politics

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன. தற்போது இத்தொழில் நசிந்து போன தொழிலாக மாறிவிட்டது. நெசவு வேலை இல்லாததால் இத்தொழிலில் ஈடுபட்ட நெசவாளர்கள், கொத்தனார், சித்தாள், சமையல், மளிகைக்கடை, ஜவுளிக்கடை என பல தொழில்களில் ஈடுபட்டு காலத்தை கழிக்கின்றனர். மிக உயர்ந்த வாழ்க்கை தரத்தை கொண்டிருந்த இம்மக்கள் உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பட்டு நூல் பெங்களூருலிருந்தும் ஜரிகை சூரத்தில் இருந்தும் வருகிறது. மோடி அரசு 18 சதவீதம் ஜரிகைக்கு ஜிஎஸ்டி வரியும் பட்டு நூலுக்கு பின்பு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதித்துபட்டுப்புடவையான பின்பு பட்டுப் புடவைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும்விதிக்கிறது. 18+12+5 கூடுதல் 35சதவீதம் பட்டுப்புடவைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டு கைத்தறி நெசவு தொழிலை நாசம் செய்துவிட்டது.முன்பு கைத்தறிக்கு 22 ரகங்கள் ஒதுக்கப்பட்டு சட்டப் பாதுகாப்பு இருந்தது. பின்பு 11 ரகமாக குறைக்கப்பட்டு அதுவும் காற்றில் பறக்கவிட்டது.


பட்டு கைத்தறி நெசவுக்கு தறி ஒன்றிற்கு 4 நபர்கள் தேவை. தறி ஒட்டுபவர், ஜிகிடா துணையால், தார் சுற்றுபவர், பட்டு இழைத்தல் எனக் குடும்பமே தறியில் வேலை செய்யும். ஒரு பட்டுப்புடவை நெய்ய ஐந்திலிருந்து 7 நாட்கள் தேவைப்படும். தற்போது மெஷின் தறியில் நாள் ஒன்றிற்கு 8 புடவை வீதம் வாரம் 50 புடவைகள் வெளி வருகிறது.பாரம்பரியப் பட்டு நெசவு தொழில் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கையே படுகுழியில் தள்ளிவிட்டது. மோடியின் ஆட்சி பாரம்பரிய தொழில்களை எல்லாம் காவு வாங்கிவிட்டது. தமிழகத்தில் பட்டுக் கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நெசவுத் தொழில் பாதுகாக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கரைவேட்டிக்காரர்கள் கூட்டுறவு சங்கங்களில் புகுந்து பட்டு கூட்டுறவு சங்கங்களை நிர்மூலம் ஆக்கிவிட்டனர்.மோடி, எடப்பாடி ஆட்சியில் பாரம்பரியப் பட்டுக் கைத்தறி நெசவு முடமாக்கப்பட்டு நெசவாளர்களின் வாழ்வு சூறையாடப்பட்டுவிட்டது.


தஞ்சை கே.பக்கிரிசாமி





;