்கிறாங்க.. தஞ்சாவூரு பக்கம் மீத்தேன்.. கார்போ ஹைட்ரேட்ன்னு பாழாக்குறாங்க…ரயில்வேயில இன்கம்டாக்ஸ்ல் தமிழ் நாட்டில வடநாட்டுக்காரனுக்கே வேலை…” தாத்தா பழைய காங்கிரஸ்கார்ர் கடகடென கொட்டினார்.



“அதுமட்டுமில்ல தாத்தா… சுப்ரீம் கோர்ட், சிபிஐ, வருமான வரித்துறை, எல்லா நாசாமாயாச்சு … மதவெறியும் சாதிவெறியும் விஷமாய் ஏறிப்போச்சு… நீட்டு வந்து நம்ம கழுத்த நெரிக்குது… யாரையும் வாழவிடாத.. எதையும் பாதுகாக்காத நம்ம சவுக்கிதார் சோர் ஹை…”“இந்துவோ முஸ்லீமோ எல்லோர் முதுகிலேயும் சவுக்காலடிக்கும் மோடி கட்சி வேணாம்டா சாமி!” தாத்தா தொடர்ந்தார்.அமைதியாக இருந்த அப்பா பாலாஜி வெருட்டென்று எழுந்து அடுத்த ரூமுக்கு போனார். போகிற போது, “போங்க… போங்க ஏதாவது கொள்ளை அடிக்கிற குடும்பத்திற்கு பாகிஸ்தான் ஏஜெண்டுக்கு ஓட்டு போட்டுட்டு சிங்கி அடிங்க.. நாசமாய்ப் போங்க…” என வார்த்தைகளை வீசினார்.வீடு சற்று நேரம் அமைதியானது.“பொள்ளாச்சி அக்கிரமத்த பார்த்தீங்களா… பொம்பள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்ல… இந்த வெவஸ்த கெட்ட மோடி பொள்ளாச்சிய பற்றி பேசமாட்டான் ஆன்னா ஊன்னா பாகிஸ்தான் பாகிஸ்தான்னு கூவுறான்.. இவன் வாயிலேயே வடசுடுற ஆளு.. கஜா புயலு, ஓகி புயலு எதுக்கு மோடி எட்டிப் பாக்காட்டாலும் எடப்பாடி அவன் கால்ல விழுந்து கெடக்கிறான்.. அம்மா செத்ததும் மர்மமாயிருக்கு… கொடநாடும் மர்மமாயிருக்கு எல்லாமே மர்ம தேசமாயிடிச்சு வேண்டாம்டா இந்த மோடி எடப்பாடி வகையறா…” இப்படி அம்மா கொந்தளித்ததை யாரும் எதிர்பார்க்கலை.


“சமையல் கட்டு வீடுன்னு சதா அடைஞ்சு கெடக்கிற அம்மாவுக்கே இவ்வளவு தெரிஞ்சிருக்கே..!!” அண்ணன் ஆச்சரியப்பட்டார் .“பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் தெரியும்… சான்ஸ் கிடைச்சா உங்கள மிஞ்சிருவா…” என பாட்டி சர்ட்டிபிகெட் கொடுத்தார்.பிள்ளைகளெல்லாம் உற்சாகமாகக் கைத்தட்ட அம்மா வெட்கத்தோடு “போங்கடா” என்றாள்.“சரி! யாருக்கு போடக்கூடாதுன்னு தெரிஞ்சு போச்சு… யாருக்கு ஓட்டுப் போடனும்னு சொல்லு சந்தோஷு!” அத்தை தூண்ட சந்தோஷ் பேசினான்.“இந்தியா முழுக்க முழுக்க நெலம ஒரே மாதிரி இல்ல… ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒவ்வொரு நிலைமை…. ஆனால் எல்லா இடத்திலேயும் மோடிக்கு எதிர்ப்பலை வீசுது… இடதுசாரிகள் விரல் சுட்டுற ஆளுக்கு போட வேண்டியதுதான்.. நல்லது… தேர்தலுக்குப் பிறகு சரியான மாற்று அமையும்… தமிழ்நாட்டில திமுக கூட்டணிதான் பொருத்தமாயிருக்கும்…குற்றம் குறையில்லாத யாருமில்ல… குணம் நாடி குற்றம் நாடி.. மிகைநாடின்னு வள்ளுவர் சொன்ன மாதிரி பார்த்தா இருப்பதிலேயே சிவப்பு – கருப்பு – நீலக் கூட்டணியே நாட்டுக்கு நல்லது.“வேற சிலரும் நிக்கிறாங்களே..” அத்தையின் சந்தேகம்.


“ஆளுக்கொரு பக்கம் ஓட்டை பிரிச்சா மோடி எடப்பாடி ஜெயிச்சிரலாம்லா அதுதான் அவங்க கணக்கு…” அத்தைக்கு அண்ணன் விளக்கம் சொன்னான்.“அத மாதிரி ஓட்டு போடாமல் இருந்தாலோ நோட்டாவுக்கு போட்டாலோ அது மோடி எடப்பாடிக்கு மறைமுகமாகப் போட்டதாகத்தான் அர்த்தம்.” அக்கா விவரமாகச் சொன்னார்.“நம்ம வீட்ல அப்பா ஓட்டு மோடிக்கு.. மீதி நம்ம ஏழு பேர் ஓட்டும் திமுக கூட்டணிக்கே. அதனாலதான் நைஸா நம்மள திருப்பதிக்கு தள்ளிட்டு போக அவரு பிளான் போட்டாரு..” என சந்தோஷ் சொல்லி முடிக்கும் முன்பே தாத்தாவும் எல்லோரும் கோரஸாகச் சொன்னார்கள்.“சபாஷ்! சரியாச் சொன்னாய் சந்தோஷு..”“நாம எல்லோரும் 18ஆம் தேதி மோடி எடப்பாடி கூட்டணியை மொட்டையடிப்போம். திமுக கூட்டணியை ஜெயிக்க வைப்போம்.. அப்புறம் எலெக்‌ஷனுக்குப் பிறகு திருப்பதி போய் லட்டு சாப்பிடுவோம்” என பிரகாஷ் கூற எல்லோரும் “ஓஹோ… ஓஹோ..” என கோரஸாய் பாடினர்.“அப்பா டென்ஷனாகி நம்ம வீட்டையே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்னு சொல்லிறப்போறாரு சைலண்ட் பிளீஸ் ..” ஸமோடி முதல் பக்தர்கள் எல்லோரும் அப்படித்தானே]ஹா… ஹா.. சிரிப்பொலி வீட்டைப் பிளந்தது.



;