மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்திற்கு எதிராக பினராயி விஜயன் கூறியதாவது, ஆர்.எஸ்.எஸ் திட்டமான இந்தி திணிப்பை தான் அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளார்.அவருடைய இந்த கருத்து பெரும் போராட்டத்திற்கு வழிவகுக்க போகிறது.இந்தி மொழியால் தான் ஒற்றுமையை உருவாக்க முடியும் என அவருடைய கருத்து அபத்தமானதாகும். மொழிக்கு எதிரான அவர்களுடைய கருத்து, தாயைப் போல மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனமாக இது தெரிகிறது என்றார்.
மேலும் எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்தி பேசாததால், தான் இந்தியர் இல்லை என்பதை உணர வேண்டிய அவசியமில்லை.இந்தியா என்பது மொழிகளை அங்கீகரிக்கும் தேசத்தின் ஒரு வடிவம்.நாடும்,நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் மற்ற முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவே இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்கின்றனர் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.