தில்லி
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் இந்திய அளவில் புகழ்பெற்ற குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து அரசியலில் தனக்கென தனி இடத்தை வைத்திருப்பவர். எங்கு சென்றாலும் பாஜவுக்கு எதிராக தனது கடும் வாதங்களை முன்வைத்து விளாசுபவர். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் இன்று தனது கட்டுப்பாட்டையும் அமைதியையும் இழந்து ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார்.
இதற்கு காரணம் கடந்த 2016-ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய், அவரது மாமனாரும் பாலிவுட் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றன. இது தொடர்பாக அமலாக்கதுறை 2017ஆம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக ஐஸ்வர்யாராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது.
அடிக்கடி சம்மன் விவகாரம் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கண்டு கொதித்தெழுந்த ஜெயா பச்சன் இன்று (20.12.2021) மாநிலங்களவையில்,"தான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுள்ளேன். நீங்கள் எங்களை கழுத்தை நெரிக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? யாரை முன்னிறுத்தி விளையாடுகிறீர்கள்? உங்களுக்கு (பாஜக) மோசமான நாட்கள் வரும் என்று சபிக்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார்.
ஜெயா பச்சனின் ஆக்ரோஷமான பேச்சை கேட்டு பாஜக எம்பிக்கள் வாயடைத்து போயுள்ளனர்.
இந்நிலையில் திங்களன்று தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாரானார். சுமார் 5 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.