அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு சனிக்கிழமையன்று (பிப்.20) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசாணை 318ன்படி பட்டா வழங்குவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த அரசாணைக்குள் மடம், அறக்கட்டளை, வக்போர்டு, தேவாலய நிலங்களில் குடியிருப்போரையும் இணைக்க வேண்டும், அறநிலையத்துறை இடத்தில் உள்ள கட்டிடங்களை விற்க/வாங்க விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், கோவில்அறங்காவலர் குழுக்களில் பயனாளிகளையும் இணைக்க வேண்டும், அறநிலையத்துறை இடங்களில் நீண்டகாலமாக குடியிருப்போரை வெளியேற்றி சீல் வைக்கும் முறையை கைவிட வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:
98 சதவீத இந்துக்களுக்கு எதிராக பாஜக
மாநாட்டிற்கு தலைமை தாங்கிபேசிய சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமிநடராஜன், “அறநிலையத் துறை நிலத்தை சுமார் 10 லட்சம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிலங்களில் வசிப்போருக்கு நிலம்கிரையம் செய்ய வலியுறுத்தி மக்கள் நடத்திய நீண்ட போராட்டத்திற்கு பிறகேதமிழக அரசு அரசாணை 318ஐ பிறப்பித்தது. இதன்படி 4.77 லட்சம் ஏக்கர்நிலத்தில் 600 ஏக்கர் நிலத்தை மட்டுமேஎடுத்து ஏழைகளுக்கு அரசு கொடுக்கஉள்ளது. 98 சதவீதமான இந்துக்களுக்கு பட்டா வழங்க பாஜக தடையாணை வாங்கி வைத்துள்ளது. அதனை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைய உள்ள அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
கோரிக்கை நிறைவேற்றப்படும்
“லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று நம்புவதாக” குறிப்பிட்ட திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “திமுகதேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இணைத்துக்கொள்வதோடு, அடுத்து ஆட்சி அமைந்ததும், உரியபரிகாரம் தேடித்தருவோம். தற்போதுமேடையில் உள்ள கட்சித் தலைவர் களின் முன்னிலையில் அதனை அறிவிப்போம்” என்றார்.
சொத்துக்களை அபகரிக்க பாஜக முயற்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “தலைமுறை தலைமுறையாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்திற்கு சட்டப்படி அரசே பட்டா தர தயாராக உள்ளபோது, பாஜக தடையாகநிற்கிறது. வழக்கை திரும்பப் பெறும் வரை பாஜக தலைவர்கள் வீட்டை விட்டே வெளியே வரமுடியாத வகையில் போராட்டங்களை நடத்த வேண்டும்” என்றார்.“பாஜக ஆட்சியில் கோவில்களுக் கும், அதன்சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நெடுங்காலமாக கோவில்களை அறநிலையத்துறைதான் நிர்வகித்து வருகிறது. கோவில்கள் வைத்துள்ள4000 கோடி ரூபாய் வைப்புநிதி, சொத்துக்கள், நகைகள் போன்றவற்றை பறிக்க ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் துடிக்கிறது. கோவில்நிலங்களை பயன்படுத்திக் கொண்டு மக்கள்தான் பாதுகாத்து வருகின்றனர். எனவே,குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து, தவணைமுறையில் பணத்தைபெற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கே நிலத்தை சொந்தமாக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.“கோவில்நிலங்களில் குடியிருந்து வாடகை செலுத்தி வருவதற்கு மாறாக, புறம்போக்கு நிலத்தில்குடியேறி இருந்தால் பட்டாபெற்று, பல கோடிகளுக்கு அதிபராகி இருக்கலாம். பாஜக துணையோடு வரும் அதிமுக தேர்தலில் படுதோல்வி அடையும்.புதிதாக அமையும் ஆட்சி கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று நம்புவோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
முறைப்படுத்து அல்லது கிரயமாக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “கடவுளை எதிர்த்து அல்ல, பக்தர்களை பாதுகாக்க மாநாடு நடக்கிறது. கோவில் நிலங்களில் வசிப்போருக்கு வாடகையை உயர்த்தியதால் பணம் கட்டமுடியவில்லை. இதனால் வருவாய் தடைபட்டு உள்ளது. எனவே, வாடகையை முறைப்படுத்த வேண்டும்அல்லது நிலத்தை பயன்படுத்துவோருக்கு கிரையம் செய்ய வேண்டும். இதனை ஆட்சியாளர்கள் கவனத் திற்கு கொண்டு சென்றபிறகும் உறுதியான முடிவு எடுக்காததால், தற்போதுள்ள சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். மக்களின் கோரிக்கை நியாயத்தை உணர்ந்து செயல்படாமல், மத்தியில் உள்ளவர்கள் சொல்வதை செய்யும் கொத்தடிமையாக தமிழக அரசு உள்ளது. இதனை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்” என்றார்.
தேர்தல் ஆதாயத்திற்கு...
“தேர்தல் ஆதாயம் கருதியாவது இந்தப்பிரச்சனையில் தமிழக அரசு தீர்வு காண வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல். திருமாவளவனும், “அறநிலையத்துறை நிலங்களில் வசிப் போருக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்று அக்கட்சியின் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தியும், “கோவில் நிலங்களில் வசிப்போரின் கோரிக்கைசமூக நீதி பேசும் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது” என்று மதிமுக தீர்மானக்குழு உறுப்பினர் அந்திரிதாசும் கூறினர்.
ஆலய நிலங்களை அபகரிக்க முயற்சி
மாநாட்டை நிறைவு செய்து பேசியதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்பொதுச் செயலாளர் பெ.சண்முகம்,“கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருந்தால்தான் பட்டா கேட்க,ஆலைய நுழைவு போராட்டம் நடத்த,அனைத்துசாதியினரையும் அர்ச்சகராக்க கோர முடியும். அறநிலையத் துறை நிலங்களை ஆக்கிரமிக்க ஆதிக்கவாதிகள் முயற்சிக்கிறார்கள். எனவே, ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற மதவெறியர்களுக்கு எதிராக அணிதிரள்வோம். எந்த மதத்திற்கு சொந்தமான நிலமாக இருந்தாலும், அதில் வசிக்கும் மக்களுக்கு சொந்தமாக்க வேண்டும்” என்றார்.திருச்சியில் ஒரு கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டியிருப்பவருக்கு 8.80 கோடி ரூபாய் வாடகை நிர்ணயித்துள்ள குளறுபடியை சுட்டிக் காட்டி, “மக்களுக்கு எதிரான அரசின்முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், கொள்கை முடிவு தலையிட முடியாது என்கிறார்கள். எப்போதாவது மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் அரசாணை கொண்டுவந்தால் உடனடியாக தடை விதிக்கிறார்கள். நீதிபதிகள் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.தீர்மானங்களை முன்மொழிந்து மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள் நெ.இல.சீதரன், ஆர்.ஜெயராமன், எஸ்.ஜெயராமன் ஆகியோர்பேசினர். முன்னதாக அமைப்புக் குழு உறுப்பினர் வ.செல்வம் வரவேற்றார். அமைப்புக்குழு உறுப்பினர் எம்.நடராஜன் நன்றி கூறினார்.